“தானாக உணர்ந்து செயல்படும் நிலை” இன்றுள்ள மனிதர்களுக்குக் குறைவுபட்டு விட்டது
அறியாதவர்க்கு அரிய எண்ணத்துடனே அறிந்து வாழ வேண்டும் என்ற நிலையை எண்ணிடாமலே வாழ்கின்றார்கள். அறிந்தவர்களோ அந்தமும் ஆதியும் அறிய வேண்டும் என்ற அதிக ஆசையுடன் வாழ்கிறார்கள்.
கற்றவர் கல்லாதவர் அறிந்தவர் அறியாதவர் ஏழை செல்வந்தன் இப்படிப் பல தரப்புள்ள மேடு பள்ளம் கொண்ட உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொண்டு இவ்வுலகமே சுழல்கின்றது.
கற்றவருக்குத் தான் கற்ற வித்தையும் கர்வமும் கல்லாதவருக்குத் தான் கல்லாத நிலை கொண்டு தாழ்வு எண்ணமும் தன் மனதிலுள்ளேயே உலக மக்கள் ஏற்றம் தாழ்வு என்ற இரு நிலை படைத்த மாய ரூபத்தையே மனதினில் எல்லாம் கலக்கவிட்டு வாழ்கின்றார்கள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற உண்மையைத் திருவள்ளுவர் ஆதி காலத்திலேயே உணர்த்தி உள்ளார். இன்றுள்ள நம் மக்களின் மனதில் ஏட்டுப் படிப்பின் எண்ணத்துடன் தான் எண்ணி வாழ்கின்றார்கள்.
ஏட்டுப் படிப்பிற்கு பதவி பணம் என்ற போர்வையைப் போர்த்தி உள்ளதால் அந்நிலைக்காக ஏங்குபவர் பலர் உள்ளனர். படிப்பும் பட்டமும் இன்று அளித்த மாய ரூபங்கள் தான் இவை.
1.தன் எண்ணத்தினால் தன் ஜெபத்தினால் தன்னுள்ளேயே உலக உண்மைகளை ஈர்க்கும் சக்தியைப் பெற்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு
2.எந்தப் பள்ளியில் படித்து யாரால் பட்டமளிக்கப்பட்டதப்பா...?
3.அன்று கம்பர் எழுதிய கவிதை எல்லாம் எந்தப் பட்டிமன்றத்தில் ஏற்று படிக்கப்பட்டதப்பா…?
கம்பரும் திருவள்ளுவரும் வியாசரும் வால்மீகியும் சேக்ஸ்பியரும் இப்படி எண்ணிலடங்காப் பல ஞானிகளும் ரிஷிகளும் எழுதிய நூல்கள் எல்லாம் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று எழுதினார்களப்பா…?
அன்று நமக்குத் தம் சக்தியை உபயோகப்படுத்தி உன்னத நூல்களை அவர்கள் அளித்த நிலை கொண்டு தான் இன்றும் பல போதனா மொழிகளில் பள்ளியிலும் கல்லூரியிலும் சொல்லி வருகிறார்கள்.
அப்படிப்பைக் குழந்தைகள் நிலைக்கு இன்றுள்ள உபாத்தியாயார்கள் மதிப்பெண்ணும் தருகின்றார்கள். இன்றுள்ள இக்கலியுகமே தானாக உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றி வருகிறது.
உலகில் ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய சக்தி நிலை தோன்றிக் கொண்டே வரும் பொழுது இம்மமனிதனின் எண்ணத்தில் மட்டும்தான்… தான் உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றிக் கொண்டு பெரும் பேராசையின் நிலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு வாழுகின்றான் இன்றுள்ள மனிதன்.
1.மனிதர்களின் மனம் எல்லாம் ஏட்டுப் படிப்புடனும்
2.பிறர் சொல்லிய உண்மைகளை ஆராய்ந்து பார்க்கும் நிலையுடனும்
3.அந்த நிலையைக் கொண்டு விவாத நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.
4.இன்று மனிதர்கள் உயிர் வாழும் நிலையே செயற்கையினால் தான் நடந்து வருகின்றது.
ஏன் அச்சூரிய சக்தியின் நிலை ஒரே நிலையில் உள்ள பொழுது நம் உணர்வின் நிலையும் உயிரணுவின் நிலையும் மாறுபட்டுள்ளன என்று மனநிலையில் நீங்கள் எல்லோரும் எண்ணிடலாம்.
நாம் உண்ணும் உணவிலும் தாவரங்களிலும் அதனதன் தன்மை கொண்டு அவைகள் உற்பத்தியாக இன்றுள்ள பூமி நிலை இல்லையப்பா.
