ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 1, 2018

தீமை செய்பவர்களைத் தண்டிப்பது அரசர்கள் வழி – தீமைகளுக்குத் தண்டனை அழித்து “அந்த மனிதர்களை ஞானிகளாக உருவாக்குபவர்கள் மாமகரிஷிகள்…!”


மதத்தின் அடிப்படையில் இயக்கும் உணர்வுகள் மீண்டும் மீண்டும் ஓங்கி வளர்ந்து மதத்திற்குள் பேதங்களாகவும் இன பேதம் மொழி பேதம் என்ற நிலைகளில் உலகெங்கிலும் இந்த நச்சுத் தன்மைகள் பரவிவிட்டது.

உலகில் தோன்றிய மனிதர்கள் அனைவருக்குள்ளும் இந்தப் பேதங்களின் நிலைகள் உருவாகி மெய் ஞானிகள் வகுத்துக் கொடுத்த அந்த உண்மையின் உணர்வை அறிய முடியாதபடி தடைப்படுத்திக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு மதமும் நியாயங்களைக் கடைப்பிடிக்கின்றது. ஆனால் மதத்தில் பேதங்களை உருவாக்கி மக்களை அடிமைப்படுத்துகின்றது.

“இது தான் இன்றைய உலக நிலைகள்…!”

அன்றைய அரசர்கள் ஆண்ட காலங்களில்
1,ஒருவன் குற்றம் செய்தான் என்றால் அவனைத் தண்டித்து மரணமடையச் செய்தார்கள்.
2.அல்லது ஒருவனை இன்னொருவன் இம்சித்தான் என்றால் பதிலுக்கு அவனையும்
3.அந்த இம்சிக்கும் நிலைக்கே அரசு தண்டனையாகக் கொடுத்தார்கள்.

ஆனால் மகரிஷிகள் என்ன செய்தார்கள்…?

இந்த மனித உடலில் அறியாது புகுந்த
1.தீமைகள் விளைவிக்கும் அந்த உணர்வுகளுக்குள் உயர்ந்த கருத்தினைச் செலுத்தித்
2.தன் உடலுக்குள் வரும் தீமையை அடக்கி அந்தத் தீமையான உணர்வுக்கு அதைத் தண்டனையாக அளித்துத்
3,தனக்குள் இணைந்து செயல்படும் உணர்வாகத் தனக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.
4.அதையே தான் மக்களுக்கும் எடுத்துரைத்தார்கள் மகரிஷிகள்.

நமக்குள் நம்மை அறியாது வந்து சேரும் தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டும்…? என்று மகரிஷிகளால் இப்படிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்த உண்மைகள் எல்லாம் மறைந்து விட்டது.

மறைந்த அந்த உண்மைகளை எல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகளைச் சிறுகச் சிறுக உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

அந்த மகா ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால்
1.தீமை செய்யும் உணர்வுகளை அடக்கி
2.அவைகளை நன்மை பயக்கும் சக்தியாக உங்களுக்குள் மாற்றும். ஒளியின் சுடராக உருவாக்கும்.
3.மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ முடியும்…
4,மகிழ்ந்து வாழ முடியும்…! என்ற எண்ணத்தில் தான் இதை உபதேசிக்கின்றேன். (ஞானகுரு)