ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2018

நல்லதைக் காப்பதற்குத் தேவையான போராட்டம்…!


நல்ல அணுக்கள் நம் உடலைச் சீராக்குகின்றது. தீமையான அணுக்கள் நம் உடலை நலியச் செய்கின்றது. தீமையின் உணர்வுகள் நமக்குள் வளர்க்கப்படும் போது தீமையின் அணுவே நமக்குள் உருவாகின்றது. நல்ல அணுக்களைக் கொன்று குவிக்கின்றது. ஆனாலும்
1.தீமைகள் இல்லை என்றாலும் நம் உலகம் உய்வதில்லை.
2.கரண்டிற்கு நெகடிவ் பாசிட்டிவ் (+/-) என்ற எதிர் நிலை இல்லை என்றால் சுழற்சி ஆகாது.

இதைப் போல எதிர் நிலை இருக்கும் போது தான் தன்னைக் காத்திடும் உணர்வினுடைய நிலைகள் இயங்கிக் காத்திடும் எண்ணம் கொள்கின்றது. காத்திடும் எண்ணம் இல்லை என்றால் நம்மைக் காத்திடவும் முடியாது.

அருள் ஞானிகள் தன்னைக் காத்திடும் உணர்வை வளர்த்தார்கள். தன் உடலின் தன்மை ஒளியாக மாற்றிச் சென்றார்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியைத்தான் இந்த உபதேச வாயிலாக ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

அதனின் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வினை வளர்த்துத் தீமையற்ற நிலையை உங்கள் உடலிலே உருவாக்கிக் கொள்ளுங்கள்.

காலையில் எழுந்தபின் இதைப்போல சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நூறு முறை சொல்லுங்கள். இரவிலே சொன்னது போன்றே உங்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் தீமையற்றதாக இருக்க வேண்டுமோ அவை அனைத்தும் உங்கள் எண்ணத்தில் கொண்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.

கணவன் மனைவி நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும். எங்கள் குழந்தைகள் சீராகக் கல்வி கற்க வேண்டும். அவர்கள்  உடல் நலம் பெற வேண்டும். அன்னை தந்தையின் அருள் சொற்கள் எங்களுக்கு என்றும் வழிகாட்டியாக அமைய வேண்டும் என்று இவ்வாறு எண்ணுங்கள்.

பின் அன்னை தந்தையை வணங்கி விட்டு அருள் மகரிஷியின் உணர்வினை மனதின் முன்னணியில் வைத்துக் கொண்டு
1.என் வாழ்க்கை இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற அந்த உணர்வினை வளர்த்து
2.ஒவ்வொரு நிமிடமும் அதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்

உங்கள் நல்ல குணங்களை சுதந்திரமாக இயங்கப் பழகிக் கொள்ளுங்கள். நல்ல குணங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு “இத்தகைய போராட்டங்கள் தேவை…!”