வாழ்க்கையில் எந்த ஒரு வேதனை வந்தாலும் அதற்குக்
காரணம் அதன் மீது நாம் வைக்கும் “பாசம் தான்…!”
பாசம் வைக்கும் பொழுதே “இப்படி இருக்க வேண்டும்…
இப்படித்தான் நடக்க வேண்டும்…. இப்படித்தான் எல்லாமே வர வேண்டும்…!” என்று கட்டாயமாகின்றது.
அப்பொழுது எதிர்ப்பார்ப்பும் அதிகமாகின்றது.
ஒவ்வொரு தடவையும் அது நடக்கவில்லை எனும் பொழுது
உடனே நமக்குச் சோர்வு வருகிறது. யார் காரணமோ அல்லது எது காரணமோ அதன் மேல் கோபம் வருகிறது.
அதை மாற்ற முயல்கிறோம்.
கடைசியில் ஒன்றும் முடியவில்லை என்கிற பொழுது “வேதனை
தான்” மிச்சமாகின்றது. ஆனால்
பாசம் வைப்பது தப்பா…! அது எப்படித் தப்பாகும்…? என்போம்.
நம்முடைய பாசமும் பற்றும் மகரிஷிகளின் அருள் சக்தியைப்
பெறுவதில் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த நோக்கத்தில் சென்றால் ஒவ்வொரு தடவையும்
நமக்குக் காரியங்கள் நடைபெறவில்லை என்றாலும் நாம் எண்ணியது நடக்கவில்லை என்றாலும்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் எடுத்தது மிச்சமாகின்றது.
2.அது நம்முடைய சேமிப்பாகின்றது.. அது நம் உயிரான்மாவிற்குச்
சேமிக்கும் அழியாச் சொத்தாகின்றது.
3.நாம் எடுத்த அந்த அருள் சக்தியோ உண்மைகள் அனைத்தையும்
உணர்த்துகின்றது.
4.பாசத்தை எதன் மீது வைக்க வேண்டும் என்று உணர வைக்கின்றது
5.உணர்ந்த உண்மைகளை வைத்து அடுத்து நாம் செயல்படும்
சரியான வழியையும் (மெய் வழி) காட்டுகின்றது,
ஆகவே உடல் பற்று கொண்டு நாம் வைக்கும் பாசம் எல்லா
வகையிலும் நமக்கு இடைஞ்சல் செய்து கொண்டேதான் இருக்கும்.
அது சரியில்லை.. இது இப்படி ஆகிறது… அவன் ஏமாற்றுகிறான்…
என் வீட்டிலேயே என்னை நம்ப மாட்டேன் என்கிறார்கள்…! யாரும் சரியில்லை… உலகமே சரியில்லை…!
என்ற நிலைக்குத்தான் நம்மை அழைத்துச் செல்லும். எதைச் செய்தாலும் ஒரே… இம்சையாக இருக்கிறது…!
என்று வாழ்க்கையே வேதனையாகத்தான் இருக்கும்.
சிறிது நேரம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அடுத்த கணமே
நம் உணர்வை மாற்றிவிடும்.
உயிர் பற்று கொண்டு.. நாம் மகரிஷிகளின் அருள் சக்தியைப்
பெறும் பாசம் எந்த வகையிலும் நம்மை நல் வழிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.
சரியில்லாதை… சரியாகாததை… இடைஞ்சல் செய்பவர்களை…
இப்படி எதுவாக இருந்தாலும்
1.அதை மாற்ற வேண்டும் அதை மாற்றி அமைப்போம்
2.இவர்களுக்கு இப்படிச் செய்து பார்ப்போம் என்று
3.மறுபடி மறுபடி நம் நல்ல அணுக்களை உற்சாகப்படுத்தி
4.அந்த அருள் உணர்வுகளைப் பெறவேண்டும் என்ற ஆசையையும்
ஆர்வத்தையும் வலுவையும் வேகத்தையும் கூட்டிக் கொண்டே வரும்…!
ஒவ்வொரு தடவையும் எப்படியாவது அதை நல்லதாக்க வேண்டும்
நல்லதாக்க வேண்டும் என்ற எண்ண வலு கூடிக் கூடி மகரிஷிகளின் அருள் சக்தி மட்டும் நமக்குப்
போதும்...! என்ற நிலைக்கு நம் உயிர் உருவாக்கிவிடும்.
1.எந்தத் தீமை செய்யும் உணர்வும் நம் ஆன்மாவில்
ஊடுருவி நுழைய முடியாது.
2.*நம்மை ஆட்டிப் படைக்க முடியாது.*
மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற பாசத்தையும்
பற்றையும் வளர்த்துக் கொண்டால் உயர்ந்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.