நம்மை நாமே சரியான பாதையில் பக்குவப்படுத்திக் கொள்ளும் ஞான வழி
ஆசையிலிருந்து வருவது தான் பிறப்பும் வளர்ப்பும் வாழ்வும். அவ்ஆசையிலிருந்தே தான் வேதனையும் வருகின்றது. ஆசையின் உந்தலுக்கு நாம் அடிபணியலாகாது.
1.ஆசையில் எவன் ஒருவன் அவ்வாசைக்கே அடிமையாகிடாமல் நிறைவு பெற்று வாழ்கிறானோ
2.அந்த வாழ்க்கை தான் நிறைவு பெற்ற வாழ்க்கை… நிர்மலமான வாழ்க்கை…!
வாழ்க்கையின் முதல் பாகம் என்னும் அப்பிறப்பின் போதே ஆசையினால் தான் அந்த ஆவி அவ்வுயிரணு அத்தாயின் கருவிற்கே வருகின்றது.
அக்கருவின் நிலையில் வளரும் நிலை கொண்டே அக்கருவிற்கு எல்லாச் சுவாச நிலையும் அறிந்து ஆசை நிலையும் உள்ளது. ஆசை நிலையினால் தான் அக்கரு அத்தாயின் வயிற்றிலேயே... அத்தாயின் எண்ணத்தின் மூலமாகத் தன் சுவாச நிலைக்கு உகந்த... தன் ஆசையை அத்தாயின் மூலமாக எடுத்துக் கொள்கிறது.
கருவில் உள்ள நிலையிலேயே அதனால் தன் நிலைக்கு உகந்தபடி அதன் ஆசைக்கு ஏற்ற எல்லா நிலையையும் எடுத்துக் கொள்ள அத்தாயின் சுவாச நிலைக்கும் உந்தப்படுகின்றது.
ஒவ்வொரு பெண்ணிற்கும்
1.தாய்மை நிலை அடைவதற்கு முதலிலும்
2.தாய்மை நிலை அடைந்திருக்கும் பொழுதும்
3.தாயான பின்னும் அப் பெண்ணின் மனநிலை மாறுபட்டு வருகிறது.
4.அப் பெண்ணின் பிறவியில் வந்த எண்ண அலைகளும்
5.தாய்மைப் பேறில் வந்த எண்ண அலைகளும்
6.அத்தாயான பிறகு வரும் எண்ண அலைகளும் மாறுபடுகின்றன.
ஒவ்வொரு தாய்மைப் பேறிலும் சூலுண்ட நிலையில் அத்தாயின் வயிற்றில் உள்ள கருவிற்கு கருவின் எண்ணத்திற்கு தாய் உந்தப்படுவதால்... அது தாயின் சொல் சுவை இவை எல்லாம் மாறுபடுகின்றன.
அக்கருவின் ஆசை நிலையை அக்கரு ஏற்றுக் கொள்வதால் அத் தாயின் நிலைக்கும் சில ஆசை நிலைகள் உந்தப்படுகின்றன.
அக்குழந்தை பிறந்த பிறகு... எப்படி அக்கரு தாய் வயிற்றில் இருக்கும் பொழுது தன் ஆசையைத் தாயின் மூலமாகப் பெற்றுக் கொண்டதோ... அதைப்போல தாய் அப்பிள்ளை பிறந்த பிறகு அக்குழந்தைக்கு எந்த நிலை கொண்டு எந்த எண்ணமுடன் தாய்ப்பால் தந்து வளர்க்கின்றாளோ... அந்த நிலையெல்லாம் அக்குழந்தையின் எண்ணத்திற்கும் ஊட்டப்படுகிறது.
1.தாயின் எண்ண நிலை அக்குழந்தைக்குப் பால் தரும் பொழுது எந்தெந்த நிலையில் செல்கின்றதோ
2.அந்த ஆசை நிலைகளை எல்லாம் அக்குழந்தைக்கும் தானாகவே வளர்கிறது.
