ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 22, 2018

நல்ல நேரம்...கெட்ட நேரம்... பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது...!


தன் நிலை என்பது என்னப்பா...? தன் நிலையை மறந்திடாமல் ஜெப நிலையைக் கூட்டிக் கொள் என்பது என்னப்பா..? தன் நிலை என்றால் தியானத்தில் (ஜெப நிலையில்) இருப்பது மட்டும் தன் நிலை அல்ல...!

மற்றவர்கள் எதிர்ச் சொல்களாக உன்னை நோக்கிப் பேசும் பொழுது அதனால் உன் நிலைக்குக் கோபதாபங்கள் வரும்பொழுது உன் எண்ணத்தில் கலக்கவிட்டு அதனால் வரும் சோர்வையும் கோபத்தையும் உன்னுள் அடக்கும் பொழுது நீ வீசிடும் எதிர்ச் சொல்தான் தன் நிலையை மறந்து நீ பேசும் சொல்.

மனித வாழ்க்கையில் குடும்ப நிலையில் குறையும் நிறையும் எல்லாமே கலந்துதான் வந்துவிடும். அந்நிலையில் மனச் சோர்வை வளரவிட்டு அதி சந்தோஷத்தை வளரவிட்டு வாழ்பவன் எல்லாம் தன் நிலை மறந்து வாழ்பவன்தான்.
1.சுவாச நிலைக்குக் கடும் எதிரிகள் தான்
2.கோபமும்... அதிகோபமும்... மிக மகிழ்ச்சியும்...!

மனித வாழ்க்கையில் அன்பு பாசம் ஆசை செயல் கடமை எல்லாமே அவசியமானதுதான். வாழ்க்கை நிலையில் வரும் கஷ்டத்தை எண்ணிக் கலங்கி அந்நிலையில் அவன் விடும் சுவாசம் அவன் எண்ண நிலையிலேயே கலந்து மனச் சோர்வையும் பெரும் சஞ்சலத்தையும் அடைந்து அந்நிலையில் அவன் உடல் நிலையையும் பாதித்து அவன் வாழ்க்கை நிலையில் தொழில் நிலையில் எல்லாமே இக்கஷ்ட நிலைகள் தான் தெரிந்திடும்.

அந்நிலையில் இருப்பவன் விடும் சுவாச நிலையினால் தன் குடும்ப நிலை... அந்த இல்லத்தின் தன்மை... அவனைச் சார்ந்தோரின் நிலை...! எல்லாமே மாறுபட்டுப் பெரும் சலிப்பு நிலையில் நிலை பெறுகிறது.

அப்படி ஆனதும் “என் நேரம் சரியாக இல்லை...!” என்று பல ஜோசியங்களைப் பார்த்துப் பாவ பரிகாரங்களைச் செய்து எல்லாவற்றையுமே இம்மனிதர்கள் குட்டிச்சுவர் செய்து விடுகிறார்கள்.
1.ஆண்டவனின் மேல் பழியைப் போடுகிறார்கள்
2.மற்றவர்களின் வாழ்க்கை எல்லாம் நல்ல நிலையில் உள்ளது... எனக்கு மட்டும் ஏன் இப்படிக் கொடுமை செய்கிறாய்...?
3.நான் என்ன பாவம் செய்தேனோ..? என்றெல்லாம் வேண்டுகிறார்களப்பா.

இந்நிலைக்கு ஆண்டவன் என்னப்பா செய்வான்..?

சந்தோஷ நிலையில் உள்ள பொழுது சகலத்தையும் பெற்று விடுகிறான். அந்நிலையில் ஆண்டவன் எனக்களித்தது... ஆண்டவன் எனக்களித்தது...! என்று சொல்கின்றான். ஆண்டவனா அவனுக்கு அளித்தான்...?

என் நேரம் நல்ல நேரம் என்கின்றான்...!
1.இவன் நேரம் மட்டுமா நல்ல நேரம்...?
2.எல்லா நேரங்களும் ஒரே நேரம் தான்...!
3.அவனவன் மன நிலையை வைத்து அவன் சுவாச நிலையில் வருவதுதான் நல்ல நேரமும் கெட்ட நேரமும்.

தன் நிலை மறந்திடாமல் என்று முதலில் சொன்னேன். எந்த நிலை வந்தாலும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாதவனுக்கு இப்பொழுது சொல்லிய நல்ல நேரமும் கெட்ட நேரமும் வந்து அண்டிடாதப்பா...!

அதி சந்தோஷ நிலையில் உள்ளவனுக்கும் தன் நிலையில் அவன் விடும் சுவாச எண்ண அலையில் அவனுக்கும் தான் பல வியாதிகள் வந்து அண்டுகின்றன. சலிப்புத் தன்மையில் உள்ளவனுக்கும் வியாதி வருகின்றது.
1.வியாதியை விதி என்கின்றார்கள்.
2.வியாதியும் விதியும் வருவதெல்லாம் இம்மனநிலையில் இருந்துதான்.

மன நிலையை எந்நிலைக்கும் மாற்றிடாமல் அந்நிலையில் விடும் சுவாச நிலைதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை நிலையையே நடத்திச் செல்கின்றது.
1.ஆண்டவன் செய்யவில்லை...
2.அவனாகவே செய்வதுதான் அவன் வாழ்க்கை நிலையெல்லாமே.

என்னப்பா புரிந்ததா...?

ஆகவே ஒருவரின் எதிர்ப்புச் சொல்லோ பழிச் சொல்லோ ஒருவரின் குறையோ மற்றவரின் சந்தோஷமோ எதுவுமே தன் நிலையில் இருப்பவனுக்கு அவன் மன எண்ணத்தில் வந்து தாக்கும் பொழுது அந்நிலையின் எதிர்ப்பு அவனை அண்டாமல்
1.தான் எடுத்த ஈஸ்வர சக்தியின் துணை கொண்டு தன்னைக் காத்து
2.அந்த அருள் ஒளியை மற்றவருக்குள் பாய்ச்சுவது தான்...! தன் நிலையில் இருப்பது என்பது...!