ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 6, 2018

நல் வழியில் நடப்பது பற்றி சிறிய குழந்தைகளுக்கு ஞானகுரு கொடுத்த சுதந்திர தின போதனைகள்..!


சுதந்திரம் என்றால் எது என்று நீங்கள் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.உங்களுக்குத் தீடீர் தீடீரென்று கோபம் வரும். சோம்பேறித்தனம் வரும்.
2.இது எல்லாம் உங்களை அடக்குகின்றது. உங்களை அடிமைப்படுத்துகின்றது. (எது…?)
3.கோபம் வருவது சலிப்பு வருவது சங்கடம் வருவது வெறுப்பு வருவதெல்லாம் உங்கள் நல்ல குணத்தைச் சுதந்திரமாக இயக்காதபடி உங்களை அடக்குகின்றது… இல்லையா…!

அதிலிருந்து நீங்கள் விடுபட்டு உங்கள் நல்ல குணம் சுதந்திரமாக வாழ வேண்டும். உங்கள் நல்ல குணங்கள் உங்கள் உடலில் சுதந்திரமாக இருந்தால் தான்
1.நீங்கள் நன்றாகப் படிக்க முடியும்.
2.அம்மா அப்பா சொன்னபடி கேட்க முடியும்.
3.ரோட்டிலே யாராவது தவறு செய்தாலும் அந்தத் தவறான நிலைகள் சிக்காது உங்கள் அந்த நல்ல குணம் உங்களை விலக்கிக் கொண்டு வரும்.
4.அம்மா அப்பா சொல்லும் வேலைகளை உடனே செய்யச் சொல்லும்.
5.பள்ளிக்கூடத்திற்கு வந்தால்… ஆசிரியர் என்ன சொல்கிறார்…? என்ற நிலையைக் கேட்டு நடந்து
6.அந்த நல்ல குணம் உங்களைப் படிப்பில் சிறந்தவராகக் கொண்டு வரும்.

ஆகவே நல்ல குணத்திற்குச் சுதந்திரம் வேண்டும். உங்களை அடிமைப்படுத்தும் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் அதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.

இதை ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் போதும் சரி படுக்கப் போகும் போதும் சரி
1.அம்மா அப்பா அருளால் மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்களுக்குள் மகிழ்ச்சியான நிலைகள் ஓங்கி வளர வேண்டும்.
3.எங்களுக்குள் இருக்கக்கூடிய கோபம் குரோதம் என்ற எண்ணங்களெல்லாம் எங்களை அடிமைப்படுத்தாது
4.எங்கள் தாய் தந்தையின் அருளால் எங்களுக்கு உயர்ந்த குணமும் மகரிஷியின் அருள் சக்தியும் பெறும் சக்தி பெற வேண்டும் என்று
5.இந்த எண்ணங்களை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் கோபத்திற்கு நீங்கள் அடிமை ஆகிவிட்டீர்கள் என்றால் சோறு கூட சாப்பிட உங்களுக்கு மனம் விடாது. இரண்டு நாளைக்குப் பட்டினியாக இருந்தாலும் கோபத்துடன் சாப்பிடவிடாது. அப்புறம் கோபம் வந்து விட்டது என்றால் மேல இருக்கிற அழுக்கைத் துடைக்க விடாது. மேலில் இருக்கிற அழுக்கைத் துடைக்கவில்லை என்றால் உடலில் நோயாகிவிடும்.

இரண்டு நாளைக்குச் சோறு சாப்பிடவில்லை என்றால், நல்ல குணங்களுக்கு சோறில்லை என்றால் என்ன செய்யும்..? உடல் மெலியச் செய்கிறது. நோயாக மாற்றுகின்றது. உங்கள் நல்ல குணத்தைக் கொன்று விடுகிறது.

அந்த மாதிரி விடாதபடி அம்மா அப்பா நம்மை எவ்வளவு நல்லதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் சக்தியை முதலில் பெற வேண்டும். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்.

அம்மா அப்பாவினுடைய சக்தியினால் தான் இப்போது நாம் பிழைக்கிறோம். சாப்பிடுகின்றோம். துணியெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதுமே நமக்கு நல்லதை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றால் நம் அம்மா அப்பா சுதந்திரமாக இருக்க வேண்டும்.

நாம் சந்தோஷமாகப் படிப்பில் கெட்டிக்காரராகவும் நம் உடலில் கெட்டிக்காரத்தனமாகவும் நல்ல பிள்ளைகளாக இருந்தால் அம்மா அப்பாவிற்கு அது தான் சுதந்திரம்…!

அப்படி நீங்கள் இல்லாமல் போனால் அவர்களுக்குச் சுதந்திரம் எப்படி வரும்…? என் பிள்ளை இப்படி இருக்கிறானே…! அவனுக்குத் தலை வலிக்கிறதே கஷ்டப்படுகிறானே…! என்று அவர்கள் நல்ல குணங்களும் சுதந்திரம் இல்லாது தவிக்கின்றது.

நீங்கள் கோபத்தையும் வெறுப்பையும் சலிப்பையும் கொண்டு வரப்போகும் போது அது உங்களையும் அடிமைப்படுத்துகிறது. உங்கள் நல்ல குணத்திற்குச் சுதந்திரம் இல்லாது தவிக்கின்றது இல்லையா…!

