ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2024

ஆத்ம சுத்தி செய்வதன் முக்கியத்துவம்

ஆத்ம சுத்தி செய்வதன் முக்கியத்துவம்

 

இராமனைக் கூப்பிட்டு… “நீ காட்டுக்குச் செல்…” உன்னுடைய சகோதரனுக்குப் பட்டம் சூட்ட வேண்டி உன் தந்தை விரும்புகின்றார். உன்னை எப்படிக் காட்டிற்குப் போகச் சொல்வது…? என்று தயங்கிக் கொண்டிருக்கின்றார் நீ காட்டுக்குச் செல்…! என்று கைகேயி சொல்கின்றது.

தந்தை சொல் தட்டாத நிலையில் இராமனும் காட்டுக்குச் செல்கின்றார். காரணம்…
1.தசரதச் சக்கரவர்த்தி அன்று எத்தனை பேரைப் போரில் கொன்றாரோ
2.திட்டமிட்டு அடுத்த நாட்டைத் தான் அபகரிக்க வேண்டும் என்று எத்தனை பேரைக் கொன்றானோ
3.தான் எடுத்துக் கொண்ட எண்ணம் (அந்தச் சக்திகள்) “கைகேயி” பதிவாகி அங்கே இரக்கமற்றுக் கொன்றது.

அப்படிக் கொன்ற உணர்வுகள் இந்த உடலில் விளைந்த பின் என்ன செய்கின்றது…? நல்லது செய்ய முடியவில்லை… நல்லவனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று நினைத்தால் அது முடியவில்லை.

இங்கே இராவணன் சீதாவைச் சிறைப்பிடித்தான் நல்லதைச் செய்ய விடாதபடி உடலின் இச்சை கொண்டு தடுக்கின்றான்.

இங்கே இந்த உணர்வுகள் இயக்கப்படும் பொழுது இவன் உடலுக்குள் அந்த இயக்கம் எப்படி இயங்குகின்றது…?
1.எதை வளர்த்துக் கொண்டோமோ நல்லது இவனால் செய்யவே முடியவில்லை
2.கைகேயிக்குக் கொடுத்த வாக்கின் பிரகாரம் செயல்பட வேண்டி வருகின்றது.

அப்பொழுது தசரதன் வேதனைப்படுகின்றான்.

பிறரை வேதனைப்படுத்திப் போரில் மற்றவரைக் கொன்றான். ஆனால் தனக்குள் வரும்பொழுது நல்லவனுக்குப் பட்டம் சூட்ட முடியவில்லை என்று வேதனைப்படுகின்றான்… வேதனை தாங்காதபடி ஜீவன் பிரிகின்றது.

கண்ணுக்கு முன்னாடி நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகின்றான். ஆனால்
1.உடலுக்குள் இருக்கும் போர் முறை நல்லதைப் பேச விடாதபடி
2.இந்த உணர்வின் தன்மை அவனை இப்படிச் செயல்படுத்த வைத்து விடுகிறது என்பதைக் காட்டுகின்றார்கள்
3.வேதனை உணர்வுகள் இவனை ஒடுக்கி விடுகின்றது.

தாயார் வீட்டுக்கு அனுப்பிய பரதனை மீண்டும் வரச் சொல்லிச் சொல்கின்றார்கள்.

பரதன் வந்து பார்க்கும் பொழுது சாம்ராஜ்யமே சூனியமாகத் தெரிகின்றது தந்தையையும் இராமனையும் காணவில்லை. தந்தையைப் பற்றியும் இராமனைப் பற்றியும் எல்லோரிடம் கேட்கின்றான்… ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை எல்லோரும் சோகமாக இருக்கின்றார்கள்.

கடைசியில் தன் தாயாரிடமே கேட்கின்றான். போர்க்களத்தில் ஜெயிப்பதற்கு நான் தான் காரணமாக இருந்தேன். அதற்கு இரண்டு வரம் கொடுத்தார். அந்த வரத்தைத் தான் நான் கேட்டேன்.

வரப்படி இராமனைக் காட்டிற்குச் செல்லும்படி சொல்லி விட்டார் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று சொன்னேன்… அதற்குள் மனம் தாங்காது இறந்து விட்டார். என்னுடைய குறை இல்லை என்று சொல்கின்றது

பரதன் அப்போது சொல்கிறான்… உன் தாயார் வீட்டிலும் இதே தான் நடந்தது. அதே வழிகளில் தான் இன்று இங்கே வந்திருக்கின்றது.

எந்தக் கோபத்தின் வழியோ அதன் வழி தான் இங்கே நடக்கும் என்ற நிலையை அங்கே காட்டித் தெளிவாக்குகின்றார்கள்
1.அன்றே உன்னைக் கொன்று இருந்தால்
2.எங்களுடைய சாம்ராஜ்யத்திற்கு இந்த நிலை வந்திருக்காது…! என்று பரதன் சொல்கிறான்

அதாவது…
1.எப்பொழுது பிறரை துன்பப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் வருகின்றதோ அதை உடனே… அப்போதே அழித்து விட்டால்
2.நம் உடலில் நோய்களோ மற்ற தீய வினைகளோ தீமைகளோ வராது என்பதைத்தான் அங்கே காட்டுகின்றார்கள்.

பாசத்தால் இருக்கின்றோம்…! நாம் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனை. இந்த உணர்வின் தன்மை உணர்ச்சியான பின் வேதனைப்படும் செயலே வருகின்றது.

இவை எல்லாம் நாம் எடுக்கும் எண்ணங்கள் கொண்டு நடக்க்கூடிய செயல்கள் தான். அதிலிருந்து தப்ப வேண்டும் அல்லவா…!

பத்தாவது நிலை அடையக் கூடிய (தசரதச் சக்கரவர்த்தி) நாம் எந்த வகையில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றோம்.
1.வேதனை என்ற உணர்வும் வரும் போது அந்த விஷம் கலந்து விட்டால்
2.மனிதனல்லாத நிலைக்குத்தான் செல்ல வேண்டி வரும் என்று இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

அதற்குத்தான் அடிக்கடி உங்களை ஆத்ம சுத்தி செய்யும்படி கட்டாயப்படுத்துகின்றோம். தீமை என்று பார்த்தாலே
1.அடுத்த கணம் அது தனக்குள் வளராதபடி
2.மகரிஷியின் உணர்வு கொண்டு ஆரம்பத்திலேயே அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நல்ல குணங்களை அப்பொழுது தான் நம்மால் காக்க முடியும்.