சூலுண்ட நிலையிலும் அத்தாயின் எண்ணங்களும் ஆசை நிலைகளும் வேதனை நிலைகளும் அக்கருவிலேயே கருவின் எண்ண நிலையுடன் அத்தாயின் எண்ண நிலைகளும் கலந்து விடுகின்றன.
தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பு இதுதான்…!
தாய் என்பவள் இந்த நிலை கொண்டு தான் பிள்ளைகளின் நிலைக்கு ஒத்துச் செல்வதெல்லாம். தன் சுவாச நிலைக்கு ஏற்ற உடலைத்தான் அவ் உயிரணுவே தான் உதிக்கும் இடமாக வந்து உதிக்கின்றது.
1.தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள ஒற்றுமை நிலை இது ஒன்று தானப்பா.
2.நம் உடலுக்கும் நம் ஆத்மாவிற்கும் உள்ள சொந்தம் போல் தான் இச்சொந்தமும்.
எண்ணம் என்பதின் வேகம் இவ்வுலகில் உள்ள எல்லா வேகங்களுக்கும் மேல் துரிதமான வேகம் என்று முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். நம் எண்ணத்தைப் பிறரின் எண்ணத்தில் மோத விடும் பொழுது பிறரின் நிலையும் மாறுபட்டுச் செயல்படும் தன்மை வலுக்கிறது.
இவ்வெண்ணத்தை வைத்துத்தான் உலக நிலையும்... உயிர் உதிக்கும் நிலையும்... உடலை விட்டு ஆத்மா பிரியும் நிலையும்... எல்லாமே வருகின்றன. இவ்வெண்ணத்தில் நாம் எந்த நிலையில் ஆசைப்படுகிறோமோ அந்த நிலை கொண்டு தான் வேதனையும் மகிழ்ச்சியும் வருகின்றன.
எண்ணத்தின் ஆசையை வளர விடுவதினால் பல வேதனையான நிலைகளை நம் வாழ்க்கை நிலையில் கண்டு வேதனைப்படுகிறோம்.
இவ்வெண்ணத்தினால் தான் எல்லா நிலைகளுமே வருகின்றன என்றேன். இவ்வண்ணத்தை வைத்து ஒவ்வொரு ஆத்மாவும் அவ்வுடலில் இருக்கும் நிலை கொண்டு
1.அவ்வெண்ணத்தை ஓம் என்ற நாதம் கொண்டு ஒரே நிலையில் ஜெபித்து ஆண்டவனின் சக்தியை நம்முள் எடுத்து
2.இவ்வுடல் வேறு அவ்வாத்மா வேறு என்ற நிலையை நாம் கண்கூடாகக் கண்டிடலாம்.
3.நம் ஆத்மாவின் நிலையை நாம் போற்றிப் பாதுகாத்தால் நாம் வாழ்க்கை நிலையில் பல சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டியதில்லை.
நம்மையே நாம் உணராத நிலையில் பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது பிறரின் அன்புக்கும் நம் ஆத்மாவை அடிமையாக்கிக் கொள்கின்றோம். அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசையின் நிலைதான்.
ஆண்டவனையே ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். அவ்ஆண்டவன் நமக்கு எப்படி அன்பு பொழிவான்…?
1.நம்மையே நாம் வெறுக்காமல்
2.நம்முள் ஆதி ஆசையை வளர விட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
3.நம்முள்ளையே சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
4.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
5.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் ஆத்மா அமைதியுற்று அவ்ஆண்டவனின் சக்தியே நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.
நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடல் ஆகாது.
நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆண்டவனா பொறுப்பாளி…?
1.நம்மில் நாம் ஆண்டவனைக் கண்டிட…
2.நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்வது தான்
3.அவ்வாண்டவனின் ஜெபத்திற்கும் ஆண்டவனின் ஆசிக்கும் உகந்தவர்கள் ஆகின்றோம்.