இன்று விஞ்ஞான உலகில் சிறு குழந்தைக்குக் கூட விஞ்ஞான அறிவு ஊட்டப்படுகின்றது.
ஆனால், இந்த விஞ்ஞானக் காலத்தில் இருந்து கொண்டு இன்னமும் சாமியாரைப் போய்
பார்த்தால் நமக்கு எல்லாம் நடக்கும் என்றும் சாமிக்குச் அபிஷேகம் செய்து அழுதால் வரும்
என்ற நம்பிக்கையில் நாம் இன்னும் அழுது தொங்கிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?
சாமியையும் சாமியாரையும் பார்த்துவிட்டால் கஷ்டத்திலிருந்து விடுபடலாம் என்ற
இந்த எண்ணத்தில் தான் இருக்கின்றார்கள். என்னிடம் வருபவர்களைப் பாருங்கள்.
என் வீட்டில் ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி அழுகின்றார்கள்.
கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும் என்று நல்ல வாக்குக் கொடுங்கள் கேட்பதற்கு ஆள் இல்லை.
ஒருவர் திட்டுவதைக் கேட்டுப் பதிவு செய்கின்றீர்கள். அவரை எண்ணும் போதெல்லாம் உங்கள்
உணர்வு பலவீனம் அடைகின்றது.
இங்கு தபோவனத்திற்கு வந்தவுடனே எங்கள் வீட்டில் இருக்கின்ற கஷ்டமெல்லாம் நீங்க
வேண்டும். குழந்தைக்கு நல்ல ஞானம் வர வேண்டும். என் வீட்டுக்காரர் என்னோடு ஒன்றி
வாழ வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு அந்த அருள் சக்தி வேண்டும் என்று இப்படி
யாராவது ஒருவர் கேளுங்கள் என்று ஆயிரம் தடவை சொல்கிறேன்.
நான் இதைச் சொல்லிவிட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து திரும்பவும் என்ன
சொல்கிறார்கள். எங்கள் வீட்டில் இன்னும் ஒற்றுமையே இல்லை என்று சொல்கிறார்கள்.
விதையைப் போட்டவுடன் செடி வந்துவிடுமா? அதற்கு வேண்டிய பக்குவங்களை இப்படிச்
செய்து கொள்ளுங்கள் என்று யாம் சொன்னால் அவர்களை நம்புவதில்லை.
சாமி அதைச் செய்து தருவார். நாம் சாமிக்கு அபிஷேகம் செய்தால் திருப்பித்
தருவார்கள் அல்லவா. ஆக, இப்படிப்பட்ட எண்ணங்கள் கொண்டு தான் வருகின்றார்கள்.
ஆனால், நாம் எண்ணிய உணர்வைத் தான் நம் உயிர் இயக்குகின்றது. இந்த உணர்வின்
தன்மையை நம் உடலாக ஆக்குகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்தக் காலத்தில் புலஸ்தியர் என்பவர்கள் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் தெரிந்து
கொண்டவர்கள். அந்த மூதாதையர்கள் தெரிந்து கொண்டதால் அவர்கள் புலஸ்தியர்.
எந்தெந்தத் தாவர இனங்களை நுகர்கின்றோமோ நுகர்ந்தபின் அந்த எண்ணங்கள்
வருகின்றது. அவ்வாறு எண்ணங்கள் வரப்படும்போது அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
அந்த உணர்ச்சிக்கொப்ப அவனுடைய செயல் ஆகின்றது. அந்த உணர்ச்சிகளின்
தூண்டுதலுக்கு ஒப்ப உடலின் அமைப்பாகின்றது. இப்பொழுது வேதனை என்று ஆனபின் அந்த
உணர்ச்சிகளைத் தூண்டியவுடனே என்ன செய்கின்றது?
“அம்மா.., அப்பா...,” என்று உடல் சோர்வடைகின்றது. அப்பொழுது ஏதாவது பலமாகச்
செய்ய முடிகின்றதா? ஆனால், உடல் பலமாக இருக்கின்றது. வேதனை என்ற உணர்வான பின் உங்களுக்குள்
எல்லாவற்றையும் இயக்குகின்றது. உங்களால் பலமாக எதாவது வேலை செய்ய முடிகின்றதா?
என்னால் முடியவில்லை என்று மயக்கம் வருகின்றது. ஆனால், உங்கள் உடல்
நல்லாயிருக்கும். ஒரு நிமிடத்தில் நுகர்ந்த நிலைகளால் இந்த நிலை ஏற்படுகின்றது.
உங்கள் பையன் மேல் ரொம்பப் பிரியமாக இருக்கின்றீர்கள் உங்கள் பையன் சேஷ்டை
பண்ணி ரகளை பண்ணிவிட்டான் என்று உங்களிடம் சொல்கிறார்கள்.
உங்கள் பையன் இப்படியெல்லாம் தவறுகள் செய்து கொண்டிருக்கின்றான் என்று தெரிந்தவுடன்
என்ன ஆகின்றது? பையனை எண்ணி “இப்படிச் செய்கின்றானே.., இப்படிச் செய்கின்றானே..,”
இப்படி என்று உங்களுக்கு மயக்கம் வருகின்றதா இல்லையா?
மயக்கப்படச் செய்வது யார்? நுகர்ந்த அந்த உணர்வுகள் உயிரிலே பட்டவுடன் உணர்ச்சிகள்
இயக்கி அந்த நிலை அடையச் செய்கின்றது. இதைத்தான் நந்தீஸ்வரன் சிவனுக்குக்
கணக்குப்பிள்ளை என்று காட்டினார்கள்.
நம் உயிர் ஈசனாக இருந்து இயக்கினாலும் நாம் நுகரும் உணர்வுகள் (நந்தி)
நந்தீஸ்வரனாக நம்மை இயக்குகின்றது. இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே
நல்லது.
ஆகவே, உங்களையறியாது இயக்கிக் கொண்டிருக்கும் இதைப் போன்ற தீமைகளை நீக்குவதற்குத்தான்
தீமையை வென்ற மகரிஷிகளின் அருளாற்றலைத் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.
யாம் பதிவாக்கிய மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் எண்ணும்போது உங்கள்
உயிர் அதை அணுவாக உருவாக்கும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் விளையத் தொடங்கினால் எத்தகையை
தீமைகளிலிருந்தும் உங்களால் விடுபட முடியும். இது ஒன்றும் கடினமல்ல.