ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 14, 2018

தியானிக்கும் போது “நினைவின் ஆற்றல்” மகரிஷிகளின் பால் விண்ணிலே இருக்க வேண்டும்...!

நல்ல மனிதனின் உணர்வை எண்ணத்தை நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கிவிட்டால் அதைத் திருப்பி எண்ணும் போது வினைக்கு நாயகனாக
நல்ல செயல்களைச் செயல்படுத்தும் சக்தியாக
நமக்குள் இயங்க வருகின்றது.

அந்த அணுக்களின் தன்மை நமக்குள் தூய்மைப்படுத்தும் நிலைகளும்
உடலை மகிழச் செய்யும் நிலைகளும்
மகிழ்ந்திடும் ஆன்மாவாகவும்
மகிழ்ச்சி பெறும் உணர்வின் இயக்கமாகவும்
நம் உடலுக்குள் அது இயங்கத் தொடங்கிவிடுகின்றது.

அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை நீங்கள் நுகர்ந்து இப்பொழுது யாம் சொல்லும் போது பரமாத்மாவில் நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்று மண்டலத்தில் கலக்கின்றது.

யாம் உபதேசிக்கும் போது நீங்கள் எண்ணிக் கூர்மையாக உற்றுப் பார்க்கும் போது என்ன நடக்கின்றது?

·         கருவிழி ருக்மணி ஊழ்வினையாகப் பதிவாக்கிவிடுகின்றது.
·         கண்ணின்காந்தப்புலனோ உங்களுடைய ஆன்மாவாக மாற்றுகின்றது.
·         உயிருக்குள் இயக்கும் காந்தம் லட்சுமி அதைக் கவர்கின்றது
·         உடலுக்குள் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.
·         உங்களுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி விளையத் தொடங்குகின்றது.

ஏனென்றால், மீண்டும் மீண்டும் இதைச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்.

சாமி (ஞானகுரு) சொல்லும் போது கேட்டேன்.
அப்புறம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை
என்று தலையைச் சொறிபவர்கள் நிறையப் பேர் உண்டு.

“உபதேசித்தீர்கள்..., நாங்கள் கேட்டோம்.
நன்றாக இருந்தது...,
அப்புறம் என்ன என்றே தெரியவில்லை” என்பார்கள்.

ஆகையினால் தான் திரும்ப உங்களுக்குள் விளக்கமாகக் கொடுத்துவிட்டோம் என்றால் இது உங்களுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.

பள்ளியிலே நாம் பாடங்கள் படிக்கும் போது ஒரு தரம் நோட்டு புத்தகங்களைப் படித்துவிட்டு திருப்பி மூடிவிட்டால் என்ன செய்யும்?
படிக்கும் போது நினைவிருக்கும்,
மூடிய பின் மறைந்துவிடும்.

மீண்டும் புத்தகத்தைத் திறந்து பார்த்தால் தான் அதை நாம் மீண்டும் நினைவு கொள்ள முடியும்.

இப்படிப் பல முறை பதிந்துவிட்டால்
பதிந்த நிலைகள் நினைவிலே ஆன்மாவிலே பெருகிவிடும்.
பின், அந்த நினைவின் ஆற்றல்
நமக்குள் இயக்கத் தொடங்கிவிடும்.

அந்த மகரிஷிகளின் நினைவின் ஆற்றல் உங்களுக்குள் வளர்வதற்கும் அது உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக உங்கள் அனைவருக்குள்ளும் வளரவேண்டும் என்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.