ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2024

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொள்ள வேண்டிய “சரியான நேரம்”

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொள்ள வேண்டிய “சரியான நேரம்”

 

பல வகையிலும் இம்சைப்பட்டுத் தான் இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் தெரிந்து கொண்டேன் (ஞானகுரு). ஏனென்றால் இது அனுபவம்.

ஒவ்வொரு நேரத்திலும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை எனக்கு உருவாக்கினார் குருநாதர்… சிருஷ்டித்துக் கொடுத்தார்.
1.அந்தத் துன்பங்கள் வரப்படும் பொழுது உன் உடலுக்குள் அது என்ன செய்கின்றது…?
2.பின் விளைவு ஒரு வாரத்திற்குள் உன் உடலில் என்னென்ன வேலைகள் செய்கிறது…?
3.அடுத்து அதை நிவர்த்திப்பதற்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்.

தனித்து அழைத்துச் சென்று எனக்குக் கஷ்டங்களை உண்டு பண்ணி… அந்தக் கஷ்டம் எப்படி வேலை செய்கிறது…? அதை எப்படி மாற்ற வேண்டும்…? என்று தெரிந்து கொண்டு வந்தேன்.

அதே சமயத்தில்… உங்களுக்குக் கஷ்டம் சந்தர்ப்பத்திலே உண்டாகின்றது. அந்தக் கஷ்டத்தை உண்டாக்கக்கூடிய நிலைகளை நிவர்த்தி செய்வதற்கு உடனே கையிலே ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாகக் கொடுக்கின்றோம்.

காரணம்…
1.நாம் எதையுமே மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள் தான்
2.இந்த மனித உடலில் இருந்து நாம் அருள் ஒளியைப் பெருக்குதல் வேண்டும்.
3.இந்த உடலிலிருந்து இன்னொரு சரீரம் பெற்று விடக்கூடாது.
4.அது ஒளிச் சரீரமாகத் தான் இருக்க வேண்டும்.

ஆகவே முடிவாக “அந்த ஒளிச் சரீரம் பெற வேண்டும்” என்ற எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகள் அருள் ஒளியைப் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த உணர்வை நீங்கள் ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது நம்முடைய உணர்வின் எண்ணங்கள் இந்தப் பூமிக்குள் சுழலாது.
1.அடிக்கடி இவ்வாறு எண்ணினோம் என்றால்
2.விண்ணின் சப்தரிஷி மண்டலங்களினுடைய உணர்வுகள் நமக்கு அதிகமாகக் கிடைக்கும்.

இதற்காக வேண்டி மணிக் கணக்கில் உட்கார்ந்து ஜெபமிருந்து… “சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்வேன்” என்ற நாள் கணக்கில் அமர்வது அல்ல.

இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் எப்பொழுது… எது… எதிர் கொண்டு
1.நம்மைக் கடுமையான எண்ணங்கள் கொண்டு தாக்குகின்றதோ அப்பொழுது
2.நாம் எடுத்துக் கொண்ட தியானத்தின் வலுக் கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன் என்ற வலுவைக் கூட்ட வேண்டும்.

காரணம் கோபம் வந்து விட்டால் இப்படி ஆகி விட்டதே…! என்று வேக உணர்வு நம்மை இயக்குகிறது. “அதே உணர்ச்சியைத் தூண்டி” அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உணர்வைக் கூட்டுங்கள்.

ஏனென்றால் காரத்தின் உணர்வு நமக்குள் கோபத்தை உண்டாக்கப்படும் பொழுது
1.ஈஸ்வரா…! என்று இந்த வேகத்தைக் கூட்டுங்கள்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
3.இந்த உணர்ச்சி அந்த உயர்ந்த சக்தியை எடுக்க உதவும்.

மற்றவர் திட்டிய உணர்வுகள் உணர்ச்சியைத் தூண்டிய உடனே துருவ நட்சத்திரத்தின் பால் நம் எண்ணங்களைச் செலுத்தப்படும் பொழுது அதை வேகமாக இழுத்துக் கோபத்தை “டபக்…” என்று அடக்கி உங்களுக்குள் ஞானத்தைச் செயலாக்கும் நிலைகள் வரும்.

எங்கிருந்து அந்தக் கோபத்தை யார் தோற்றுவிக்கின்றார்களோ உங்கள் சொல்லாலே சொல்லும் போது அங்கேயும் அடங்கும். இதை நீங்கள் அனுபவத்திலே தெளிவாகப் பார்க்கலாம்.

ஆகவே மனிதனாக உருப்பெற்ற இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாத நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காக்க உங்கள் எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் வலுக் கூட்டுங்கள்.
2.அதற்கு எம்முடைய இந்த உபதேசத்தின் வாக்கினை நீங்கள் பதிவாக எடுத்துக் கொள்ளுங்கள்.