கேள்வி:-
தியானத்தின் போது அதிக உமிழ் நீர் சுரக்கின்றது. ஏன்…? இடையிடையே
ஒரு சில நேரம் கொட்டாவியும் வருகிறது. இது ஏன்…?
பதில்:-
1.உமிழ் நீர் வருவதன் காரணம்
தியானிக்கும் பொழுது உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது என்றால்
அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகள் ஒளிக்கற்றைகளாக உயிரிலே மோதி வாயிலே அது கரைகின்றது
என்று அர்த்தம்.
உங்கள் நினைவுகள் எந்த அளவுக்கு மகரிஷிகளுடன் ஒன்றியிருக்கின்றதோ
அந்த அளவுக்கு அது வரும். அப்படிக் கரையும் உமிழ் நீர சுவையாக இருக்கும்.
நெல்லிக் கனியின் சுவை போன்றோ மலை மீது உருவாகும் நீரின் சுவையாகவோ
அதாவது பல மூலிகைகள் கலந்ததாகவும் தெரியும்.
அந்த உமிழ் நீர் உங்கள் ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் ஞானிகளின்
உணர்வுகள் ஆற்றல்மிக்கதாக உருப் பெறத் தொடங்கும். நோய் நீக்கும் சக்தி கிடைக்கும்.
மன பலம் கிடைக்கும்.
தொடர்ந்து இந்த உமிழ் நீர் சுரந்து கொண்டே இருந்தால் மற்றவர்களுக்கு
இயற்கையாக உடலில் வரக்கூடிய தொல்லைகள் (தலை வலி மேல் வலி சோர்வு) நம்மை எதுவும் பாதிக்காதபடி
ஒரு பாதுகாப்பு நிலையாக உருவாகும்.
2.கொட்டாவி வருவதன் காரணம்
இன்று டி.வி ரேடியோ எப்படி அலைவரிசைகளில் செயல்படுகின்றதோ அது
போல் தான் நம் உடலில் உள்ள ஒவ்வொரு குணங்கள் கொண்ட அணுக்களும் அதனதன் உணவை
(உணர்வலைகளை) இந்தக் காற்று மண்டலத்திலிருந்து பிரித்து எடுக்கும் நிலையில் உயிர்
மூலமாக இயக்கி மூக்கின் வழியாகச் சுவாசித்து வாழ்ந்து கொண்டுள்ளது.
பூமியில் மண் அடுக்குகள் எப்படிப் பல பல நிறங்களில்
படிந்துள்ளதோ அதைப் போல் நம் உடலிலும் பல அடுக்குகள் கொண்ட நிலைகளில் அத்தகைய
அணுக்கள் உண்டு.
நமக்குள் ஆழமாகப் பதிவான அத்தகைய குணங்களின் அணுக்கள் நம்மைக்
கேட்காமலேயே நம்மை அறியாமலே சுவாசத்தின் மூலமாக சுவாசித்துத் தன் தன் இனத்தைப்
பெருக்கி ஜீவித்து வாழ்கின்றது.
1.இதை ஊழ்வினை என்பார்கள்.
2.மூல வித்து என்றும் சொல்லலாம்.
3.ஆணி வேர் என்றும் சொல்லலாம்.
ஆனால் நாம் எடுக்கும் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க
சக்திகள் அதுவும் அலை வரிசையில் தான் வருகின்றது. அந்த அலை வரிசை சிறுகச் சிறுக
உடலுக்குள் பெருக்கமாகும் பொழுது அது அத்தகைய ஊழ் வினைகளுக்குள் ஊடுருவி
அதற்குள்ளும் கலக்கும்.
மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம் உடலில் ஏற்கனவே ஊழ் வினையாக
உருவான ஊனுக்குள் ஊடுருவ ஊடுருவ அதனின் மூல இயக்கங்கள் மாறி அதற்குரிய உணவு
கிடைக்காது தடையாகும்.
அதாவது
1.மகரிஷிகளின் அலை வரிசை நமக்குள் இயக்கமாகி
2.அந்தப் பழைய ஊனின் அலை வரிசைகளைத் தடைப்படுத்தும்.
3.அப்படி அதைத் தடைப்படுத்தும் பொழுது அதனுடைய வலிமை குன்றுகிறது.
4.அது வேக வைக்கப்பட்டு ஆவியாக வரும். அது தான் கொட்டாவி
என்பது.
நாள் முழுவதும் நன்றாகத் தூங்கி இருந்தாலும் மகரிஷிகளின் அருள்
உணர்வை நீங்கள் சீராக அந்த அலை வரிசையில் இழுத்துச் சுவாசித்தால் ஒரு ஐந்து
நிமிடத்திலே கூட இத்தகை கொட்டாவி வரும். பார்க்கலாம்.
தியானம் ஆரம்பிக்கும் பொழுது உங்கள் உடல் வலுவாகத்
தெரிந்தாலும் கொட்டாவி வர வர உடல் வலு குறைந்து தியானத்தை நிறுத்திவிட்டுத்
தூங்கலாமா என்ற எண்ணம் கூட வரும்.
ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தியானத்தில் அமர்ந்தால்
கொட்டாவி மீண்டும் வரும்.
ஒரு மைசூர் பாகு கிளறுகின்றோம் என்றால் எந்த அளவுக்கு நெய்
விடுகின்றோமோ அது அடிபிடிக்காமல் அந்தப் பதார்த்தம் சரியாக வரும். நெய் குறைந்து
விட்டால் அப்படியே கல் போன்று சட்டியில் ஒட்டிக் கொள்ளும். எடுக்க வராது. அது போல்
தான்
1.நாம் எடுக்கும் அந்த உயர்ந்த ஆற்றல்கள் நம் உடலில் அதிக
வெப்பத்தை உருவாக்கும்போது
2.நம் உடலில் ஏற்கனவே உருவான ஊழ் வினைகளை மாற்றும் பொழுது
3.அந்தக் கொட்டாவி வரத் தான் செய்யும்.
தியானத்தில் உட்கார முடியவில்லை என்றால் மீண்டும் ஞான உபதேசங்களைப்
படிக்கலாம். அல்லது தியானத்தில் அமர்ந்து எடுக்கும் அருள் உணர்வுகளை மற்ற
வேலைகளைச் செய்து கொண்டே எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது வாழ்க்கையே தியானமாகின்றது. இப்படித்தான் பெருக்க முடியும்.
ஒரேயடியாகச் சக்தியைப் பெறவும் முடியாது. கூட்டவும் முடியாது. ஆனால் வாழ்க்கையுடன்
இணைந்த நிலைகள் கொண்டு நம்மால் மகரிஷிகளின் அருள் சக்திகளை எளிதில் பெறலாம்.
சக்தியை நமக்குக் கூட்டிக் கொள்வதும் எளிது...! என்னுடைய அனுபவம்
இது.