ஈஸ்வரபட்டரின் அருள் வாக்குகள்
அகத்தினை அன்பு கொண்டால்
ஜெகத்தினை வென்று வாழ்ந்திடலாம்
தங்க வந்த கூட்டினில்
தரணி ஆண்ட வாழ்க்கையில்
தரணிதனில் நிலைத்திட
தவமிருந்தே வாழ்ந்திடுவோம்
ஆண்டவன் என்ற ஆத்மாவை
அடக்கி ஆளப் பார்க்காமல்
ஆத்ம லிங்க தேவனை
அறிந்தே நாம் வாழ்ந்திடுவோம்
பகவான் படைத்த படைப்பே நாம்
பகவான் எங்கு உள்ளான் என்று
பகுத்தறியும் ஆற்றலைத் தான்
பகவான் அருளிலே பெற்றுள்ளோமே
உடல் அழுக்கைப் போக்கத் தண்ணீர்
உள்ள அழுக்கை போக்க எந்நீர்...?
திருமானின் எண்ணத்தை எண்ணுவீர்
திருநீறு அணிந்தே
ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாக
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்
நம்மை ஈன்றவர்… படைத்தவர் யார்…?
நம் முற்பிறவி… இப்பிறவி… மறுபிறவியில் யார்…?
நம்மில் பலரும் உள்ள பொழுது
நான் என்பது யார்…?
ஒன்றில்லாமல் ஒன்றில்லை
ஒன்றில் இருந்து ஒன்றாக
ஓங்கி நிற்கும் சக்தியிலே
ஒன்றியே நாம் வாழ்ந்திடுவோம்
பல ஆசை நிலைகளிலே
பல நிலை அடைவதற்கே
பயம் என்ற பேய்க்கு நாம்
பயந்து வாழ்வது எதற்காக…?
நிலையில்லா வாழ்வினிலே
நித்திய நிலை பெற்றிடவே
நிலையான அன்பைக் காட்டி
நிலை பெற்று வாழ்ந்திடுவோம்
எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்
ஏற்றமும் தாழ்வும் அமைவதுவே
எண்ணும் எண்ணக் கூட்டினையே
எண்ணும் எண்ண வடிவினிலே
எண்ணப் பேயாய் அலையவிட்டும்
எண்ணத் தெய்வமாய் எண்ணுவதும் எண்ணமே தான்
வஞ்சனை என்ற உலகமென்று
வஞ்சனை என்று எண்ணிப் பார்த்தால்
வஞ்சனை வாழ்வே நமக்குக் கிட்டும்
வஞ்சம் கொண்டே வாழ்ந்திட்டால்…!
வாழ்க்கைப் பாதை வழியினிலே
வழியறிந்து செல்வதுவே
வழியனுப்பி வைத்தவனுக்கு
வழங்கிடும் வாழ்த்ததுவே
வண்டி என்ற கூடிருக்க
வரும் மழைக்குக் குடை எதற்கு
வழங்கியவன் அவன் இருக்க
வரும் வினையை எண்ணலாமோ…?
வல்லினம் மெல்லினம் கொண்டு பிறக்கவில்லை
வரும் வினைக்கு அஞ்சாதே…!
வரும் இடியும் மழையும்
வரும் காற்றும் மணமும்
வழங்கியவன் அவன்தானே
வழங்கியவன் அவனிருக்க
வரும் வினையை எண்ணலாமோ
வழியறிந்தே நீ வாழ்ந்திட்டால்…!