ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 23, 2018

கோகர்ணத்தில் உள்ள சுரங்கங்களிலும் கடலிலும் குருநாதர் கொடுத்த அமானுஷ்யமான அனுபவங்கள் – நடந்த நிகழ்ச்சி


கோகர்ணம் என்ற இடத்தில் ஒரு மலைப்பகுதி இருக்கின்றது. அதன் அருகிலே கடல் அலைகள் மிக அதிகமாக வரும். பண்டைய கால அரசர்கள் அவர்கள் போர் செய்யும் முறைகளில் தன்னைத் தப்புவித்துக் கொள்ள இங்கே வந்து குகைகளை அமைத்துச் சில நிலைகள் செய்ததும் உண்டு.

அங்கே இருதய வாயில் என்ற இடத்தில் ஒரு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் இறந்து விட்டால் அங்கிருக்கக்கூடிய கிணற்றில் அவன் எலும்பைப் போட்டு விட்டால் அது கரைந்து விடுகின்றது. அப்படிக் கரைப்பவர்களும் உண்டு.

ஏனென்றால் இப்படிக் கரைத்து விட்டால் மனிதனின் வாழ்க்கையில் செய்த பாவம் எல்லாம் கரையும் என்று இப்படி ஐதீக முறை கொண்டு தான் செய்கின்றார்கள். உண்மையை அறியாது தடைபடுத்திவிட்டார்காள்.

அதே மாதிரி அங்கே இருக்கும் கடலில் காசையோ தங்கமோ வெள்ளியோ அந்த நகைகளைப் போடுபவர்களும் உண்டு. அப்படிப் போட்டால் நம் பாவமெல்லாம் போய்விடும் என்று செய்கிறார்கள்.

குருநாதர் அங்கே என்னைப் (ஞானகுரு) போகச் சொன்னார். கடலுக்கு மேலே செல்வதற்குக் கம்பி வேலிகள் போட்டு வைத்திருகின்றார்கள்.
.
நான் குருநாதர் சொன்னார் என்ற நிலையில் அலட்சியமாகப் போனேன். கடலில் வரும் அலைகளைப் பார்த்தவுடனே ஆனந்தமாக இருந்தது. ஆனால்
1.பெரிய அலைகள் அலைகள் வந்த பின்னாடி தான் தெரிந்தது “ஏன் கம்பி வலைகள் போட்டுள்ளார்கள் என்று...!”
2.அலைகள் மோதி வரும் பொழுது கிர்…ர்ர்ர்... என்று என்னை கீழே இழுக்கிறது.

கொஞ்சம் ஏமாந்தால் நடுக்கடலுக்கே இழுத்துக் கொண்டு போய் விடும். அந்த அளவுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. குருநாதர் அங்கே காட்டுகின்றார்.
1.அந்த ஈர்ப்பு சக்திகள் அது என்ன செய்கின்றது...?
2.இது எவ்வாறு உருவாகின்றது...?
3.இதற்குக் காரணம் என்ன...? என்று எனக்குள் பதியச் செய்கின்றார்.

அந்தக் கோவிலில் காளி வைத்திருக்கின்றார்கள். நாம் கோபமான குணத்தை வளர்த்துக் கொண்டால் அது மற்றொன்றை அழித்திடும் சக்தியாக அது எவ்வாறு உருவாகின்றது…? என்பதையும் அங்கே அந்தக் கடல் பகுதியில் காற்றழுத்தத்தின் தன்மை வரும் போது கடல் அலைகள் மோதி எழும்பும் பொழுது அது காளியின் தன்மையாக எதையுமே தனக்குள் கவர்ந்து உள்ளே இழுத்திடும் சக்தியாக இருக்கிறது என்ற நிலையையும் அங்கு உணர்த்துகின்றார்.

அப்பொழுது அங்கே இன்னொரு பெரிய அலை வருகிறது. ஏற்கனவே நான் அந்த மலை மீது (உயரமான இடத்தில்) தான் நிற்கின்றேன். ஆனால் அந்த அலை வந்து ஒன்றுடன் ஒன்று மோதி நான் நிற்பதற்கும் மேலே அது எகிறிப் போகிறது.
1.அப்படி அந்த அலை அடித்துக்.... கீழே போனவுடனே
2.என்னை சர்...ர்ர்ர்...! என்று கடலுக்குள்ளே இழுத்துவிட்டது.

அந்த இடத்தில் குருநாதர் ஏற்கனவே ஒரு உபாயத்தைச் சொல்லி இருந்தார். முதலில் அந்தக் கம்பியுடன் சேர்த்து உன் உடலை இருக்கிக் கட்டிக் கொள் என்று முன்னெச்செரிக்கையாகச் சொன்னார்.

