ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 14, 2024

உயிரணுக்கள் சரீரமாக உருவாக்க “உஷ்ண அலைகள்” அவசியம் தேவை

உயிரணுக்கள் சரீரமாக உருவாக்க “உஷ்ண அலைகள்” அவசியம் தேவை

 

சூரியனிலிருந்து வெளிவரும் ஈஸ்வர சக்தியின் கதிர்ப் பிழம்பினை பூமித்தாய் தன் ஈர்ப்பு சக்தியினால் ஈர்த்துப் பூமியின் உயிரணுக்களாகக் காற்றுடன் கலந்து விடுகிறது.

அந்த உயிரணுக்கள் என்ன செய்கிறது…?

பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள்… ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றவாறு
1.மண்ணின் நிலை… மரம்… செடி… கொடி… நீர் நிலைகள் கழிவுப் பொருட்கள் நிலைக்கு ஏற்றவாறு உஷ்ணக் காற்றலைகளை…
2.நஞ்சான அலைகளையோ அல்லது நறுமணம் கொண்ட அலைகளையோ அந்த உயிரணுக்கள் சுவாசிக்கின்றனவோ
3.அதனையே சுவாசித்துச் சுற்றி வருகின்றன.

எந்த அலைகளை முதலில் இவ் உயிரணு சுவாசிக்கின்றதோ அந்த நச்சு அல்லது நறுமணம் கொண்ட அலைகளையே தொடர்ந்து சுவாசித்து பூமித்தாயைச் சுற்றி வந்து கொண்டே இருக்கும் அவ்வுயிரணு.

உதாரணமாக…
1.முதல் நாள் மாலை வரை பூச்சி புழுக்கள் இல்லாத கடலைச் செடியில்
2.மறுநாள் காலையில் பல கோடிக்கணக்கான புழுக்கள் செடியின் இலைகளை உண்டு அழித்திருப்பதைக் காண்கின்றோம்.

அந்தப் புழுக்கள் எப்படி ஜீவன் பெற்றன…?

மேற்கூறிய காற்றுடன் சுற்றிக் கொண்டே இருக்கும் அந்த உயிரணுக்கள் கடலைச் செடியின் மீது படர்கின்றன.
1.கால நிலைக்கு ஏற்ப பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் செடியின் மீது தாக்கும் பொழுது
2.அச்செடியின் இலையில் உள்ள சத்து கலந்த உஷ்ண அலைகள் வெளிப்படும் பொழுது…
3.இவ்வுயிரணுக்கள் அதைச் சுவாசிக்கும் பொழுது புழுக்களாகச் சரீரம் பெறுகின்றன.

புழுக்களாகச் சரீரம் பெற்ற பின் எந்த மணம்… சத்து… கொண்ட இலையின் உஷ்ண அலைகளைக் கொண்டு சுவாசித்துச் சரீரம் பெற்றதோ… அந்த இலைகளையே அது உணவாக உட்கொள்ளத் தொடங்குகிறது.

இதைப் போலவே எந்தெந்தச் செடி கொடி மரம் முதலியவைகளின் இலைகளில் உள்ள உஷ்ண அலைகளைச் சுவாசித்து… சரீரம் பெறும் உயிரணுக்கள் யாவும் உடல் பெற்ற பின்… அந்தந்தத் தாவர இலைகளையே உணவாக உட்கொள்கின்றன.

பூமித்தாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் மேற்கூறிய உயிரணுக்கள் அசுத்த நீர் அல்லது கழிவுப் பொருளின் மேல் படர்ந்து இருக்கும் பொழுது… பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் அந்த அசுத்தத்தில் படரும் பொழுது
1.அந்த அசுத்த சத்துள்ள ஆவி வெளிப்படும் பொழுது
2.அதை உட்கொண்டு கொசு பூச்சி புழுக்கள் போன்ற சரீரம் பெறுகின்றன.

எந்தச் சுவாச நிலையில் சரீரம் பெற்றதோ அந்தச் சுவாச நிலையிலேயே ஜீவிக்கின்றது… உணவையும் உட்கொள்கின்றது.

எப்படி ஒரு கோழி தான் இடும் முட்டையை அடைகாத்து 21 நாட்களில் குஞ்சு பொரிக்கின்றதோ… அந்த நிலையை இன்றைய விஞ்ஞானத்தில் அதே 21 நாட்களில் கொடுக்கக்கூடிய உஷ்ண சக்தியைக் கருவில் கொடுத்து குஞ்சுகளாக வளர்ச்சி பெற்றுச் சரீரம் பெறச் செய்கின்றனரோ… அதே நிலையில் தான்
1.பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகளைச் சுவாசித்து
2.மேற்கூறிய உயிரணுக்கள் குறுகிய காலத்தில் சரீரம் பெறுகின்றன.

ஒவ்வொரு உயிரினமும் அது அது எடுத்திடும் சுவாச நிலை கொண்டே… அதனுடைய சரீர நிலை பெறுகின்றது. இது போன்று தான்
1.நாம் ஈர்க்கும் சுவாச நிலைக் காற்றுடன் கலந்துள்ள பல கோடி உயிரணுக்கள்
2.நமது சுவாசத்துடன் சென்று நமது உடலில் நிலை கொள்ளுகின்றன.