ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2024

ஆரம்பத்தில் என்னைச் சமாதியாக்க முயற்சித்தார்கள்

ஆரம்பத்தில் என்னைச் சமாதியாக்க முயற்சித்தார்கள்

 

இங்கே எம்மை… (ஞானகுரு) ஆளைக் காணவில்லை என்று சொன்னதும் சாமியம்மா (என் மனைவி) எம்மை தேடிக் கொண்டிருந்தது. நான் பாபநாசம் சென்று விட்டேன் என்று அங்கே சென்று விட்டது. அது மலைக்காடு தண்ணீராக இருக்கின்றது… தனியாகத்தான் சென்றது. அங்கே ஒருவரும் இல்லை என்பதால் அடுத்த பஸ்ஸில் ஏறித் திரும்பிவிட்டது.

ஆக
1.அன்றைக்குச் சரியான நேரத்தில் அந்தம்மா தேடி வந்து எம்மைக் கூட்டிக் கொண்டு வந்ததால் ஆவியாக வந்து எம்மைப் பிடிக்கவில்லை.
2.இல்லையென்றால் இப்பொழுது உங்களிடம் இந்த உபதேசக் கருத்துக்களை நான் பேச முடியாது… நிச்சயமாகப் பேச முடியாது.

காரணம்… ஆரம்பத்தில் நான் பவானியில் (சத்தியத்தின் சக்தி நிலை) இருந்தேன்… பல உண்மைகளை அங்கே அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தேன்.

ஆனால் அவர்களோ எமக்குப் பல பல வகைகளிலும் இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தார்கள். எல்லாம் முடிந்த பிற்பாடு “என்னைச் சமாதியாக்க வேண்டும்” என்று முயற்சித்தார்கள். காரணம்…
1.அவர்கள் தனித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள்.
2.என்னைக் கொன்று விட்டு அவர்கள் தனித்து அதையெல்லாம் அனுபவிக்கலாம் என்று…!

இயற்கையின் உண்மை நிலைகளை எல்லாம் அங்கே தான் வெளி முதலில் உலகத்திற்குத் தெரியப்படுத்தியது. அங்கே தான் சாமியம்மா என்னைத் தேடி வந்தது.

ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சாமியம்மாவிடம்… அங்கே சமாதியாக்கி விடுவார்கள் நீ போ…! என்று சொல்லி இருக்கின்றார். நடந்த நிகழ்ச்சி இது…!

ஏனென்றால் பவானியில் உள்ளவர்களின் திட்டம் இதுதான். அருகிலே மலை ஒன்று இருக்கிறது… அருகிலே இடமும் வாங்கி இருந்தார்கள். அதிலே கட்டடத்தைக் கட்டி விட்டு அங்கேயே என்னைச் சமாதியாக்கி விடலாம் என்று.

இங்கே வந்தார்… திடீரென்று சொர்க்கம் சென்று விட்டார்…! என்று சொல்லி அதை வைத்துச் சம்பாதித்துக் கொள்ளலாம். யாம் கொடுத்த பாட நிலைகள் உலகில் யாருக்கும் சொல்லாது தாங்களே அதை மறைத்துக் கொள்ளலாம் என்று செயல்பட்டார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் அன்று இருந்தார்கள்… ஏனென்றால் குருவை மறந்து விட்டார்கள். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! அங்கே நடந்த சில உண்மைகளை இப்பொழுது தான் உங்களுக்குச் சொல்கின்றேன்.

ஆகையினால்
1.என் மனைவி அங்கே வந்து “அவசியம் நீ என்னுடன் வந்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது…:
2.நான் சிறிது நாள் இங்கே இருந்து விட்டு வருகின்றேன் என்று சொன்னேன்
3.இல்லை இப்போதே… உடனடியாக வரவேண்டும் என்று சொல்லிவிட்டது

அந்த நேரத்தில் நான் இருந்த இடத்திலே அவர்களுடைய செயல்களும் அதற்குத் தகுந்த மாதிரியே இருந்து விட்டது. பவானியில் எம்மைச் சமாதியாக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள்.

யார்…? எஸ்.எஸ்.எம் என்பவர்…! அங்கே ஆரம்பத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் இது எல்லாம் தெரியும் பணம் இருந்தும் கொடுத்த ஞானத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக… ஆசை கொண்டு என்னைக் கொலை செய்யும் அளவிற்குச் சென்று விட்டார்கள்.

இது வரையில் இதை எங்கேயும் வெளிப்படுத்தவில்லை.
1.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம் சந்தர்ப்பங்கள் வரும் என்பதை
2.நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்

அதற்கப்புறம் தான் இங்கே வந்து தபோவனத்தை ஆரம்பித்தது. என்னுடைய மனைவி அப்பொழுது என்னை இழுத்துக் கொண்டு வரவில்லை என்றால் என்னைச் சமாதியாக்கி இருப்பார்கள்.
1.குருநாதர் அந்தம்மாவின் உடலில் வந்து எல்லாவற்றையும் சரி செய்து என்னை இழுத்து வந்தது
2.காரணம் அன்றைக்கு குருநாதர் யார்…? என்பது அவர்களுக்குத் தெரியாது
3.ஆனால் அவருடைய செயலை யாரும் மறைக்க முடியாது
4.அவர் இட்ட கட்டளையைத் தான் செய்ய வேண்டுமே தவிர சுதந்திரம் எனக்கு இல்லை
5.அவர் இட்ட வேலையை நான் (ஞானகுரு) வேலைக்காரனாகச் செய்து கொண்டிருக்கின்றேன்… அவ்வளவுதான்
6.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும்… உடலைக் கோவிலாக மதிக்க வேண்டும் என்று சொன்னார்
7.அந்த அருள் உணர்வைப் பெற செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்
8.ஆக… நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று உங்களிடம் தான் என் வரம் கேட்கின்றோம்
9.அருள் உணர்வுகளை யாம் பாய்ச்சப்படும் பொழுது நீங்கள் அந்த அருளைப் பெருக்கினால் தான் எனக்கும் அந்த அருள் கிடைக்கின்றது
10.நீங்கள் வளர்ந்தால் தான் நான் வளர முடியும்.

அதாவது… விவசாயம் செய்யும் போது நிலத்தில் நல்ல வித்துக்களைப் போட்டு விளையச் செய்தால் மகசூல் எப்படிக் கிடைக்கின்றதோ அந்த வித்து தான் மற்றவர்களுக்குக் கிடைக்கும்.

ஆகையினால் என் மனைவி தேடி வந்து என்னை அழைத்துக் கொண்டது. நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனம் ஆகி… நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து கொண்டு வருகின்றோம்
1.இதே நிலை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான்
2.நாங்கள் இருவரும் அருள் சேவை செய்து கொண்டிருக்கின்றோம்.