அப்பொழுது அங்கே நான் சட்டை எல்லாம் போடவில்லை. வேஷ்டியும் துண்டும் தான் போட்டிருந்தேன். அந்த் ஆறு முழத் துண்டை வைத்துக் கட்டிக் கொண்டேன்.

உங்களுக்கு லேசாகச் சொல்றேன். ஆனால் அன்றைக்கு அந்த அலை எப்படி வருகிறது...? புயல்கள் எப்படி உருவாகிறது...? அது புவிக்குள் எப்படி ஈர்ப்பாகின்றது…? அதனால் ஏற்படும் சுழற்சியின் தன்மை எப்படி ஆகிறது...? அது மேகங்களை எப்படிக் கவர்கின்றது...?

(இன்றும் நீங்கள் பத்திரிக்கையில் பார்த்திருப்பீர்கள். விஞ்ஞானிகள் புயல் எப்படி உருவாகிறது...? அதன் மையப் பகுதியில் இருக்கும் கண் (EYE OF THE STORM) எப்படி இருக்கிறது..? காற்றழுத்தங்கள் எப்படி மாறுகிறது...? நீரை எப்படி அது உறிஞ்சுகிறது...? என்றும் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டேயுள்ளார்கள்)

சுழற்சியின் வேகத்தால் கீழே பூமிக்குள் இழுத்தாலும் மீண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி அந்தச் சுழலால் அந்த ஆற்றல் மேகங்களுடன் கலக்கப்படும் பொழுது அந்த இடத்தில் சீறிப் பாயும் “ஒரு நெருப்பாக மாறுகின்றது... நெருப்புக் குழம்பாகவே ஆகிறது...!”

அப்போது அந்த அலைகள் வரும் போது ஒன்றோடு ஒன்று இங்கே ஈர்த்துச் சுழற்சியின் தன்மை ஆகப்படும் போது எப்படி மேலே பறக்கின்றது...? சில எதிர் நிலையான அலைகள் எப்படி உருவாகிறது...? என்று அந்த ரெக்கத்தில இருந்து காண்பிக்கின்றார் குருநாதர்.

காளி எப்படி இருக்கின்றது...? தான் ஆங்காரப் பசியைப் போக்குவதற்கு அந்த உணர்வின் சக்தியாக அது எப்படிச் செயல்படுகிறது...? இதற்கும் பெயர் காளி தான். அந்தக் காளியை ஏன் அங்கே வைத்தான்…?

ஆனால் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுள்ளார்கள். புலி தன் பசியைப் போக்க மற்றவனை இரக்கமற்றுக் கொல்லும். காளி கோயிலை வைத்தாலும் அங்கே அலைகள் பாய்ந்து அழுத்தம் அதிகமானவுடனே தனக்குள் கவர்ந்து கொண்டு கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடும்.

உன் உடலை விட்டு உன் உயிர் வெளியே போய்விடும். ஆனால் வேறு உடலுக்குள் போய்ச் சேரும். இந்த உடலோ தண்ணிக்கு இரையாகும். இது தான் புலி என்று அந்த ரெக்கத்தில் (இடத்தில் வைத்து) குருநாதர் எனக்கு உணர்த்துகின்றார்.

வெளியிலே செல்லும் உயிர் இன்னொரு உடலுக்குள் சென்று இது காளியாக நின்று அந்த உடலுக்குள் இருக்கும் சக்தியை வைத்து இது அடுத்த உருவமாக உருப் பெறுகிறது.

ஏனென்றால் உடலை விட்டுச் சென்ற பின் நாம் யார் மேல் அன்பு கொண்டமோ அந்த உடலுக்குள் சென்று அந்த உணர்வினை எடுத்துத் தனக்குள் பசியைத் தீர்த்து அந்த உணர்வின் சக்தியாக அது உடலாகின்றது.
1.காளி என்பதை வைத்து
2.இந்த இரண்டிற்கும் இப்படிச் சொல்லிக் காட்டுகின்றார். இதுவும் காளி தான்.

அலைகள் சீறிப் பாயும் பொழுது பயத்தின் நிலைகள் வருகின்றது. பயத்தின் தன்மை கொண்டு வீழ்ந்து விட்டால் அந்தப் பயமான உணர்வுகளை விழுங்கி அந்த உணாவின் சத்தாக உயிரிலே விளைகின்றது.
நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற நிலையில்
1.இங்கே எப்படி விளைகின்றது இந்த உயிருக்குள்...!
2.ஆனால் உடலை விட்டுச் சென்ற பின் இந்த உடல் எப்படிக் கரைகிறது...? என்று
3.இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்குத் தான் என்னை இங்கே அலைய வைத்தார்.

