ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2024

உதயம்

உதயம்

 

உயிரின் உண்மை நிலை எங்கிருக்கின்றது...? உயிரின் துடிப்பு துடிப்பதற்குச் சுவாச நிலை வேண்டுமப்பா. உயிர் எப்படிச் சுவாச நிலையில் உள்ளதோ அந்தத் தன்மைதான் இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருள்களும்.
1.”நட்ட கல் பேசுமோ.. நாதன் உள் இருக்கையில்...!” என்று படித்திருந்தாலும்
2.அக்கல்லுக்கும் மண்ணிற்கும் உயிர்த் துடிப்பு உள்ளது.

எப்படி மனிதன் சுவாசத்தில் உயிர்த் துடிப்பு உள்ளதோ அதுபோல்தான் மண்ணிற்கும் கல்லிற்கும் மடுவிற்கும் மலைக்கும் பூமியில் இருந்து எடுத்திடும் திரவத் தன்மையில் உள்ள நீர் மற்ற திரவங்களுக்கும் உலோகங்களுக்கும் எல்லா இயற்கைத் தன்மையுள்ள மரம் செடி ஜீவராசிகள் எல்லாவற்றுக்குமே உயிர்த் துடிப்பு உள்ளதப்பா.

அடுப்பு எரிந்து ஆவி செல்லும் பொழுது அந்நிலையிலும் உயிர்த் துடிப்பு உள்ளதப்பா. உயிர்த் துடிப்பு என்பது ஜீவ அணுக்கள்தான்.
1.அவ்வணுக்களின் தன்மையிலே சூரியனின் ஒளியை ஈர்த்து
2.இயற்கைத் தன்மையினால் வந்த எல்லாமே
3.மனிதன் எப்படிச் சுவாச நிலையை இழுத்து விடுகின்றானோ
4.அந்நிலையில்தான் எல்லாமே சுவாச நிலையில் உள்ளதப்பா.

உலோகங்களின் தன்மையெல்லாம் எந்நிலையில் வந்ததப்பா...?

மண்ணில் இருந்து காந்தத்தையும் செம்பு வெள்ளி என்ற பதம் பிரித்தும் நிலக்கரியையும் எப்படி எடுக்கின்றான்..? நிலக்கரிக்கு இவன் சொல்லும் காரணங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலத்துடன் படிந்த (மடிந்த) மரங்கள்தான் நிலக்கரி ஆகிவிட்டது என்று.

அந்த நிலை இல்லையப்பா...!

அந்நிலையில் உள்ள மண்ணின் உயிரணுவின் ஈர்ப்புத் தன்மையினால் அச்சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மண்ணில் தாக்கும் பொழுது அந்நிலையில் உள்ள உயிரணுக்களை அம்மண் ஈர்க்கின்றது.

பல கோடி ஆண்டுகளாக ஈர்த்ததன் விளைவால் நிலக்கரிப் படிவங்கள் அந்நிலையில் உள்ளதப்பா. அப்படிவங்கள் தன்மையில் இயற்கை அப்படியே இருந்து விட்டால் அந்நிலையில் அப்படியே இருந்தால்
1.அந்நிலையில் வளரும் மண் வளங்கள் தாவரங்களின் நிலையில் பெரும் பூரிப்பை அடைந்திருக்கலாம்.
2.அங்கே வளரும் பயிர்கள் பெரும் அமிழ்தமாக இருந்திருக்கும்.

இயற்கையின் தன்மையை உணர்ந்திடாமல் இச்செயற்கை ஆவலின் உந்தலில் மனிதன் வைத்த வினையப்பா... “சுரங்கம் வெட்டுவதெல்லாம்...!”

உன் அறிவிற்கே விடுகின்றேன். இப்பொழுது நிலக்கரி எடுக்கும் இடத்தில் எல்லாம் தாவரங்கள் நிலை அன்று எப்படி இருந்தது...? என்று எண்ணிப்பார்...! நெய்வேலியில் விளைந்த பழங்கள் பலா முந்திரி ருசியின் தன்மை அன்று எப்படி இருந்தது...! இன்று எப்படி உள்ளது...?

சோலைவனத்தை அழிக்கின்றான். பூமியில் உள்ள உலோகத்தை எல்லாம் தோண்டி எடுக்கின்றான்.
1.அவ்வுலோகத்தின் தன்மையிலே மின்சாரம் எடுத்து பூமியைச் சோலையாக்குகின்றானாம்.
2.சுற்றுகின்றான் பார்த்தாயா...... உலகம் போலவே மனிதனும்...!

