ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2024

“பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்

“பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்

 

அருள் ஞானிகள் உணர்வைப் பருகுவதற்குத் தான் ஆலயங்களில் விநாயகரை வைத்துக் காட்டினார்கள்.

உடலில் பட்ட அழுக்கினைத் துடைக்க நீரை ஊற்றிக் குளிக்கின்றோம். அதே சமயத்தில்
1.ஆன்மாவிலே பட்ட அழுக்கினைத் துடைப்பதற்கு “விண்ணை நோக்கி ஏகி”
2.உயர்ந்த சக்திகளை எடுக்கப் பழக்கினான் அன்று ஞானி.

அதற்குப்பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று “எந்த நேரம் நினைத்தாலும்” அந்தச் சக்திகள் கிடைக்கின்றது.

ஆலயத்தில் தீப ஆராதனை காட்டப்படும் பொழுதெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற நாங்கள் வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள். அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி அந்தச் சிலையை உற்றுப் பாருங்கள்.

அந்தச் சிலையில் காட்டப்பட்ட குணங்களை… காவியங்களாகத் தீட்டிய அந்த நற்குணங்கள் நாங்கள் பெற வேண்டும்… இதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எங்குங்கள்.

தெய்வத்தின் மேல் போட்டிருக்கும் மலரின் மணம் நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் அந்த முழுவதும் நறுமணங்கள் படர வேண்டும். என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த நறுமணங்கள் படர்ந்து அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும்.

கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும். என் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெற வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் எல்லாம் தெய்வ நிலைகள் பெற வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் அங்கே ஒற்றுமை ஏற்பட வேண்டும் அவர்கள் தொழில் வளர வேண்டும் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.
1.பிறரை நாம் வாழ வைக்க இவ்வாறு எண்ணும் பொழுது
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் வாழ்கின்றன.
3.அப்போது தீமையை அறிவிக்கும் உணர்வுகள் ஒடுங்குகின்றது… அந்தத் தீமையை அறிந்ததோடு அதை நிறுத்திடல் வேண்டும்.

ஆக “பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்.

குழம்பு வைக்கப்படும் பொழுது காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு என்று பல நிலைகளை சேர்த்துத் தான் அதைச் சுவை மிக்கதாக உருவாக்கி உட்கொண்டு மகிழ்கின்றோம்.

இதைப் போன்றே மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். இது தான் ஆலயம்… நம் உடலே ஆலயம்.

நமக்குள் இருக்கும் நன்மை செய்விக்கும் நற்குணங்கள்… காலத்தால் நல்லதைக் காப்பதற்காக நாம் கேட்டறிந்த உணர்வால் தீமைகள் பல சேர்ந்து
1.நல்ல தெய்வமாக இருந்த நிலைகளை மாறுபடச் செய்யாது
2.நல்ல குணங்கள் இருண்டு விடாது… நஞ்சுக்குள் சிக்காது அதைத் துடைக்கும் மார்க்கமாகத்தான் ஆலயங்களிலே காட்டப்பட்டது.

நம் உடலை ஆலயமாக்கி
1.அந்த ஆலயத்திற்குள் ஈசனாக இருந்து உயிர் இயக்கும் நிலைகளையும்
2.எண்ணியதைப் பிரம்மமாக உயிர் படைத்துக் கொண்டிருப்பதையும்
3.அதைச் சிவமாக உருவாக்கி சிவத்திற்குள் சக்தியாக நம்மை இயக்கிக் கொண்டிருப்பதையும்
4.நம் உயிரை நாம் மதித்து நடக்க வேண்டும்.

காரணம்… நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உயிரே. நாம் எண்ணியதை இயக்கும் ஈசனாக இருப்பதும் உயிரே.

தீமைகளைக் கேட்டறிந்தால் தீமைகள் நுகரா வண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து தீமைகளை அப்புறப்படுத்திப் பழக வேண்டும். அதற்குத்தான் ஆலயம்.
1.ஆலயத்திற்குச் சென்றால் “பிறர் வாழ வேண்டும்” என்று எண்ணுங்கள்.
2.கீதையிலே இதைத்தான் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைக் காட்டினார்கள்.

ஞானிகள் உணர்வுகள் அனைத்தும் நமக்கு முன் இங்கே படர்ந்துள்ளது அவர்கள் சொன்ன முறைப்படி நாம் சென்றால் அவர்கள் வாழும் எல்லையை அடைகின்றோம்.