ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 6, 2024

புலனறிவின் இயக்கங்கள் சாதாரணமானதல்ல…!

புலனறிவின் இயக்கங்கள் சாதாரணமானதல்ல…!

 

உதாரணமாக… “இந்த இடத்திற்குச் சென்றால் ஆபத்து” என்று சொன்னார்கள் என்றால் அதை எப்படியாவது “கொஞ்சம் பார்ப்போமே…” என்று நம்மைப் பார்க்கும்படி செய்கிறது.

சிறுவர்கள் அங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் பெரியவர்களாக இருக்கக்கூடிய நாம் “அது என்ன…? ஏது…?” என்று வேடிக்கை பார்த்து நுகர்ந்து அதற்குப் பின் தான் ஐய்யய்யோ…! என்று விலகிச் செல்கிறோம்.

சண்டையிடுகின்றார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் வருகின்றது.
1.சரி அது நடக்கிறது…
2.நாம் ஏன் அங்கே செல்ல வேண்டும்…? என்று யாரும் நினைப்பதில்லை.

ரோட்டிலே செல்கின்றோம் ஒரு விபத்து நடக்கின்றது அடிபட்டுக் கீழே விழுகின்றார்கள் உடல்கள் நசுங்கிக் கிடக்கின்றது…! அங்கே என்ன ஒரே கூட்டமாக இருக்கின்றது…? என்று கேட்கின்றோம்.

விபத்தாகி விட்டது அடிபட்டுக் கிடக்கின்றார்கள் என்று சொன்னால்… “அது என்ன…?” என்று தான் பார்த்துவிட்டு வந்து விடுவோமே என்று செல்வோம்.

பய உணர்வுடன் உற்றுப் பார்ப்பார்கள்.
1.அந்த உடல் எப்படி நசுங்கியதோ அந்த உணர்வு இங்கே வந்து விடுகின்றது
2.இரவு தூக்கத்தில் பார்த்தால் எங்கேயோ வண்டியில் போகிற மாதிரி இருக்கிறது… என்னை நசுக்கி அமுக்குகின்ற மாதிரி இருக்கின்றது.
3.அன்றைக்குப் பின் என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றெல்லாம் புலம்புவார்கள்

நான்கு நாளைக்கு இப்படி இருக்கின்றது இது எல்லாம் தெரிகிறது என்றாலும் இப்படித்தான் நம்மை இயக்குகின்றது.

அதே உணர்வு அதிகமான பின் அந்த பயத்தினால் மனிதன் சிந்தனை இழந்தவர்களாக ஆகிவிடுகின்றார்கள் ஏனென்றால் “புலனறிவால் அறிந்தும் கூட… பலவீனமான நிலைகள் இங்கே இயக்கப்படுகிறது….”

அடிபட்டான் என்ற உணர்வை நுகர்ந்தால்
1.அது நமக்குத் தீங்கு என்று நினைத்தாலும் அதை விடுவதில்லை
2.அதை நுகர்ந்து பார்க்கும்படித் தான் செய்கின்றது.

“நம்மை அறியாமலே” இந்த உணர்வுகள் அதை நுகர்ந்து பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளக்கூடிய விருப்பம் தான் வருகின்றது. தெரிந்தாலும் அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் தான் தெரிய முடிகின்றது.

அவன் பயத்தால் எப்படித் துடித்தானோ நுகர்ந்த உணர்வுகள் பய உணர்ச்சிகளை நம் இரத்தத்தில் கலந்து மற்ற உடல் அணுக்களுக்குள் சேர்த்த பின் அந்த மனிதன் எப்படிப் பதட்டம் அடைந்தானோ அதுவும் நம் நல்ல அணுக்களில் கலந்து கண்ட பின் பய உணர்ச்சிகள் ஆகிவிடுகின்றது

மீண்டும் அந்தப் பய அலைகள் வந்தால்
1.யாராவது ஒருவர் சும்மா படுத்து இருந்தாலும் கூட
2.அதைப் பார்த்தால் ஒரு பிரேதமோ என்று பயம் வரும் செத்துப் போய் விட்டானா…? என்ற பயம் வரும்.

வீட்டிற்குள்ளே இருந்தாலும் கூட பார்த்தால் அந்த நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் படுத்திருந்தாலும் இந்த நினைவுகள் வரும்.

ஆக நாம் எதை அறிந்து கொண்டோம்…?

1.இந்த உடலில் நாம் எதைப் பதிவு செய்தோமோ
2.இந்தப் புலனறிவு தான் நம்மை இப்படிச் செயல்படுத்துகின்றது.

இதையெல்லாம் நாம் உடனுக்குடன் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும் மகரிஷிகள் உணர்வை எடுத்து வலுவாக்கி ஆத்ம சுத்தி செய்து தடுத்துப் பழகுதல் வேண்டும்.

உலக நடப்புகளைத் தெரிய வேண்டும் என்று விரும்பினாலும் அதை நாம் உடனுக்குடன் அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு தூய்மைப்படுத்தினால் தான்
1.நம்முடைய நல்ல குணங்களும் காக்கப்படும்
2.நம்முடைய உடல் உறுப்புகளும் காக்கப்படும்
3.நம்முடைய மனதும் அமைதிப்படும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு… தெளிந்த நிலைகள் கொண்டு இனி வழி நடப்பதே நல்லது.