ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2024

ஆசைகளை நிறைவேற்றத் தான் ஆண்டவனை எண்ணுகின்றோம்… “அவனுடைய அருளைப் பெற” ஆசைப்படுகின்றோமா…?

ஆசைகளை நிறைவேற்றத் தான் ஆண்டவனை எண்ணுகின்றோம்… “அவனுடைய அருளைப் பெற” ஆசைப்படுகின்றோமா…?

 

இன்றுள்ள உலக நிலை அனைத்திலுமே
1.தன் புகழ் உயர வேண்டும்
2.புகழ் உயரச் செல்வம் வேண்டும்
3.செல்வம் சம்பாதிக்க இவ்வுடல் எனும் கூடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற
4.ஆசை நிலைக்காகத் தான் அநேகம் பேர் பல வழிகளில் ஆண்டவனை வணங்குவதுவே.

ஆண்டவனிடம் தன் ஆசைக்கும் தன் புகழுக்கும் வேண்டக்கூடாது என்பவர்களை எல்லாம் இன்றைய உலகம் “பெரும் பைத்தியமாக” எண்ணுகின்றது.

ஆண்டவன் எங்குள்ளான்…? என்ற கேள்விக்கும் இன்றைய உலகில் அறிந்து பார்க்கும் தன்மை இல்லையப்பா. ஆண்டவனிடம் வேண்டிக் கேட்காவிட்டால் இவ் உடலுக்கு ஆகாரம் வேண்டியதில்லையா…?

ஆண்டவன் தான் பசி என்ற பெரும் பசியை இவ் உடலுக்கு அளித்துள்ளானே. அப்பசியே அடக்க நாம் உண்டு வாழ்வதற்கு அவ்வாண்டவனை வேண்ட வேண்டாமா…? என்றெல்லாம் பல நிலைகளில் எண்ணுகிறார்கள்.
1.இவ்வெண்ணப் பசியை பேராசை கொண்ட பசியாக அலையவிட்டு
2.அதனால் வரும் பல இன்னல்களுக்கு நாம் அடிபணிகிறோம் என்பதை
3.நம் எண்ணப் பசியில் எண்ணிப் பார்த்தால் புரிந்துவிடும்.

இவ்வாத்ம பசியை யாரும் எண்ணுவதில்லை. இவ்வுடல் பசிக்குத் தான் இவ்வுலகமே இன்றுள்ளது இவ்வுடல் பசியினால் தான் வரும் நிலைகள் எல்லாமே நமக்கு நடப்பவை.

இவ் உடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவும் பிற நிலைகளும் நம் ஆத்மாவிற்கு எந்த நிலையில் ஏற்கிறது…? என்று எண்ணி இவ்வுடல் என்னும் பசியை “மனம் எனும் பசியால்” அடக்கி ஆண்டிட முடியுமப்பா.

இவ்வுலகில் உதித்த எல்லோருமே ரிஷிகளைப் போலவும் ஞானிகளைப் போலவும் இவ் உடலுக்கு உணவு உண்ணாமல்… உடல் பசியை அடக்கி ஆளுங்கள் என்று சொல்லவில்லையப்பா.

என் வழியில் இயற்கையில் நம் உடலின் தன்மையைத்தான் நம் உடல் எந்தெந்த நிலையை ஏற்கிறது…? எந்த நிலையில் உண்டு வாழ்ந்திடலாம்…? என்பதுதான் எல்லோரும் அறிந்ததுவே.

அன்ன ஆகாரம் இல்லாமல் வாழ்ந்திடுங்கள். என்று சொல்லவில்லை.
1.இவ்வுடல் என்னும் கூட்டை
2.”எண்ணம் என்ற ஏவலனால்” எந்த நிலைக்கும் வைத்திருக்க முடியுமப்பா.

உண்ணும் உணவிலிருந்து இவ்வுடலுக்கு எப்படிப் பல நிலைகள் கிடைக்கின்றதோ அதே போலத்தான் அவ்வாத்மாவிற்கும் கிடைக்கின்றது.

நாம் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்ந்திடத் தான் வேண்டும் ஆனால் அந்நிலைக்காகப் பேராசை நிலை கொண்டு “தன் தேவைக்கு மேல் சேமித்து வைப்பவன் ஒவ்வொருவனும்… தனக்குத்தானே எதிரியாகின்றான்…”

இன்று இவ்வுலகில் பெருகி உள்ள மக்கள் நிலையில் அன்பும் ஆதரவும் காட்டி வாழும் நிலைமை மறைந்து விட்டது. தன் உடல் பசி ஒன்றுதான் ஓங்கி நிற்கிறது.

நல்ல உபதேசங்களைக் கேட்பதும் நல்லோர் வழி சொல்வதும் நம் ஆத்மாவிற்குச் செய்யும் நற்பணிகளை நாம் இன்று ஏற்று நடக்கவில்லை. நம் எண்ணங்கள் எல்லாம் இவ்வுடல் என்னும் பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆண்டவனை எண்ணுவதாகவே உள்ளது.

தன் எண்ணமும் செயலும் அமைதி கொண்டு தன் ஆத்மாவை அடக்கி ஆள்பவனுக்கு தன் நிலையில் பதட்டத்தை வளர விடாமல்… தான் என்ற எண்ணம் கொள்ளாமல்… நல்லுணர்வுடன் நம் வாழ்க்கையை நாம் அமைதியுடனும் அன்புடனும் நடத்திச் செல்லும் மனப்பக்குவம் பெற்று… நாம் வாழத்தான் “இன்று நாம் செய்யும் ஜெபமும் தியானமும் இவ்வுபதேசச் சொற்களும்…”

1.இவ் உடல் வேறு என் ஆத்மா வேறு
2.இவ்வுடலில் இவ்வாத்மா தங்கி இருப்பதுவே நாம் பெற்ற பாக்கியமாகக் கொண்டு
3.இவ்வுலக நிலையில் இவ்வியற்கையில் கலந்துள்ள உண்மைகளை அறிந்தே மகரிஷிகளின் சக்தி பெற்று வாழ்ந்திட வேண்டும்.

அச்சத்தி நிலை ஒரே நிலையில் தான் உள்ளது. நாம் எந்த நிலை கொண்டு ஏற்கின்றோமோ அந்த நிலைக்குத்தான் அச்சத்தி நிலை நம்முடன் வரும்.

இன்று வீசும் இக்காற்றையே நாம் எண்ணிப் பார்த்தால் நம் நிலைக்கு எல்லாம் விளங்கும்.
1.கொதிக்க வைத்த தண்ணீரை ஆற்றுவதும் இக்காற்றுதான்
2.அனல் கொண்டு எரியும் விறகை எரிய விடுவதும் அக்காற்று தான்.

ஒரே நிலை கொண்டு வீசும் காற்று தான் இவ்வனலையும் எரிக்க உதவுகின்றது. கொதிக்கும் நீரையும் குளிர வைக்கின்றது அச்சக்தி நிலையும் நம் நிலைக்கு அப்படித்தான் வருகிறது.

1.எந்த நிலை கொண்டு நாம் எங்கு செல்கின்றோமோ அந்த நிலை கொண்டு தான் அச்சக்தி நமக்கு உதவி புரிகின்றது
2.நம் எண்ணத்திற்கு உகந்தபடி தான் ஆண்டவனின் சக்தியையும் நாம் பெற முடியும்.

ஆனால் இவ்வுலகமே இவ் எண்ணம் என்ற பசி நிலையைக் கொண்டு தான் இன்று சுற்றி வருகின்றது