ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 10, 2018

இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்களுக்குத் தொழிலில் நஷ்டம் என்ற வார்த்தை வரக்கூடாது...!


ஒருவன் நமக்குக் கெடுதல் செய்கிறான். அதைக் கண்ணில் பார்க்கின்றோம். அவன் உணர்வு நுகர்ந்த பின் அந்த இயக்க அணு ஜீவ  அணுவாக நம் இரத்தத்தில் கலந்து விடுகின்றது.

அவன் உணர்வு நமக்குள் இருக்கப்படும் போது அவன் எனக்குத் துரோகம் செய்தானே...! உருப்படுவானா...? என்று அவனைப் பற்றி எண்ணுகின்றோம்.

அப்போது இந்த உணர்வலைகள் அந்த உடலில் பாய்ச்சி புரை ஓடுகிறது. சாப்பிட முடியாமல் செய்கிறது. வாகனம் ஓட்டிக் கொண்டு போனான் என்றால் அந்த வாகனத்தை ஓட்ட முடியாமல் தடைப்படுத்துகிறது. ஆக்சிடென்ட் ஆகிறது.

இதையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

1.நீங்கள் ஏதாவது முக்கியமான ஒரு வேலை செய்து கொண்டு இருக்கும் போது
2.உங்களுக்கு ஆகாதவர்கள் ஏதாவது அங்கே பேசினார்கள் என்றால்
3.உங்கள் ஞாபக சக்தி திடீரென்று மறையும்.
4.இது “புரை...!” என்ற நிலைகள்.

ஞாபக சக்தி குறைந்தது என்றால் உங்களுக்குச் சிந்திக்கும் தன்மை இல்லாமல் போய் விடும். அப்போது அந்த இடத்தில் தொழிலில் நஷ்டத்தை உண்டாக்கிவிடும்

இந்த மாதிரி ஒருவருக்கு ஒருவர் இயக்கக்கூடிய இந்த உணர்வுகள் இப்படி இருக்கின்றது. மற்றவர்கள் உணர்வு நம் உடலில் இருக்கிறது.

ஆகவே இந்தத் தியானத்தில் வந்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் நிலைகள் என்ன என்றால் தியானம் எடுத்துத் “தொழிலில் நஷ்டம்...!” என்ற வார்த்தையே இங்கே வரக்கூடாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்கள் முழுவதும் அந்தச் சக்தி கலக்க வேண்டும் என்று கொஞ்ச நேரம் சிந்தித்தீர்கள் என்றால்...
1.ஏன்...? எதனால்...? என்ற அந்த ஞானம் வரும்.
2.அப்போது அதில் எந்தக் குறைபாடு என்று அறிந்து அதைத் திருத்தி அமைக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.

ஆனல் எல்லாம் நஷ்டம் ஆகிப் போய்விட்டது...! நாளை என்ன செய்வது...? என்று பலத்தை அங்கே கொடுத்து விட்டோம் என்றால் அடுத்து நல்ல சிந்தனை வராது.

தொழிலில் நாம் வளர வேண்டும் என்றாலும் கூட சில நேரங்களில் நஷ்டம் ஆகும் பொழுது அதை வளர்த்து விட்டால் அது வலுவாகி விடும். பின் அது தான் நம்மை இயக்கும்.

அதை மாற்றுவதற்கு எந்தச் சந்தர்ப்பமாக வந்தாலும் நாம் ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொள்ள வேண்டும். அதைத் (நஷ்டம்) தூக்கி எறிந்து விட வேண்டும்.

காரணம் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை விண்ணில் செலுத்தி அதை இழுத்துச் சுவாசிக்கும் பொழுது மூக்கின் வழி நுகரப்பட்டு உயிரில் படுகின்றது.

அதாவது நம் கண்ணின் நினைவு துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்கின்றது. கண் வழியாகக் கவர்ந்த உணர்வை உயிரில் இணைத்திட வேண்டும். இணைத்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுப் பெறுகிறது.

நமக்குள் சங்கடம் வெறுப்பு போன்ற உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தாலும் அதை இங்கே தடைபடுத்தி உள்ளுக்குள் (உடலுக்குள்) போகாமல் தடைப்படுத்தி விடுகின்றது.
1.முதலில் அதை நிறுத்திப் பழக வேண்டும்.
2.ஏனென்றால் அது நம்மை இயக்கி விடக்கூடாது.
3.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெற வேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் எண்ணி நிறுத்தி விட வேண்டும்.
4.சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா...!

அடுத்த நிமிடம் அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி இந்தத் தியானத்தின் முறைப்படி நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் (தலையிலிருந்து கால வரை) வரிசைப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறும்படி பழக்கம் செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பத்தில் துன்பமோ தீமையோ வரும் போது உடனே நம் உடலை எச்சரிக்கை செய்து “துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஈஸ்வரா...!” என்று புருவ மத்தியில் எண்ணி அது வலு ஏற்றிய பிற்பாடு நம் உடலுக்குள் போவது இல்லை.

ஏனென்றால் வேதனை வெறுப்பு என்கிறது எல்லாம் வாலி. அது சக்தி வாய்ந்தது. ஆனால் அதை வென்றது துருவ நட்சத்திரம். அப்போது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் நம் உயிரிலே அது சேர்க்கப்படுகிறது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இச்சைப்படும் பொழுது இச்சாசக்தி. நம் உயிரிலே பட்டவுடனே அந்த உணர்வுகள் உடல் முழுவதற்கும் சென்று கிரியை ஆகின்றது.

அந்த மெய் ஞானியான அகஸ்தியன் அவன் எப்படித் தீமையை நீக்கினானோ அதே உணர்வு அந்த ஞானமாக நம்மை இயக்கும். ஞான சக்தி. வேதனையான உணர்வை நமக்குள் வராதபடி... நம்மை இயக்காதபடி தடுக்கும்.

இது ஒரு பழக்ககத்திற்கு வந்து விட்டது என்றால் எல்லாம் சரியாகப் போகும். தையல் மிஷினில் தைத்துப் பழகியவர்கள் மற்றவர்களிடம் பேசிக் கொண்டே “ஜர்..ர்ர்...!” என்று தைத்து விடுகின்றார்கள்.

பின்னல் ஆடையைக் கையில் பின்னுகின்றவர்களைப் பார்த்தாலும் பேசிக் கொண்டே பின்னுகின்றார்கள். அதைப் பழகாதவர்களோ பார்த்துப் பார்த்துப் பின்னினாலும் கூட ஒழுங்காக வருவது இல்லை.

அதே மாதிரித் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுக்கும் பழக்கத்திற்கு வந்து விட்டோம் என்றால் சர்வ சாதாரணமானது. “டக்...!” என்று மாற்றிக் கொள்ளலாம்.