ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2018

புறக்கண்ணின் இயக்கமும்... அகக்கண்ணின் செயலும்...!


பிறருடைய வேதனைகளைக் கேட்டறிந்து பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து உதவி செய்யும் பண்புடன் நாம் சென்றாலும் இந்தப் பண்பால் கவரப்பட்ட உணர்வுகள் நம் உடலுக்குள் இயக்கித்தான் அந்தப் பண்பின் அன்பால் அவர்களுக்கு நன்மையைச் செய்கின்றோம்.

அதன் மூலம் நன்மைகளை அவர்களுக்குச் செய்தாலும் அவரின் உணர்வுகள் நமக்குள் வந்தபின்
1.சூரியன் எவ்வாறு தனக்குள் வரும் நஞ்சினை வெளியிலேயே மோதி வீழ்த்துகின்றதோ
2,மகரிஷிகள் எவ்வாறு தீமைகளை வீழ்த்தி உணர்வை ஒளியாக (நன்மையின் சக்தியாக) மாற்றிக் கொண்டார்களோ
3.அதைப் போல நாமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அந்தத் தீமைகளை வீழ்த்திட வேண்டும்,

அது எவ்வாறு…?

நாம் கண் கொண்டு பார்க்கும் உணர்வின் தன்மைகள் வெளியிலிருந்து தான் நம் ஆன்மாவிற்குள் வருகின்றது. ஆன்மாவில் வந்த பின் தான் மூக்கின் வழியாகச் சுவாசிக்கச் செய்து அதைப் புருவ மத்தியிலிருக்கும் நம் உயிர் நுகர்கின்றது.

உயிரிலே பட்ட பின் இந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கி நம் உடலுக்குள் அந்தச் சத்தைப் பரப்புகின்றது.

அதாவது தீங்கு செய்கின்றான்... தீங்குடன் இருக்கின்றான்... வேதனைப்படுகிறான்...! என்ற இந்த உணர்வுகளை எல்லாம் கண் கவர்ந்தாலும் இங்கே ஆன்மாவாக மாற்றி உயிரின் இயக்கத்தால் ஈர்த்து உணர்வின் அலைகளைப் பரப்பி “அகக்கண்ணாக...! இருந்து நமக்குள் உணர்த்துகின்றது உயிர்.

1.புறக்கண்களால் நாம் பார்த்துக் கவர்ந்த உணர்வுகளை நம் ஆன்மாவாக மாற்றி
2.அது உயிருடன் ஒன்றும் பொழுது இதை அகக்கண்ணாக மாற்றி (உள் உணர்வாக) உடலுக்குள் உணர்த்துகின்றது.
3.இப்படித்தான் பிற தீமைகள் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

இதைப் போன்ற விளைவுகளிலிருந்து தப்புவதற்குத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற வலுவான உணர்வைத் தனக்குள் பதிவு செய்து புறக்கண்ணின் நினைவை அகக்கண்ணான உயிருடன் ஒன்றி உள்முகமாகத் தனக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

இப்படிப் பல முறை சொல்லி உள்ளே செலுத்தும்போது நம்மை அறியாத தீமைகளை அகற்றுவதும் அந்த ஞானியின் உணர்வு இங்கே வரப்படும் போது தான் நம் ஆன்மாவில் இருக்கும் அந்தத் தீமைகளைப் பிளக்கவும் செய்கின்றது.

தீமையின் தன்மையை பிளக்கும் இந்த நிலையைத்தான் விநாயகர் தத்துவத்திலேயும் காட்டப்பட்டது. மாரியம்மன் ஆலயத்திலும் காட்டப்படுகின்றது.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் செலுத்தி நம் உடலில் உட்புகுந்த தீமைகளைப் பொசுக்க வேண்டும். அதாவது
1.வெகு தொலைவிலேயே...!
2.நம் ஆன்மாவில் வரும் போதே..!
3.அந்தத் தீமைகளை அகற்றிடல் வேண்டும் என்ற மகரிஷிகள் காட்டிய பேருண்மையை நாம் உணர்வோம் என்றால்
4.நமது வாழ்க்கையில் பேரின்பத்தை அடையும் நிலை பெறுகின்றோம்.

“எந்த மகரிஷியின் உணர்வை...!” நமக்குள் அதிகமாக வளர்க்கின்றமோ இந்த உடலை விட்டு நாம் அகன்ற பின் நாம் அங்கே அவர்களின் அருள் வட்டத்திற்குள் செல்கின்றோம்.

ஒருவன் நம்மை வேதனைப்படுத்துகின்றான் என்றால் அவனை எண்ணி எண்ணி “எனக்குத் துன்பம் செய்தான்...! என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் இறந்த பின் அவன் உடலிலே தான் சேர்கின்றோம்.

குடும்பத்தில் பாசத்தால் “என் பையன் அடுத்து என்ன செய்வான்...! என்று எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை வரும் போது பையன் உடலிலே சென்று நாம் நோயைத் தான் உருவாக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து மனிதன் விலகி அந்த மெய் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பெருக்கி மெய்ப் பொருளை நாம் காண வேண்டும்.

ஆகவே அந்த மகா ஞானிகள் நமக்குக் காட்டிய அந்தச் சாஸ்திரத்தைத் தெளிவாக எடுத்து அந்தச் சாஸ்திர விதிப்படி உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.