ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 3, 2018

கணவன் மனைவி அருள் வழியில் இணைந்து வாழ்வதற்குண்டான வழி முறை


கேள்வி:-
ஒரு கணவனும் மனைவியும் எவ்வாறு இரத்த சொந்தமாகிறார்கள்? அவர்கள் இணைந்து என்ன செய்ய வேண்டும்?

பதில்:-
இருபத்தியேழு நட்சத்திரங்களிலேயும் ஆண் பெண் என்ற நிலை உண்டு. இயற்கையின் படைக்கும் செயலை வைத்துத் தான் ஆண் பெண் என்று உருவகப்படுத்தினார்கள் ஞானிகள்.

ஆண் நட்சத்திரங்களின் சக்தியும் பெண் நட்சத்திரங்களின் சக்தியும் பல பல கலவைகள் ஆகும் பொழுது தான் புதுப் புது சிருஷ்டிகளாக உருவங்களாக உருவாகின்றது.

இரண்டும் இணையவில்லை என்றால் எதுவும் உருவாக முடியாது.
1.இணைந்தால் தான் வளர்ச்சி.
2.வளர்ச்சி வேண்டும் என்றால் இணைந்து தான் ஆக வேண்டும்.

இணையாமல் இருந்தால் சூனியமாகத்தான் இருக்கும். வளர்ச்சி இருக்காது. நாளடைவில் அனாதையாகும் பொழுது அதைக் காட்டிலும் வலுவானது ஈர்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்குள் சிக்கத் தான் முடியாது. தப்பும் வழி இல்லை.

கேள்வி:-
நான் தியானிக்கின்றேன். என் கணவர் எதிர்க்கின்றார். அவரை நான் செய்யும் தியானத்தின் தன்மையால் என் ஒளியில் இணைத்துக் கொள்ள முடியுமா…?

பதில்:-
நட்சத்திரங்களிலிருந்து உருவானது தான் நம் உயிர். உயிர் அது நுகர்ந்த உணர்வுக்கொப்பத்தான் உடலை உருவாக்குகின்றது. இன்று ஆணாக உள்ளவர் அடுத்து பெண் உடல் பெறலாம். அதே போல் இன்று பெண்ணாக உள்ளவர் ஆண் உடலும் பெற முடியும்.

ஆகவே கணவன் என்றாலும் மனைவி என்றாலும் நாம் அந்த உயிருடன் இணைக்கும் தன்மைக்குத்தான் பற்று வைக்க வேண்டுமே தவிர உடலை எண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் கணவரோ மனைவியோ இறந்தால் உடல் தான் அழிகிறது. உயிருக்கு அழிவில்லை.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றென இணைந்து இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியின் சரீரமாக ஒன்றும் உள்ளார்கள். உடலுடன் அவர்கள் இருவருமே இன்று இல்லை. (உடலைப் பற்றிய சிந்தனை தேவையில்லை. ஏனென்றால் அது நிலையானது கிடையாது)

அந்த மெய் ஞானியான அகஸ்தியன் காட்டிய அருள் வழிப்படி
1.அவர் நீங்கள் தியானம் செய்வதை எதிர்த்தாலும்
2.நீங்கள் உங்கள் கணவரின் உடலை எண்ணாது அவர் உயிரைக் கடவுளாக மதித்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உயிரிலே இணையும் படியாக உங்கள் தியானம் வலுவாக இருக்கும் பட்சத்தில்
4.அந்த ஞானிகள் ஒளியுடன் இரு உயிரும் ஒன்றி இணைந்து கொள்ள முடியும்.

என் கணவர் இடைஞ்சல் செய்கிறார் என்று வெறுப்புடன் எண்ணினீர்கள் என்றால் அது தான் வளரும். பின் அந்த எண்ணமே உங்கள் தியானத்தைத் தொடர்ந்து செய்ய விடாது தடுக்கும். என்ன தியானம் செய்து என்ன பலன்..? என்று சோர்வாகி விடும்.

ஆகவே நீங்கள் உள்ளபூர்வமாக கணவன் உயிரிலே மகரிஷிகளின் அருள் சக்தி சேர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இது முக்கியம்.

இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு கணவன் மீது எரிச்சலோ கோபமோ ஆத்திரமோ உள் மனதில் ஏற்படாது. உள் மனது தூய்மையாகி விட்டால் வெளி மனது சீக்கிரமே அடங்கிவிடும்.

நீங்கள் உங்கள் கணவரை வெறுக்காத பட்சத்தில் உங்கள் கணவரால் உங்களுக்கு ஒத்தாசை தான் செய்ய முடியுமே தவிர இடைஞ்சல் செய்யும் எண்ணத்தையே அது திசை திருப்பிவிடும் (சிறிது காலம் வைராக்கியமாகச் செய்தால் இந்த நிலை கண்டிப்பாக வரும்)

பின் நீங்கள் செய்யும் நல்லத அவர் அங்கீகரிக்கத்தான் முடியும். விலகவும் முடியாது தப்பவும் முடியாது.

கேள்வி:-
கணவன் மனைவி உறவு எதற்கு?

பதில்:-
அத்தகைய நிலை ஏற்படும் பொழுது அந்த ரிஷி பத்தினி என்ற நிலையை எய்த முடியும். அதாவது ரிஷி பத்தினி என்றால் கணவன் உயிரும் மனைவி உயிரும் ஒன்றி வாழும் நிலை என்பது.

கணவனும் மனைவியும் சேர்ந்து உருவாக்க வேண்டியது படைக்க வேண்டியது ரிஷி பத்தினி என்ற இந்த நிலையைத்தான்…! அப்படிப்பட்டவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் வாழும் சப்தரிஷிகள் என்பவர்கள். அந்த உயர்ந்த நிலையை அடைய முடியும்.