ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 18, 2018

சத்தியத்திற்கு ஏன் சோதனை வருகிறது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!


ஏழ்மையில் இருப்பவனின் எண்ணத்தில் அவன் எண்ணமேதான் அவனை ஏழ்மையாக்குகின்றது. செல்வந்தனின் நிலையும் அதுதான். செல்வந்தனும் அவன் எண்ணத்தில்தான் செல்வந்தன் ஆகின்றான்.

ஏழ்மையும் செல்வமும் அவனவன் எண்ணத்தில் இருந்து தான் வருகின்றன.
1.பிறப்பில் வருவது அல்ல எதுவுமே...!
2.ஜாதகத்தில் வருவது அல்ல எதுவுமே...!
3.எண்ணத்தில் வரும் “எண்ணத்தையே கொண்டு......!”
4.அவரவர்கள் வழிக்கு வாழ்கிறார்கள் இக்கலியில் பிறந்த பாமர மக்கள் எல்லாருமே...!

ஆகவே
1.வரும் சோதனையைக் கண்டு கலங்கிடாதே.
2.எல்லாம் தந்து அருள் பெறுவது அருளல்ல...!
3.வரும் நிலையிலிருந்தெல்லாம் மீண்டு பெறுவதுதான் ஆண்டவனின் அருள்.

ஏமாற்றி வாழ்பவன் வாழ்கின்றான். தர்மமுடன் வாழ்பவனுக்குப் பல தடைகள் ஏனப்பா என்கிறாய்...! “தடையில் இருந்து மீள்பவன் தான் தர்மவான்...!” சத்திய நியாயத்துடன் வாழ்பவனுக்குச் சத்திய சோதனைதான் வந்துவிடும்.

அச்சோதனையில் இருந்து மீண்டால்தான் சத்தியவனாகலாம். சகலத்தையும் அளித்துவிட்டு... “சத்தியவான் நிலையை எப்படியப்பா எய்த முடியும்...?”

சத்தியத்துக்குச் சோதனை வந்தால்தான் அவன் சத்தியவான் ஆகலாம்...!

முருகா......! என்று கோவிலுக்குச் சென்று வணங்கி விட்டால் உடனே உன் நிலைக்கு முருகன் ஓடி வந்து உன் நிலைக்கு எல்லாமே அவன் அளித்து விட்டால் ஆண்டவன் என்பவன் எதற்கப்பா...?

நீ உண்ணும் உணவையே எடுத்துக் கொண்டால் உழுது பயிர் செய்து... அப்பயிரில் விளையும் தானியத்தைப் பக்குவ நிலை செய்து... அதன் பிறகு சமைத்துத் தான்... நீ உண்ண முடிகிறதப்பா...!

சிறு உதாரணத்திற்கு இதைச் சொல்லுகிறேன்.
1.எந்த நிலையும் வேலை செய்யாமல் எந்தக் கஷ்டமும் படாமல் எதுவுமே வருவதில்லை.
2.அவ்வாண்டவன் அருளைப் பெறவும் பல சோதனைகளில் இருந்து மீண்டுதான் ஒரு நிலையை எய்தி
3.அவன் அருளையே... உன்னுள் இருக்கும் அவனை நீ... உன்னையே நீ கண்டிடலாம்...!
4.வரும் தடங்கலைத் தடங்கலாக எண்ணிடாமல் ஜெயத்துடன் ஜெயித்துக் காட்டிடப்பா.
5.உன் ஜெபத்துக்கு என் அருள் உண்டு...! என்ற ஒரு எண்ணம் மட்டும் உங்களுக்கு இருந்தால் போதும்,
6.உன் ஜெபத்துக்கு நான் வருகிறேன்...!
7.ஜெபிக்க வேண்டியது நீ தானப்பா...
8.புரிகிறதா பாடநிலை...? உழுதால் தான்... சமைத்தால் தான் உண்ண முடியும்.

ஆண்டவனே... என்று எண்ணி வாயைத் திறந்தால் உணவை ஆண்டவனா வந்து உன் உடலுக்கு அளித்திடுவான்.....? புரியாத பாமரர்கள் “பழியைப் போடுவதெல்லாம் அவ்வாண்டவனின் மேல்தான்...!”

ஆண்டவன் என்பது யாரென்று புரிந்து விட்டதா... உங்களுக்கு...!

ஒவ்வொரு மனிதனும் ஆண்டவனாகலாம்...! எல்லாமே அவன் எண்ணத்திலும் சுவாசத்திலும்தான் உள்ளது.

ஆண்டவனாக வாழ்வதும் அழுகும் உடலை அழுகவிட்டு மனச்சோர்வுடன் மடிவதும் எல்லாமே மனித எண்ணத்தில் இருந்து வருவது தான். இந்நிலையைப் புரிந்து கொண்டுதான் சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் ஒளிச் சரீரம் என்ற அந்த நிலையை எய்தினார்கள்.