உலோகத் தன்மையெல்லாம் அந்தந்த இடத்திற்குத் தகுந்த மண் சுவையில் படிவதுதான். தங்கச் சுரங்கம் என்கிறான்.
1.அந்தத் தங்கச் சுரங்கம் உள்ள பூமியில் வளரும் பயிர் அதனுடைய ருசியில்தான் இருந்திடும்.
2.இப்பூமியின் தன்மையிலே இம்மனிதனுக்கு அறிவில் வராத பொக்கிஷங்கள் பல உள்ளன.
3.அப்படிவங்கள் உள்ள நிலையில் தான் அந்நிலையில் வளரும் பயிர்களும் அதனுடைய ருசியும்...! சொல்வது அர்த்தமாகின்றதா...?

மனிதன் சொல்கின்றான் அந்தந்த ஊரில் உள்ள தட்ப வெப்ப நிலை என்று...! அது அல்ல...! இந்த மெய் ஞானப் பாடத்தின் தொடரைச் சிறிதளவு புகட்டிவிட்டால்
1.உன் உதய எண்ணம் அதில் எப்படிச் செல்கின்றது...?
2.அந்நிலையையே ஈர்த்துக் கொள்...! “உதயம்...” கிடைத்து விட்டால் உண்மை நிலை எல்லாம் புரிந்துவிடும்.

ஆகவே தியானம் எடுப்பதெல்லாம் உன்னுள் இருக்கும் அணு உன்னுள் சுற்றிக் கொண்டே இருக்கும் பொழுது உன் நிலையில் கவன ஈர்ப்பு மண்டலத்தின் (புருவ மத்தியில்) தன்மையில் பாய்கிறது.
1.உன் சுவாச நிலையை அங்கே ஒரு நிலைப்படுத்திடும் போது
2.அந்நிலையில் நீ எண்ணும் எண்ணத்திற்கு உதயம் கிடைத்துவிடுகின்றது.
3.உன் வழியில் உண்மை நிலைகள் உணரும் தன்மை உன் உயிரணுவிற்கு
4.அவ்வொளியின் கதிர்கள் ஒளிக்கற்றைகள் அதீதமாகப் பாய்கின்றது.

தியான நிலையின் முறை புரிந்ததா...?

ஒருநிலைப்படுத்தி உன்னுள் இருக்கும் எண்ணத்தில் ஒன்றல்ல இரண்டல்ல உன் பிறப்பிலிருந்து இன்று வரை உன் ஞாபகத்தில் எப்படி வருகின்றது…?

சிறு குழந்தையில் வளர்ந்த நிலையும் படிப்படியாக உனக்குள் வளர்ந்த நிலைகளும் உனக்கு எப்படிப் புரிகின்றதோ… மூளையில் சுற்றி வைத்திருக்கின்றாயோ… அந்நிலைகளை எல்லாம் ஒரு சிறிதளவு சொல்லு பார்க்கலாம்…!

அந்த எண்ணம் உன் எண்ணத்தில் இருப்பதைப் புரிந்து தான் மிக முக்கியமான பாடத்தில் வந்து நிறுத்தி இருக்கின்றேன் “உன் உதயத்திற்கு…”

சுவாச நிலைகள் நாம் இடும் எந்த எண்ண அலைகள்… நாம் வெளிவிடும் சுவாசத்தைக் கொண்டு தான் சிறு குழந்தையில் நீ செய்த ஒரு வேலை உன் ஞாபகத்துக்கு இப்பொழுது வருகிறது.

அவ்வேலை செய்யும் போது நீ விடும் சுவாசம் உன்னைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமான ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அன்று நடந்த நேரம் தேதி இருந்த ஆட்கள் எல்லாம் நினைவுகளும் எப்படி இப்பொழுது நினைவிற்கு வருகிறது…?
1.அன்று நீ விட்ட சுவாச நிலையில் உள்ள அழுத்தத்தில் தங்கி விடுகிறது அந்நிலையெல்லாம்
2.உன்னுள் இருக்கும் அணுவின் சுழற்சியும் நீ விடும் சுவாசத்தில் உன்னுள்ளே நான் சுற்றிக் கொண்டே இருக்கிறது… உன் எண்ண அலைகள்.

நீ நினைக்கிறாய் உன்னைச் சுற்றி இருப்பது இப்பொழுது இருக்கும் பிறவி கொண்டு தான் என்று. இல்லையப்பா… உன் முதல் பிறவியில் நீ வெளியிட்ட எண்ண மூச்சலைகள் எல்லாமே உன்னைச் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

இப்பிறவி மட்டும்தான் இப்பிறவி அணுக்களுடன் கலந்திருப்பதால் இப்பிறவியில் விட்ட சுவாசங்கள் அவ்வணுக்களில் கலந்துள்ளன. உன் நினைவோட்டத்தில் இப்பிறவியில் நடந்ததைத் தெரிந்து கொள்கிறாய்.

1.இந்த ஜெப அலையின் தன்மையில் உன்னைச் சுற்றி உள்ள அணுக்களில்
2.உன் முன் ஜென்மங்களையும் தெரிந்திடலாம்…! பாட நிலை புரிந்ததா…?