இது முடிந்ததும் அடுத்து ஒரு சுரங்கத்திற்குப் போகச் சொன்னார். கல்லிலேயே கதவு செய்து வைத்து இருக்கிறார்கள். அதிலே சிலைகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் யாரும் போனாலும் அந்தக் கதவு தெரியாது.

அன்றைக்கு வாழ்ந்த அரசர்கள் மாற்றரசர்கள் வந்தால் அவன் கையில் சிக்காதபடி தன்னைத் தப்புவித்துக் கொள்வதற்காக அந்த்ச் சுரங்கங்களைக் கட்டி வைத்து அதில் தங்கி இருந்து கொள்கிறார்கள்.

கொஞ்ச தூரம் போனவுடனே சிறிய பொந்து (பிலவு) மாதிரித் தெரிந்தது. உள்ளுக்குள் போனேன். உள்ளே ஒரே இருட்டாகத் தெரிகிறது. இருட்டாகத் தெரிந்தவுடனே எனக்குப் பயம் வந்துவிட்டது.

ஏனென்றால் சுரங்கங்களில் சில இடங்களில் தண்ணீரையும் கெட்டி வைத்திருப்பார்கள். (முக்குளித்துப் போக வேண்டியதிருக்கும்) ஆனால் எங்கேயோ கொண்டு போய் மறுபடியும் கடலில் கொண்டு விட்டுவிடும்.

அந்த மாதிரிப் போய் விட்டால் என்ன செய்வது...? என்ற பயம் வந்துவிட்டது. உள்ளே போகவில்லை அப்படியே உட்கார்ந்து விட்டேன். பயத்தின் தன்மை வரும் போது
1.அந்த இருட்டு தான் எனக்கு வருகிறதே தவிர
2.அதை அறியக்கூடிய அறிவு வரவில்லை.

பயமான பிற்பாடு நான் என்ன செய்வது...? இங்கே போய் விழுந்து விடுமோ...? வேறு எங்காவது போய் விழுந்து விடுவோமோ...? என்ற சந்தேக நினைவுகள் வருகிறது.

உங்கள் வாழ்க்கையிலும் சில நேரங்களில் இப்படித் தான் ஏற்பட்டிருக்கும். உதாரணமாக ஒரு தொழில் செய்யப்படும் போது அது நடக்குமா...? நடக்காதா...? எல்லாம் போய்விடுமோ...! என்ற எண்ணம் வந்து விட்டால் அப்புறம் அந்த இருள் தான் வரும். ஒன்றையும் தெரிய முடியாது.


அங்கே அந்த இடத்தில் பல உதாரணங்களைக் காட்டுகின்றார் குருநாதர். நீ இந்தக் குகைக்குள் போகின்றாய்... இருட்டாக இருக்கிறது. உனக்குப் பாதை தெரியவில்லை. ஆனால்
1.பாதை தெரிவதற்காக வேண்டி உனக்கு நான் சக்தி கொடுத்தனே...
2.அதை என்னடா பண்ணினாய்......? என்று கேட்கிறார்.
3.அப்போது அங்கே குருவை மறந்து விடுகின்றேன்
4.என் உடலைக் காக்கத் தான் எண்ணுகின்றேன் என்பதை நினைவுபடுத்துகிறார் குருநாதர்.

ஒரு கையில் துப்பாக்கியைக் கொடுத்து புலி வந்தால் சுட்டுவிடுங்கள் என்று கொடுக்கின்றார்கள். ஆனால் புலி வந்த பின் “புலி வருகிறது...!” என்று சுடாமல் சும்மா வைத்துக் கொண்டு இருந்தால் என்ன ஆகும்...? புலி நம்மைத் தானே தாக்கும்.

துப்பாக்கியையும் கையில் வைத்துக் கொண்டு
1.ஐய்யய்யோ... புலி வருகிறது... ஐய்யய்யோ புலி வருகிறது..! என்றால்
2.புலியைக் கொன்றால் தானே அது நம்மைக் கடிக்காது
3.ஏன்டா... உனக்குச் சக்தி கொடுத்திருக்கிறேன். நீ என்னடா செய்தாய்...? என்று
4.அந்த இடத்தில் தெளிவாகக் காண்பிக்கின்றார் குருநாதர்.

அங்கே முதலில் கடலில் அலைகள் வரும் இடத்தில் அந்தக் கம்பியில் உன் உடலை இணைத்துத் துண்டைக் கட்டச் சொன்னேன். ஆனால் நீ பயந்த உணர்வுடன் விழுந்து விட்டால் கடலுக்குள் தான் போவாய். அதற்குத் தானே முன்னெச்சரிக்கையாகக் கட்டச் சொன்னேன்.