ஆகையினாலே உங்களுக்குள் வரக்கூடிய இந்தக் குணத்தை மாற்றிட அம்மா அப்பா அருளால் அருள் குணங்கள் எங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும். அறியாத நிலையில் எந்தத் தீங்கும் எங்களுக்கு வரக்கூடாது என்று அவர்கள் ஆசியைப் பெற வேண்டும்.
1.அவர்கள் அருளால் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.அப்போது உங்களிடம் இருந்து வரக்கூடிய கோப குணத்தை குறைத்து விட்டது என்றால்
3.உங்களுக்கு நோயும் வராது. தலை வலியும் வராது. காய்ச்சலும் வராது.
4.இதெல்லாம் வரவில்லை என்றால் உங்கள் அம்மா அப்பாவிற்கு (என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று) சந்தோஷமாக இருக்கிறது.
5.அவர்கள் நல்ல குணம் சுதந்திரமாக இருக்கிறது.

ஆனால் நீங்கள் அது இது என்று வேண்டாததைச் செய்துவிட்டு உடம்பில் நோயானால் என் பிள்ளைக்கு என்ன ஆனதோ…? என்று அவர்கள் நல்ல குணத்திற்குச் சுதந்திரம் இல்லாமல் போகிறது.

அப்போது அம்மா அப்பாவிற்குச் சங்கடத்தைத் தான் கொடுக்கிறோம்.  அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் உங்களிடம் கோப குணத்தை வெறுப்பான குணத்தை வராதபடி அம்மா அப்பா அருளால் எங்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் சக்தி உங்களுக்கு நல்லது செய்யும்.

பள்ளியில் படிக்கும் பொழுது அடுத்த பையன் ஏதாவது சொல்லித் திட்டிவிட்டான் என்றால் நீங்கள் உடனே உங்கள் அம்மா அப்பாவை நினைத்து
1.அவனுக்கு அவர்கள் அம்மா அப்பாவினுடைய நிலைப் பிரகாரம்
2.நல்ல பையனாக வர வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
3.அப்படி நினைத்துக் கொண்டீர்கள் என்றால் உங்களிடம் அந்த கோபம் வராது.

ரோட்டில் போகும் பொழுது ஏதோ சந்தர்ப்பத்தில் நீயே ஒரு கல்லைக் கொண்டு எறிகிறாய். ஒருவன் மேலே பட்டுவிட்டது என்று வைத்துக் கொள். அல்லது தமாஷாக உன்னுடைய பென்சிலை ஒருவன் எடுத்து வைத்து விட்டான் என்றால் “பார்…! என் பென்சிலை எடுத்து வைத்து விட்டான் என்று உடனே கோபம் வந்து விடுகிறது.

அப்போது அந்தக் கோபத்திற்குக் கோபம் தான் பதில் சொல்கின்றோம். அப்போது தவறு செய்வதை ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் அப்படிச் செய்யாமல்
1.நான் தான் தவறு செய்து விட்டேன்.
2.தெரியாமல் நான் தான் எடுத்தேன் என்று உடனே சொல்லிவிட வேண்டும்.

அதே மாதிரி அடுத்த பையன் நம்மிடம் கோபித்துக் கொண்டான் என்றால் நீ ஏன் என்னைக் கோபிக்க வேண்டும்…? என்று சொல்லக் கூடாது.

அம்மா அப்பா அருளால் நாங்கள் மனபலம் பெற வேண்டும். மகரிஷியின் அருள் சக்தியால் நாங்கள் மனபலம் பெற வேண்டும். உடல் நலம் பெற வேண்டும். எங்களுக்கு நல்ல ஞானம் வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவனுக்கும் அவர்கள் அம்மா அப்பா வழிப்படி
2.அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

கூடப் படிக்கும் ஒரு பையன் சேட்டை செய்கிறான் என்றால் சேட்டை செய்கிறான் என்று ஆசிரியரிடம் சொன்னாலோ அல்லது அடுத்தவர்களிடம் சொன்னோம் என்றால் என்ன ஆகும்…?

ஒரு சாக்கடையை எடுத்து யார் மேலே போட்டாலும் என்ன செய்யும்…? யார் மேலே விழுந்தாலும் அந்தச் சாக்கடை நாற்றம் ஆகத் தான் செய்யும்.
1.அவன் தவறு செய்தான் என்று எல்லாரிடமும் சொன்னால்
2.அந்தத் தவறான உணர்வு எல்லோரிடமும் போகும்.

இதைப் போன்று இல்லாதபடி உங்கள் நல்ல குணங்கள் என்றைக்கும் சுதந்திரமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் எல்லோரும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

ஆகவே நீங்கள் சிறிய பிள்ளைகளாக இருந்தாலும் உங்களுடைய குணத்தைக் கண்டு உலகமே உங்களை மெச்சக்கூடிய நிலைகளுக்கு நீங்கள் வர வேண்டும். நிச்சயம் வருவீர்கள்…! எமது அருளாசிகள்…!