இன்று இப்பூமியில் வீசிடும் காற்றே பெரும் விஷத்துடன் வீசும் போது
1.அந்தத் தாவரங்கள் எந்த நிலை கொண்டு வளருமப்பா…?
2.தாவரங்கள் மட்டுமல்ல இன்று வளரும் குழந்தைகளின் நிலையும் எப்படியப்பா இருந்திடும்…?
விஷமான காற்றைச் சுவாசிக்கும் மனிதனின் மனநிலையும்… தாவர நிலைக்கும்… இன்றைய மனிதர்களின் ஆராய்ச்சியில் வந்த “பல வகை மருந்துகளின் நிலை கொண்டு தான்” மனிதனும் தாவரங்களும் வாழ்கின்றதப்பா.
பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் எந்த நிலை கொண்டு வீசுகின்றதோ அந்த நிலை கொண்டு தான் அச்சூரியனின் ஒளி காற்றில் பட்டவுடன் தாவரங்களின் தன்மையும் வளரும் நிலையில் உள்ளது.
இக்காற்றையே நம் செயற்கைக்காக நம்முடைய எண்ணத்தில் எண்ணும் சுகபோகங்களுக்காக நாம் உற்பத்தி செய்திடும் பல செயற்கையின் தன்மையினால் இப்பூமியிலிருந்து எடுத்த பல உன்னதத் திரவியங்களை (பெட்ரோல்) நம் செயற்கைக்காக உபயோகப்படுத்தி… அதை விஷமாக இக்காற்றிலே கலக்க விட்டு அவ்விஷத்தன்மையுள்ள காற்றையே இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் சுவாசிக்கும் நிலையினால் தான்… இன்றைய மனிதர்களின் நிலையும் மற்ற ஜீவராசிகளின் நிலையும் உள்ளதப்பா.
இப்பூமியில் விளைந்திடும் பலவித நறுமணங்கள் கொண்ட நல் மணத்தை நம் சுவாச நிலைக்கு நாம் ஏற்றுக் கொள்ளும் நிலையை நாம் மாற்றிக் கொண்டு வாழ்கின்றோம்.
பல வகைத் தாவரங்களிலிருந்து நம் உடலுக்கும் மனதிற்கும் எந்தெந்த நிலையில் அவை நன்மை அளிக்கின்றன…? அதனால் நம் உடலுக்கும் எண்ணத்திற்கும் எந்த நிலை பெறுகிறது…? என்று உணர்ந்து
1.இன்று பல தாவரங்களை மரம் செடி கொடிகளை நம் தேவைக்காக அழித்து வாழ்ந்திடும் நாம் ஒன்றை அழிக்கும் பொழுது
2.இரண்டை உற்பத்தி செய்யும் நிலைக்கு ஏனப்பா நாம் வரக்கூடாது…?
தாவரங்களினால் தான் இக்காற்றி கலந்துள்ள விஷத் தன்மையை ஈர்த்து இக்காற்றைச் சுத்தமாக்கும் நிலை உள்ளதப்பா. இத்தத் தாவரங்களின் உற்பத்தியை உணர்ந்து ஒவ்வொரு மனிதரும் இச்செயற்கையின் சொரூபத்திற்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாமல் இயற்கையைப் போற்றி வணங்கிடுங்களப்பா.
இயற்கையின் உன்னத அழகைக் கண்டு சுவாசித்து மகிழ்ந்தாலே நம் உயிரணுவிற்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றதப்பா.
ஒவ்வொரு மனிதரும் தன் நிலைக்கும் அச்சக்தியின் நிலை உண்டு. தன்னாலும் இயற்கையின் உண்மையை உணர்ந்து நடந்திட முடியும். தானும் ஒரு திருவள்ளுவராகவும் வான்மீகியாகவும் இயேசு பிரானாகவும் இப்படிப் பல நிலை கொண்ட ஞானிகளைப் போல் தானும் ஆகலாம் என்ற உண்மையை உணர்ந்து ஒன்றிலிருந்து ஒன்றைக் கூட்டி வாழ்ந்திடுங்கள்.
இருந்த உண்மையையே விவாதத்திற்கு ஏற்கும் தன்மையை மாற்றி
1.தான் கற்கும் கல்வி தன் உணர்வினால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஈர்த்து
2.இவ்வுலக நன்மைக்காக இவ்வுயிரணுக்களின் நன்மைக்காக இவ்விஷமான கலியின் கடைசி நிலையை மாற்றி
3.கல்கி எனும் புத்தொளிர் கொண்ட இயற்கைத் தேவனின் இயற்கைச் சக்தியைப் பெற்றிட
4.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம்மையே நாம் அச்சக்திக்காக அடிபணிந்து வாழ்ந்திடலாம்.