மறுபடி அதே பயம் உனக்கு இங்கே இந்தச் சுரங்கத்திற்குள் போகும் பொழுது வருகிறது. அப்போது அந்த உணர்வை நீ எப்படிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று உதயம் கொடுக்கின்றார்.

குரு சொன்ன உணர்வின் தன்மை எடுக்கும் போது ஒளியாக வருகிறது. உள்ளே பாதை தெரிகிறது. உள்ளே போனேன். பல அறைகள் இருக்கிறது. ஒவ்வொரு அறையும் அடைத்திருக்கிறார்கள்.

இங்கே ரோலிங் சட்டர் (ROLLING SHUTTER) நாம் எப்படிப் போட்டிருக்கின்றோமோ அதுபோல ஒவ்வொன்றும் அந்த மாதிரி இருக்கின்றது.

பார்த்தால் வெறும் கல்லாக ஒன்றாகத்தான் தெரிகிறது. ஆனால் ஒரு பொறியை (SWITCH – BUTTON) அழுத்தப்படும் போது அந்தக் கல் கொஞ்சம் முன்னாடி வருகிறது. ஆனால் முதலில் சேர்ந்து இருக்கின்றது. அப்படியே அதை நகற்ற முடியவில்லை.

சுவிட்ச் மாதிரி வைத்திருக்கிறார்கள். அதை அழுத்தியவுடனே இது நகர்கிறது. நகர்ந்த பின் அதைத் தள்ளினால் குகை தெரிகிறது. அதை நகரச் செய்வதற்கு இன்னொரு பக்கம் வைத்திருக்கிறார்கள்.

அந்த இடத்தில் கல் மாதிரியே குவியலாக வைத்திருக்கிறார்கள். அழுத்தி முன்னுக்கு வந்ததும் தான் முழுவதும் நகர்த்த முடியும். நகர்த்தி விட்டு உள்ளுக்குள் போய்விட்டால் மறுபடியும் அதுவாக மூடிவிடும்.

அதாவது நடந்து செல்லும் பொழுது அந்தப் பாதையில் மிதித்தவுடனே  “லபக்...” என்று இழுத்து மூடிக் கொள்கிறது. மிதித்து விட்டுத் தள்ளிப் போனால் தொலைந்தான். மீண்டும் திருப்பி வர முடியாது. அந்த அளவிற்குச் சிக்கலாகப் போட்டு மாட்டி விட்டுவிடுகின்றது.

அப்படி ஆனவுடனே மறுபடியும் எனக்குச் சந்தேகம் வருகின்றது. அப்புறம் குருநாதர் சொன்ன முறைப்படிப் படிப்படியாகப் போனவுடனே எல்லாம் தெளிவாகத் தெரிய முடிந்தது.

ஏனென்றால் அன்றை அரசர்கள் அவ்வளவு நுட்பமாக (TECHNIQUE) மாற்று அரசனிடம் இருந்து தப்பித்து கொள்ள அப்படி உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அதற்கு அடுத்துப் போனவுடனே படுத்துக் கொண்டு தான் போக வேண்டும். படுத்து அப்படியே செல்லும் பொழுது ஒரு இடத்தில் தலை முட்டுகிறது. அங்கே முட்டினால் தான் அந்தக் கதவு திறக்கும். அதையும் தாண்டி வெளியில் போய்க் கொள்ளலாம்.

ஆனால் போகவில்லை என்றால் விஷ வாயு மாதிரியும் வைத்திருக்கின்றான். அதை முறிக்கக் கூடிய நிலையும் வைத்திருக்கின்றான். தான் தப்பிப்பதற்கும் மாற்று அரசனை அழிப்பதற்கும் இத்தனை வேலை செய்து வைத்துள்ளார்கள்.

ஏனென்றால் தன்னுடைய சுகபோக வாழ்க்கைக்காகத் தன் உயிரைக் காத்து இந்த உடலைக் காத்துக் கொள்ள ஒவ்வொரு அரசனும் எத்தனை அவஸ்தைப்படுகின்றான் என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நிதர்சனமாகவே அந்த இடத்தில் வைத்துக் காட்டுகின்றார்.

இதைப் போன்ற ஒவ்வொரு நிலையிலும் பல பல அனுபவங்களைப் பெற்றுத்தான் உங்களுக்கு அந்த ஞானிகளின் அருள் சக்திகளை எடுக்கும் மார்க்கத்தை எளிதில் கொடுக்கின்றேன்.

சொல்வது லேசாகத் தெரியும். எடுத்து உபயோகப்படுத்தினால் உங்கள் வாழ்க்கையில் வந்த இருள்களைப் போக்கிடும் ஆற்றலை நீங்களே பெற முடியும்.

ஞானமும் கிடைக்கும் சக்தியும் கிடைக்கும்.