ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 22, 2024

பூமியைத் தவிர மற்ற மண்டலத்தில் மனிதர்கள் வாழும் வாய்ப்பே இல்லை

பூமியைத் தவிர மற்ற மண்டலத்தில் மனிதர்கள் வாழும் வாய்ப்பே இல்லை

 

இப்பூவுலகில் நாம் நம் ஜீவ உடலுடன் நம் ஆத்மா எந்த நிலை கொண்டு சுவாசம் எடுத்ததோ… அந்த நிலை கொண்டெல்லாம் சப்த அலைகள் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளனவோ… அதே நிலை கொண்டு தான் இவ் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் “ஆத்மாவைச் சுற்றிச் சப்த அலைகள் சுற்றிக் கொண்டே உள்ளன…”

உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு எந்த நிலையில் அந்த ஆன்மா சுற்றிக் கொண்டுள்ளது…? என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது.

இந்நிலையை வைத்துப் பலர் பல ரூபங்களிலும் பல வித கதைகளிலும் நம் முன்னோர் வாயிலாகவும் கேட்கப் பெறுகின்றோம்.
1.அறிந்த உண்மையை அறிந்த நிலையில் செப்புவதற்கு இன்று யாரும் இல்லை.
2.அன்றைய பெரியோர்கள் தான் அறிந்து செப்பினார்கள். அந்நிலை நமக்கு எதற்கு…?

நம் உடலை விட்டுச் செல்லும் ஆத்மாவிற்கு சுவாசநிலை உடலுடன் இருந்த பொழுது எந்த நிலை கொண்டிருந்ததோ அந்த நிலையிலே தான் அவ்ஆத்மா சுற்றிக் கொண்டே உள்ளது.

1.இவ்ஆத்மா இந்த மண்டலங்களிலேயே சுற்றிக் கொண்டிருந்து இந்நிலை கொண்டே தான் பிறகொரு ஜீவ உடலும் பெற்று ஜென்மம் எடுக்கின்றதா…?
2.இந்நிலையில் இருந்து பிற மண்டலங்களுக்குச் சென்று ஜீவன் எடுப்பது இல்லையா…? என்ற எண்ணம் உள்ளது.

அச்சக்தியின் அருள் பெற்று எந்த நிலையில் அவ் உயிரணு உருவம் பெற்று… எந்த மண்டலத்தில் சுவாச நிலை கொண்டு ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்ததோ… அந்த நிலை கொண்டே தான் அவ் உயிரணுவின் சுவாச நிலைகள் உள்ளன.

1.உடலுடன் அஜ்ஜீவாத்மா இருக்கும் நிலையும்
2.உடலை விட்டு ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையும்
3.பிறகு ஒவ்வொரு ஜென்மங்கள் எடுத்தும்
4.ஒவ்வொரு நிலைகொண்டும் எத்தனை ஜென்மங்கள் எடுத்து அவ்ஆத்மா வாழ்ந்தாலும்
5.அதன் தாய் சக்தியான எந்தச் சக்தி நிலைபெற்று அவ்உயிரணுவிற்கு சுவாச நிலை கிடைத்ததோ அதே நிலை பெற்று
6.மீண்டும் மீண்டும் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்க முடியும் அவ்வ்யிரணு எனும் ஆத்மா எல்லாமே.

அவ்ஆத்மாவின் சுவாசத்தால் எப்பூமியில் அவ் உயிரணுவிற்கு ஊட்டம் தந்ததோ அந்நிலை கொண்டே தான் அவ் உயிரணு எத்தனை காலமானாலும் சுற்றிச் சுற்றிப் பிறவி எடுத்துக் கொண்டே வாழ்ந்திடும் இந்தப் பேருண்மை நிலையை எந்த நிலை கொண்டும் யாரும் செப்பிட முடிந்திடாதப்பா.

