ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 5, 2024

ஜீவனுள்ள கனி “எலுமிச்சங்கனி”

ஜீவனுள்ள கனி “எலுமிச்சங்கனி”

 

1.ஈர்க்கும் கனி…
2.ஈசனின் சக்தியையே ஈர்க்கும் கனி…
3.ஈசனின் கனி எலுமிச்சங்கனி.

இக்கனியின் தன்மையை வைத்துப் பூஜைக்கும் உணவிற்கும் உபயோகப்படுத்துகிறார்கள். நற்காரியங்களுக்கு இக்கனியைத் தருகின்றார்கள்.

பல வழிச் சாமியார்களும் இக்கனியைப் பூஜை செய்து இக்கனியில் மந்திரித்து மக்களுக்கு அளிக்கின்றார்கள். இக்கனியின் தன்மை என்ன…?

இவ் ஈசனின் எலுமிச்சங்கனியின் தன்மை “பெரும் ஈர்க்கும் சக்தி உள்ள கனியப்பா…” இக்கனியைக் கையில் வைத்து நீ சில நிலைகளை நினைக்கும்போது உன் சுவாச நிலையைக் கனி ஈர்க்கிறது.

அந்நிலையில் அக்கனியை நீ முகர்ந்திட்டால் அக்கனியின் மணத்தை வைத்து உன் நிலை என்ன…? என்பதைக் கனியின் மணத்திலிருந்து உன் மன நிலையை நீ அறிந்திடலாம்.

இவ் ஈசனின் கனியைக் கையில் ஏந்தி
1.உன் மன நிலையைச் சந்தோசமாக்கி வேண்டிக் கொண்டால் நீ நினைக்கும் எந்தக் காரியத்தையும் அக்கனி ஈர்க்கிறது.
2.காரியம் முடியும் வரை தன் சக்தியின் அருளை உனக்கு அருள்கின்றது.

ஒரு எலுமிச்சங்கனியை உன் இல்லத்திற்கு வாங்கி வந்து உன் கையில் வைத்து அவ்வாண்டவனை வணங்கி அக்கனிக்குக் கற்பூர ஆராதனை காட்டி… அந்நிலையில் ஒரு காரியத்தை எண்ணிக் கொண்டு நீ வணங்கிடும் தெய்வ நிலையில் உள்ளவர்களை அழைத்திட்டால்… அந்நிலைக்கு அவர்கள் வருகின்றார்கள்.

அவ்வீர்ப்புத்தன்மை அந்தக் கனிக்கு உள்ளது. “காந்தத்தின்” ஈர்ப்பு நிலை போல் அக்கனிக்கும் ஈர்ப்பு நிலை உள்ளது.
பல சாமியார்களைப் பற்றிச் சொன்னேன் அல்லவா…! அவர்கள் நிலையில் எல்லோரும் எலுமிச்சங்கனியை வைத்திருப்பார்கள். அவர்கள் ஜெபத்திற்கும் அக்கருவித்து வேலைக்கும் இந்த எலுமிச்சங்ககனியைத்தான் தன் வசத்திற்கு வைத்துக் கொள்கின்றார்கள். இக்கனியின் தன்மையைப் பற்றி பல பல செப்பிடலாம்.

இக்கனி ஈர்க்கும் நிலையில் தன்னுள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொள்கின்றது.
1.இக்கனிக்குச் சுவாச நிலை உள்ளது
2.இக்கனியைக் கையில் வைத்தால் இவ்வுலக சுற்றலையே அறிந்திடலாம்.

இக்கனியை வீட்டின் முகப்பில் கட்டுவது இக்கனியைக் காண்பவர்கள் எண்ணத்தைத் தன்னுள் ஈர்க்கிறது இக்கனி. அவர்கள் எண்ணம் நம்மை வந்து தாக்குவதில்லை. புரிகிறதா…?

கனியின் தன்மையிலேயே அவர்கள் எண்ணம் அந்த இடத்தில் அடிபடுகிறது. நம்மை வந்து அது அண்டுவதில்லை.

திருஷ்டி என்ற பெயரில் நீ கட்டுகின்றாய்… என்ன என்று புரியாமல்…! ஏன் மற்ற கனிகளை அந்நிலைக்குக் கட்டக்கூடாதா…? இக்கனிதான் சக்திக்கனி. இதனுடைய நிலை எக்கனிக்கும் இல்லை இவ்வுலகம் முழுவதுமே.

இக்கனியை வைத்துதான் பிழைக்கின்றார்கள் பல பல சாமியார்கள் எல்லாம் புரிந்ததா…?

1.இக்கனியின் சாறு எடுத்து மஞ்சளைக் கலந்து புருவத்தின் மத்தியில் இடுவதும் அவ்வீர்ப்பு நிலைக்குத்தான்.
2.நல்ல எண்ணத்துடன் இக்கனியில் செய்த குங்குமத்தை வைத்துக் கொண்டால்
3.தீய துர் ஆவிகள் வந்து அண்டிடாது என்பதெல்லாம் இதன் பொருளே.