ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 4, 2024

மனித வாழ்க்கையில் செல்வம் நம்மைக் காக்காது… “அருள் செல்வமே நம்மைக் காக்கும்”

மனித வாழ்க்கையில் செல்வம் நம்மைக் காக்காது… “அருள் செல்வமே நம்மைக் காக்கும்”

 

கொசுக்களாகி மனிதனின் இரத்தத்தைக் குடித்துக் கருமுட்டைகளாகி மனிதனாகப் பிறவிக்கு வந்தால் அந்தக் குழந்தைகளின் உணர்வுகளைப் பார்த்தோம் என்றால் மிகவும் மோசமாக இருக்கும்.

இப்படி எத்தனையோ வகையான உயிரணுக்களின் தோற்றத்திலிருந்து சேர்த்துக் கொண்ட நிலையில் இருந்து உரு மாறிக்கொண்டே இருக்கின்றது.

பன்றியாக இருந்து நஞ்சினை நீக்கி மனிதனாக உருவாக்கிய பின்
1.நஞ்சை நீக்கும் சக்தி பெற்ற நிலையில்
2.இந்த மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை துடைக்கத் தவறினால்
3.மீண்டும் பிறவிக் கடனில் தான் உழல்வோம்.

இன்று மனிதனாக இருக்கின்றோம் சமாளிக்கின்றோம்… செல்வத்தையும் தேடி வைத்திருக்கின்றோம். இருந்தாலும் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இலட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்தால் உடனே இதயத்தை மாற்றிக் கொடுத்து விடுகின்றார்கள் சிறிது காலத்திற்கு வாழும்படி செய்கின்றார்கள். பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்…?

என்னுடைய (ஞானகுரு) பற்கள் விழுந்துவிட்டது. பல் செட்டைக் கட்டி நிஜப்பல் இருக்கின்ற மாதிரி நான் சாப்பிடுகின்றேன்… விஞ்ஞான அறிவு கொண்டு செய்து கொடுத்து விடுகின்றார்கள்.

பல் இல்லாதவர்கள் சரியாக மென்று சாப்பிடவில்லை என்றால் சத்தை சரி வர நல்ல இரத்தமாக மாற்ற முடியாது. அதனால் உடல் பலவீனம் அடைந்து விடும்.

ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்த உபாயங்ககளைக் கண்டுபிடித்துக் கொண்டு வருகின்றார்கள். ஆனால்
1.இப்போது இந்த மெய்ஞான அறிவைத் தெரிந்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறத் தவறினால்
2.வரும் தீமைகளை அதை வைத்துத் துடைக்கத் தவறினால் நோயாகி
3.மீண்டும் கீழான சரீரங்களுக்குத் தான் செல்ல வேண்டி வரும்.

அதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் அடிக்கடி தியானப் பயிற்சியை உங்களுக்குப் பல வகைகளிலும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

பௌர்ணமி தியானங்களை அமைத்து அந்தத் தியானத்தின் வலுக் கொண்டு குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சூட்சும சரீரத்தைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் போது உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நாம் தியானித்த உணர்வுகள் அங்கே அதற்குள் தொக்கி நிற்கின்றது
2.அதை வைத்து அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

அதே சமயத்தில் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோரும் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது அதிலே விளைந்த உணர்வுகள் எளிதில் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றார்கள்… வரக்கூடிய நோயிலிருந்து விடுபடவும் முடிகின்றது… வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. எப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணையும் பருவம் பெறுகின்றனர்.

விஞ்ஞானிகள் இன்றைக்கு எத்தனையோ புதுப்புது உயிரணுக்களை உருவாக்குகின்றார்கள் உடல்களை மாற்றுகின்றார்கள்.

ஆனால் இறந்த பின் தன் உயிரான்மாவைப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய முடியுமா…? என்றால் அது முடிவதில்லை. கண்டுபிடித்த உணர்வின் தன்மை கொண்டு தன் சீடனுக்குக் கற்பித்திருந்தால் இறந்த பின் சீடனின் உடலுக்குள் தான் போக முடியும். தான் கற்ற ஞானத்தை வேண்டுமென்றால் அவனுக்குப் போதிக்கலாம்.

ஆனால் சந்தர்ப்பத்தில் வேதனையும் துன்பங்களும் வந்தால் ஞானிகள் காட்டிய முறைப்படி காலை துருவ தியானத்தினை எடுத்துக் கொண்ட பின்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தூய்மைப்படுத்திக் கொண்டு
2.நோயற்றவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த உணர்வைப் பதிவு செய்து
3.நோய் நீங்கி நீங்கள் நன்றாக வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கும் நம் வாக்கு நல்லதாகின்றது
4.நமக்குள்ளும் தீமை புகாது தடுத்துக் கொள்கின்றோம்.

இப்பொழுது எதன் மீது அதிகமாகப் பற்று கொள்கின்றோம்…? நோயை நீக்கும் அருள் ஞானிகள் உணர்வைப் பற்று கொள்கின்றோம். நோயின் உணர்வைப் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.

பற்று… பற்றற்று இரு…!

ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதன் மீது நாம் பற்று கொள்ளலாகாது. அதைப் பற்றற்றதாக ஆக்க வேண்டும் என்றால் அடுத்த நிமிடமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்த உணர்வினை நமக்குள் எடுத்து அதைப் பற்றுடன் பற்றிட வேண்டும்.

வேதனை உணர்வுகள் நம்மைப் பற்றிடாது பற்றற்றதாக மாற்றி… மற்றவர்களுக்கும் தீமையை நீக்கும் உணர்வுகளை இயக்கும் சக்தியாக அவர்களை அதைப் பற்ற வைத்து… பலவீனத்திலிருந்து மீட்டும் சக்தியாகக் கொண்டு வர வேண்டும். இதை வழிப்படுத்தி நாம் நடக்க வேண்டும்.

1.இந்த மனித வாழ்க்கையில் நம்மைச் செல்வம் காக்காது… அருள் செல்வமே நம்மைக் காக்கும்.
2.எத்தனையோ செல்வத்தை வைத்திருப்பவர்கள்… அவர்கள் குடும்பம் எல்லாம் துயரத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுங்கள்.