ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 29, 2018

ஒருவர் திடீரென்று சிறிய வயதிலேயே இறந்து விட்டால் அதைப் பார்த்துப் பதறுகிறோம்… மனம் பதைபதைக்கிறது… அதை எப்படி மாற்றுவது…?


கேள்வி:-
ஒரு சிறு வயது ஆத்மா தன் உடலை விட்டுச் சென்று விட்டது. நான் அவ்வளவாப் பழகவில்லை இருப்பினும். என் மனம் உடல் மிகவும் பதறியது.

இந்த நிலை ஆன்மீக முயற்சியில் இருக்கும் எனக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன பயிற்சி எடுக்க வேண்டும். என் மனம் நான் சொல்வதைக் கேட்காமல் பதை பதைக்கின்றது.

என் நிலையை விளக்குங்கள்...!

பதில்:-
இறப்பது யாராக இருந்தாலும் சரி
1.சிறு வயதோ முதிர்ந்தவரோ..
2.நல்லவரோ கெட்டவரோ…
3.வசதியானவரோ வசதியில்லாதவரோ…
4.நோயாளியோ திடகாத்திரமானவரோ…
5.சொந்தமோ பகையோ… ஆணோ பெண்ணோ…!
அவர்கள் உயிர் என்றும் அழிவதில்லை. உடல்கள் தான் அழிகின்றது. அந்த உயிரை யாரும் அழிக்க முடியாது. இதை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

உடலுடன் வாழ்பவர்களுக்கு விண் செல்லும் பாதையைக் காட்டுவதும் உடலை விட்டுப் பிரிந்து செல்பவர்களை விண்ணுக்கு அனுப்பி அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும் என்பதையும்…! இந்த இரண்டு நிலையைததான் என்னுடைய முன்னணியில் நான் வைத்துச் செய்து கொண்டிருக்கின்றேன்.

அது எப்படி அவ்வாறு இருக்க முடியும்…? என்று குழம்ப வேண்டியதில்லை.

இதற்கு முன்னாடி காலம் காலமாக இறந்தவர்களை எல்லாம் சற்று சிந்தித்துப் பாருங்கள். அதிலே மேலே சொல்லப்பட்ட எல்லா மனிதர்களும் அடங்குவார்கள். மற்றவர்கள் மீது பாசம் உங்களுக்கு மட்டும் இல்லை. எல்லா மனிதர்களும் பாசத்துடன் தான் வாழ்கிறார்கள்.

ஆனால் பாசத்துடன் வாழ்ந்தாலும் இறந்தவர்களைப் பற்றி எத்தனை நாள் எண்ணுகிறார்கள்…? எதற்காக எண்ணுகிறார்கள்..? எப்படி எண்ணுகிறார்கள்…? என்று பார்த்தால் அதில் ஒன்றும் முழுமையான அர்த்தம் இருக்காது. வருத்தமும் படுவார்கள். பின் சமாதானமும் பட்டுக் கொள்வார்கள். அவ்வளவு தான்…!

நாளை நாமும் இந்த உடலை விட்டு அகன்றால் இதே போல் தான் நினைப்பார்கள். பேசுவார்கள்…! ஒரு நாளோ ஒரு மாதமோ ஒரு வருடமோ அவ்வளவு தான் அதற்கு மேல் எண்ணிப் பார்க்கும் நிலை வராது. (விதிவிலக்காகச் சிலர் இருப்பார்கள் – ஆனால் கூடக் கொஞ்ச நாள் எண்ணுவார்கள் அவ்வளவு தான்..)

1.முன்னாடி இறந்தவர்களைப் பற்றிய அக்கறை இந்த அளவுக்கு இருக்கும் நிலையில்
2.ஒருவரைப் பார்த்து இறந்துவிட்டாரே என்று நாம் பதைபதைப்பதால் எந்தப் பலனும் இல்லை.

நாம் வேதனைப்பட்டால் இறந்தவர் திரும்ப வருவார் என்றால் பரவாயில்லை. நம்மையே நாம் காக்க முடியாத போது நாம் வேதனைப்பட்டு யார் யாரைக் காப்பது…?

ஆகவே நாம் மன பலம் கொண்டு சரி… அவர் இறந்து விட்டார்…! பிறவி என்ற இந்தத் துன்பக் கடலில் இருந்து விடுபட்டு அவர் என்றுமே பேரின்பப் பெரு வாழ்வாக அழியாத ஒளியின் சரீரம் பெறவேண்டும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று அதைத்தான் எண்ண வேண்டும்.

இதைச் செய்தால் வேதனையும் துடிப்பும் கலக்கமும் நமக்கு வராது. அதே சமயத்தில் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து அது புனிதம் பெறுகின்றது. அந்த ஆன்மா மூலம் நாம் விண்ணிலிருந்து உயர்ந்த சக்தியைப் பெறவும் ஏதுவாகின்றது.

இது தான் ஞானிகள் காட்டிய மெய் வழி.

ஆனால் நாம் மனிதர்களாக இருந்து கொண்டு “இரக்கப்படுகிறேன்…!” என்ற பேரில் தானும் நன்மை அடையாதபடி உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களையும் விண் செலுத்த முடியாதபடி மீண்டும் மீண்டும் இந்த உடல் பெறும் உணர்வுகளை வளர்த்து விஷத்தைச் சேமிக்கத்தான் பழகி வைத்திருக்கின்றோம்.

இதை எல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.