பிற மண்டலத்திற்கு சென்று வாழ்ந்திட இன்று விஞ்ஞானத்தில் பல ரூபங்களைச் செய்து சென்றாலும் இவன் தாய் சக்தி தந்த சுவாச நிலையை மாற்றிப் பிற மண்டலத்தில் எப்படி ஜீவிதம் நடந்திட முடியுமப்பா…?
1.இம்மண்டலத்தில் தோன்றியவர் பிற மண்டலத்தில் பிறந்து உயிர் வாழ்ந்திட முடிந்திடாது
2.காரணம் பிற மண்டலங்களின் உயிர் நிலை இம்மண்டலத்திற்கும் அம் மண்டலத்திற்கும் மாறுபடுகின்றது.

அம்மண்டலத்தின் சுவாச நிலை கொண்டே தான் அங்கு தோன்றிய ஜீவணுக்கள் எல்லாமே ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்திட முடியும்.

அங்கு இருப்பவர் இங்கும் இங்கு இருப்பவர் அங்கும் ஜென்மம் மாறிப் பிறந்தாலும் பிறக்கவும் முடிந்திடாது… வாழ்ந்திடவும் முடிந்திடாது,

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தாய் என்பவள் யார் என்று இப்பொழுது புரிகிறதா…? நம் சுவாச நிலைக்கு உயிர் தந்த அச்சக்தித் தாய்தான் நம் முதல் தாயப்பா.

பிற மண்டலங்களில் வாழ்ந்து… பிற மண்டலங்களுக்குச் சென்று… அந்நிலையில் இருக்கும் உண்மையைக் கண்டறிய “இச்செயற்கை நிலை எதற்கப்பா…?”

பிற மண்டலங்களின் நிலையை அறிய
1.நம் சுவாச நிலை அளித்த அச்சக்தித் தாயின் ஜெபத்தை எண்ணி
2.நம் உயிரணுவின் உண்மை நிலையை அறிந்து
3.நாம் நம்முள் இருக்கும் அவ்ஈஸ்வர சக்தியை எண்ணி
4.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று நாம் ஜெபிக்கும் பொழுது
5.அவ்ஆண்டவனின் ரூபத்தில் நமக்குப் பல உண்மைகளைப் புகட்டிட அப்பெரியோர்கள் உதவிக்கு வருவார்கள்.

அந்நிலையில் நாம் நம் ஜெப நிலையிலேயே எல்லா மண்டலங்களின் நிலையையும் அறிந்து இம்மண்டலத்தில் வாழ்ந்திடலாம். எம்மண்டலத்திற்கும் சென்று வரும் பாக்கியம் பெற்ற நிலை எய்துபவர்கள் எல்லாம் யார் என்று இப்பொழுது புரிகிறதா…?

இருந்த நிலையிலேயே ஜெப நிலையில் அமர்ந்து எல்லா மண்டலங்களின் தன்மையையும் தன் நிலைக்கு உணர்ந்து கொண்ட பல கோடிச் சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள்… இப்படித் தெய்வத்தன்மை வாய்ந்த நம்மில் பல முன்னோர்கள் சூட்சும உலகம் என்னும் உலகத்தில் “அன்றும்… இன்றும்…” வாழ்ந்து வருகிறார்கள்.

பேராசை என்னும் நிலையில்தான் இன்று கண்டிடும் விஞ்ஞானம் எல்லாம்
1.அங்கிருக்கும் பொக்கிஷத்தை எடுத்து வந்து இன்று தன் நாடு வாழ தன் நிலை உயர
2.தன் நிலையை… சக்தி நிலையைச் சிதறவிட்டு வாழ்ந்து என்ன பயன்…?
3.அவ்ஆத்மாவின் நிலைக்கு அழியாக் கஷ்டத்தைத் தான் அளித்து வாழ்கிறார்கள் இன்றைய விஞ்ஞானம் என்னும் ரூபத்தில்.

தெய்வீகத் தன்மையில் தேவனின் சக்தியை ஜெயித்து வாழ்ந்திட “ஜெபம் (தியானம்) ஒன்றுதான் இஜென்மத்தில் உள்ளது” என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டுமப்பா.