ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 4, 2018

சொர்க்கத்திற்குப் போகும் மார்க்கம்…!


நம்முடைய தாய் தந்தையர் தான் நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். ஆனால் நம்மை வளர்த்திட எத்தனையோ வேதனைகளை அனுபவித்திருப்பார்கள். நம் தாய் தந்தையரை எத்தனையோ பேர் வேதனைப்படும்படியாகப் பேசி இருப்பார்கள்.

அந்த உயிரான்மாக்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் யாரை உற்றுப் பார்த்து வேதனையை அதிகமாகக் கவர்ந்து வைத்து இருந்தார்களோ அந்த உடலுக்குள் புகுந்து விடுகின்றார்கள்.

அங்கே சென்று மனிதனாகவும் பிறப்பதில்லை. மீண்டும் அந்த வேதனையையே வளர்த்து வளர்த்து மனிதனுடைய உணர்வுகளே முழுமையாக மறந்து பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாகி விஷமான உயிரினங்களாகப் பிறக்க நேர்கின்றது.

இது தான் நரக லோகம் என்பது.

ஆகவே அவர்களை அத்தகைய நிலைகளுக்குச் செல்லவிடாது காக்க வேண்டியது பிள்ளைகளாகிய நம் கடமை. உடலை விட்டுப் பிரிந்து சென்ற அவர்களின் உயிரான்மாக்களை நாம் உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும். அது தான் சொர்க்கலோகம் என்பது.

அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுக்குள் கலந்தவுடனே உடல் பெறும் உணர்வுகள் அந்த ஒளிக் கடலிலே கரைந்து நஞ்சுகள் அனைத்தையும் வேக வைத்துப் பஸ்பமாக்கிவிடுகின்றது.

அதே சமயம் தன் சந்ததியை வளர்த்திட நமது மூதாதையர்களும் எத்தனையோ பல பல வேதனைகள் பட்டிருப்பார்கள். அந்த வேதனையான உணர்வுகள் அனைத்தும் அவர்கள் உடலிலே நஞ்சாக விளைந்து மனிதனுடைய நல்ல செயல் அனைத்தும் மறைந்திடும் நிலையாக ஆக்கிவிடுகின்றது. (வேதனை என்றால் நஞ்சு)

நாற்பது ஐம்பது வருடத்திற்கு முன்னாடி அவர்கள் இறந்திருந்தாலும் சரி உடனடியாக இன்னொரு உடல் பெறுவதில்லை.
1.அவர்கள் இன்னொரு உடலுக்குள் புகுந்து
2.அந்த உடலையும் நஞ்சாக்கி விட்டு வெளிவந்த பின்
3.பரிணாம வளர்ச்சிக்கேற்ற இன்னொரு உடல் கிடைக்கும் வரையிலும்
4.இந்த உடலில் பட்ட வேதனைகளைத் உயிருடன் ஒன்றி வேதனை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றது.

அதன் பின் அடுத்த உடலாக நஞ்சைத் தாங்கிக் கொள்ளும்… பாம்போ தேளோ அதைப் போன்ற உடல்களில் ஈர்க்கப்படுமேயானால் அங்கே சென்று நஞ்சினை உணவாக உட்கொள்ளும் உடலாக அமைந்து அதனின் நிலைகள் பரிணாம வளர்ச்சியில் வரும்.

அந்த மாதிரி ஆகாதபடி நம்மை ஈன்று நமக்காக வேதனைப்பட்ட இன்னொரு உடலுக்குள் சென்ற அந்த முன்னோர்களின் உயிரான்மாக்களை மீண்டும் நஞ்சான உடலாக இன்னொரு பிறவியில்லாத நிலைகளில் ஆக்கச் செய்வது குழந்தையின் நிலைகளில் இருக்கின்றது.

அதனால் தான் குழந்தைகள் இல்லை என்றால் அவர்களுக்கு நரக லோகம் தான் என்பார்கள்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் ஈஸ்வரா என்று இவ்வாறு தியானித்து அந்தக் குழந்தைகள் உந்தித் தள்ள முடியும்.

அதாவது
1.ஒரு இராக்கெட்டை எப்படி உந்து விசையினுடைய சக்தி கொண்டு விண்ணிலே செலுத்தச் செய்து
2.அதிலே பொருதி வைத்த எந்திரத்தின் துணை கொண்டு விண்ணில் இருக்கக்கூடிய ஆற்றலை விஞ்ஞானிகள் இன்று அறிகின்றனரோ
3.அதைப்போல நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை
4.விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் உந்தித் தள்ளி இணைத்து அங்கே சுழலச் செய்ய முடியும்.

விண்ணின் ஆற்றலை எடுத்து வளர்த்துக் கொண்ட எத்தனை பெரிய மகா ரிஷியானாலும் சரி… அவர்கள் மெய் ஒளியைக் கண்டு எடுத்தாலும் சரி…!
1.அவர்களின் ஆன்மாவை உந்தி…
2.விண்ணிலே தள்ள யாரும் இல்லை என்றால்
3.இந்தப் பூமியின் ஈர்ப்பிலே தான் சுற்றிக் கொண்டு இருப்பார்கள்.

அவர்களுடைய உணர்வின் தன்மையைப் பல ஆயிரம் பேர் எடுத்து இந்த உணர்வின் சக்தியை வளர்த்துக் கொண்டு அந்த ஆன்மாவை உந்தி விண்வெளியில் அனுப்பினால் தான் அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும். உந்து விசை இல்லை என்றால் அந்த உயிரான்மா தன்னிச்சையாகப் போகமுடியாது.

ஆகவே விண்ணுலகம் செல்ல வேண்டும் என்றால்
1.இங்கே தரையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் உணர்வின் தன்மை கொண்டு
2.அந்த உந்து விசை கொண்டு விண்ணிலே வீச வேண்டும்…!
3.அப்படிச் சென்றவர்கள் முற்காலங்களில் பலர் உண்டு.

உயிருடன் ஒன்றிணைந்து மெய் ஒளி கண்ட அந்த மெய் உணர்வுகளை அங்கே ஒளிச் சரீரமாக ஆக்குவதற்குதான் அன்றைய நிலையில் இந்த முறைகளை ஞானிகள் சொன்னார்கள்.