ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 17, 2025

“ஒளி நிலை” பெறும் மார்க்கத்தைக் கொடுத்தவன் மெய் ஞானி

“ஒளி நிலை” பெறும் மார்க்கத்தைக் கொடுத்தவன் மெய் ஞானி


1.ஒளியான உணர்வை எடுத்து உடலில் செல்களை மாற்றி
2.உயிரைப் போன்றே ஒளியாக மாற்றும் மார்க்கத்தைக் கொடுத்தான் மெய் ஞானி.
 
ஆனால் இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கையாக உடல் இச்சைக்கே கொண்டு செல்கின்றார்கள் இருளின் நிலைகளுக்குத் தான் சிக்க வைக்கின்றார்கள்.
 
இந்த மனிதனுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்ற நிலையை எண்ணவில்லை.
 
அதே சமயத்தில் இந்த உடலின் உணர்வினைப் பெருக்குவதற்கு அதர்வண வேதம் (யாகம் வேள்வி மந்திரங்கள் சொல்தல்) என்று இந்த வாழ்க்கையே சொர்க்கம் என்ற நிலையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ வைத்து விட்டார்கள் பக்தி மார்க்கத்தில் அனைவரையும்.
 
எப்படி…?
 
பிறருடைய தோஷங்கள் சேர்ந்து விட்டால் பிரதோஷம் என்று பிரதோஷத்தை நீக்க சிவன் கோவிலில் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியான உணர்வுகளைச் செயல்படுத்தப்பட்டு அந்தப் பிரசாதத்தை எடுத்து நந்தீஸ்வரன் வாய்க்கு அருகில் கொண்டு சென்றுகாதிலே போய் சிவனிடம் சிபாரிசு செய்யச் சொல்கிறார்கள்.
 
1.என் பையன் சொன்னபடி கேட்கவில்லை
2.கடன்காரர்கள் பணத்தைத் திரும்பத் தராது எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்
3.எல்லோருக்கும் நான் நல்லது தான் செய்தேன். சந்தோசம் தான் படுத்தினேன்
4.ஆனால் என் வீட்டில் கஷ்டமாகவே வந்து கொண்டிருக்கின்றது.
5.நீ ஈஸ்வரனிடம் சொல் என்று இப்படி நம்மை செயல்படுத்தும்படி அஞ்ஞானிகளாக மாற்றி விட்டார்கள்.
6.மெய்ஞானியாக நம்மை வளர்க்கவில்லை… வளரவிடவில்லை…!
 
நன்றாக யோசனை செய்து பாருங்கள்
 
மற்றவருடைய கஷ்டங்களைக் கேட்டோம்… கேட்டறிந்து உதவியும் செய்தோம்.
1.ஆனால் அந்தக் கஷ்டங்கள் நமக்குள் அணுக்களாக விளைந்து விடுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நம்மையும் சங்கடப்பட வைக்கிறது வேதனைப்படச் செய்கின்றது… உடல் நோயாகிறது மன நோயாகிறது.
 
இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் அங்கே ஆலயத்தில் அபிஷேகத் தத்துவங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.
 
தெய்வத்திற்கு அபிஷேகம் நடக்கப்படும் பொழுது பன்னீரைப் போன்ற தெளிந்த மம் பெற வேண்டும் சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும் மலரைப் போன்ற மம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நமது உயிரிலே இது அபிஷேகம் நடக்கிறது…”
 
1.நாம் நுகரும் ஈந்த அருள் உணர்வுகள் உயிருக்குள் பட்ட உடனே நாதங்களாக மோதி
2.உணர்ச்சிகளாக உடல் முழுவதும் படர்ந்து இயக்கும் பொழுது நம் நல்ல குணங்களை இயக்க முடிகின்றது.
3.இந்த உணர்வு நமக்குள் சென்ற உடனே சுவையும் கிடைக்கின்றது நறுமணமும் கிடைக்கின்றது நம் ரத்தங்கள் முழுவதிலும் அது படர்கின்றது.
4.உயிர் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றது.
 
ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எதை வளர்க்க வேண்டும்… உயர்ந்த சக்திகளை எப்படி வளர்க்க வேண்டும்…? மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று தான் கோவிலிலே காட்டுகின்றார்கள்.
 
நாம் அதன்படி இப்பொழுது வணங்குகின்றோமா…? நம்மைத் தூய்மைப்படுத்துகின்றோமா…? உயர்ந்த சக்திகளை எண்ணி எடுத்து வளர்த்துக் கொள்கின்றோமா…?
 
சற்று சிந்தனை செய்து பாருங்கள்.