இன்றைய கலியுகத்தை “நாம் தான் கல்கியாக்க வேண்டும்…” ஆண்டவன் வந்து ஆக்குவதல்ல…!
இயேசுபிரான் மக்களுக்கு உணர்த்திய மகத்துவமான உண்மைகளை எண்ணிப் பார்ப்பதற்கே இன்று யாரும் இல்லை.
1.அன்பே கடவுள்
2.அன்பே ஒற்றுமை
3.அன்பே எல்லாம் என்ற நிலையில்
4.எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று பேரானந்த நிலையை ஏற்படுத்தி
5.அன்று வாழ்ந்த எல்லா மக்களுக்குமே அன்பையே தெய்வமாக எண்ணி வணங்கிட நல் உபதேசங்களை உபதேசித்து
6.அன்று வாழ்ந்த மக்களின் மனதை எல்லாம் அன்புடனே நடத்திச் சென்றார் இயேசுபிரான்.
அந்நிலையை மாற்றியவர்கள் அவரின் உடலை அழித்துவிட்டு அவர்கள் தம் புகழுக்காக இயேசுபிரான் என்ற போர்வையைத் தான் எடுத்துப் போர்த்திக் கொண்டு பலர் பல நிலையில் அவ் ஏசுபிரான் பெயரிலேயே வாழுகின்றார்கள்.
அகிம்சா மூர்த்தியான இயேசுபிரானின் போதனை மொழியையே இம்சைப்படுத்தி விட்டார்கள். ஆண்டவனின் அருளையே தன் தன் நிலைக்கு ஏற்ப சாதகமாக்கிக் கொண்டு வாழ்பவர்கள் தான் இயேசுபிரான் காலத்திலிருந்து இன்று வரை உள்ளார்கள்.
இந்நிலை போல் தான் சில நாடுகளில் முகமது நபியின் நிலையும் அவர் எடுத்துச் சொன்ன உண்மை நிலையையும் மாற்றி அவரவர்கள் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டு விட்டனர்.
முகமது நபி வாழ்ந்த காலத்தில் அவர் அருளிய அருள் செல்வம் மக்கள் மனதில் பதியும் தருவாயில்… பலர் பல நிலை கொண்டு அவரின் மேல் பல துவேஷச் சொற்களையும் கற்களையும் வீசி… அவரையே துவேஷப்படுத்தி துவேஷித்து
1.அவர் நற்போதனைகளை உடலுடன் இருந்த பொழுது ஏற்று நடந்திடாமல்
2.இன்று அவர் நாமத்தை வைத்துப் பலர் ஓதுகின்றார்கள்.
பல உன்னத மனிதர்களின் பல மகான்களின் நிலைகள் எல்லாம் அவர்கள் போதித்த காலத்தில் மனிதர்கள் ஏற்று நடக்கவில்லை. அன்றும் இன்றும் மனிதர்களின் நிலை எல்லாம் ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதுவும்… நல் உபதேசத்தை ஏற்கும் மனநிலையையும் மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றனர்.
பல நாளேடுகளிலும் உணர்ச்சியைத் தூண்டும் வகைகளில் ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் கதைகளையும் இப்படிப் பல நிலைகள் கொண்டு மக்களின் மனதையே பெரும் உந்தலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கின்றார்கள்.
அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆளுபவர்களும் உள்ளார்கள்.
காலத்தினால் பல கோடி நன்மைகள் நமக்கு காத்திருப்பதையே மறந்து நாம் பயத்துடன் தான் வாழ்கின்றோம்.
இப்பூமியிலே தோன்றி வாழ்ந்து…
1.உடலுடனும் உயிருடனும் இன்றும் சூட்சம நிலை கொண்டு வாழ்ந்திடும்
2.பல மகரிஷிகளின் ஆசியுடன் நாம் வாழ்கின்றோம் என்ற பேருண்மையே
3.ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலையெல்லாம் மறந்து
4.ஒவ்வொரு மனிதரும் தாம் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழ்ந்திடுங்கள்.
இனி வாழும் காலங்கள் கல்கியுடன் வாழ்ந்திடலாம் கல்கி என்ற பேரானந்தக் காலத்தில் கலந்து வாழ்ந்திடலாம்.
செய்த பாவத்தை மறந்து விட்டு… நடந்தவைகளை நடந்தவையாக விட்டுவிட்டு… நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன் நம் உயிரான்மாவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து…
1.நமக்காக மட்டும் வாழாமல்
2.நம்முடன் தோன்றிய எல்லா உயிராத்மாக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.
அன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள். எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலரும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள்.
கலியை ஆண்டவன் வந்து கல்கி ஆக்குவது இல்லை இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன் எல்லோருமே… ஆண்டவர்கள் என்பது யார் என்று புரிந்ததா…?
1.இக்கலியில் உள்ள உயிராத்மாக்கள் நாம் எல்லோருமே தான்
2.கலியைக் கல்கி ஆக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.
ஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை மனிதர்கள் மனநிலையை வைத்துத்தான் காலநிலையும் மாறுகின்றது. ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்த மனிதரின் மனநிலையை வைத்துத்தான் மாறுபடுகிறது.
இன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இம் மனநிலை மாறுவதற்காகத் தான்.
1.நம் மகரிஷிகள் நிலை கொண்டே நடத்திடும் பெரும் நாடகம்.
2.நாடகத்தின் தொடரினை இனி கண்டு வாழ்ந்திடலாம்
3.இந்நிலையில் இருந்து மக்களின் மனநிலையில் பெரும் மாறுதல் வந்திடுமப்பா.
அந்நிலை நடப்பதற்காகத்தான்… சூட்சும நிலையில் உள்ளவர்கள் “மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி” மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.
இன்றைய செயற்கையின் கோளத்தை அந்நிலையின் உண்மைகளை நாமும் பார்த்திடலாம்.