ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 19, 2018

பதினெட்டாம்படிக் கருப்பு என்று ஏன் சொல்கிறோம்...!

வாழ்க்கையில் அவசரம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் கொண்டு தன்னைத் திரும்பி பார்க்காது போகும் பொழுது நம்மை அறியாமலே இருளில் மடிந்து (விழுந்து) விடுகின்றோம்...! அப்படி விழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..? என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் பதினெட்டாம் படியை வைத்துக் காட்டுகின்றார்கள்.

பதினெட்டுப் படியைச் சீராக வைத்து அதை வழுக்கிடும் நிலைகளாக அமைத்து அங்கே அதற்கு அருகிலே “கருப்பாயி கருப்பணன்...” என்ற தெய்வங்களையும் காட்டுகின்றார்கள்.

ஐயப்பன் மேல் பக்தி கொண்டு வந்தாலும் ஐயப்பனைப் பார்க்க வேண்டும் என்ற வேகத்தில் வரும் போது மற்றதைச் சிந்திக்காது செயல்படும் தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

நம் எண்ணம் ஒருமித்து உயர்ந்த குணங்களைப் பெற்றாலும் நாம் போகும் பாதையில் எத்தனையோ இடையூறுகள் வருகின்றது. மற்றவர்கள் செய்யும் தவறுகளையோ மற்றதுகளையோ அதை எல்லாம் நம் கண்ணில் பார்க்காமல் இருக்க முடியாது.

அதன் உணர்வுகள் வரும் போது அதை எல்லாம் நம் உயிரான விஷ்ணு வரம் கொடுத்து நம் உடலாகப் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.

ஆகவே இதை எல்லாம் அறிந்த பின் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்...? எதை நம் உடலுக்குள் சிருஷ்டிக்க வேண்டும்...?
1.நமக்குள் தீமை விளைவிக்கும் இருளைத் தணித்து விட்டு
2.நம் வேகத்தின் உணர்வை அடக்கிப் படி மீது ஏறும் போது
3.தன் அருகில் வருவோரை அழைத்து அரவணைத்துச் செல்லும் உயர்ந்த பண்புகளை உடலுக்குள் வளர்க்கும்படிச் சொல்கின்றார்கள்.

அதாவது நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமையான நிலைகளைத் தனக்குள் புகவிடாது தடுத்து அந்தத் தீமைகளை எவ்வாறு அடக்க வேண்டும்...? என்று நாம் தெளிந்திடும் நிலையாக ஐயப்பன் ஆலயத்தில் காவியத் தொகுப்பாகக் கொடுத்து பதினெட்டாம் படியை வைத்துள்ளார்கள்.

அன்று அவன் கூறிய அறிவுப்படி அதை அமைத்தாலும் இப்போது வெறும் ஐதீகம்... சாஸ்திரம்...! என்ற நிலைகளில் போய்விட்டது.

பதினெட்டாம்படிக்குச் சென்றால் நான் முதல் வருடம் போனேன். தேங்காய் சிதறுகாய் போட்டேன். அதற்கு வேண்டிய சாஸ்திரத்தைச் செய்தேன். ஐயப்பன் எனக்கு எல்லாம் செய்வான். ஆகையினால்
1.மூன்றாவது வருஷம் நான்காவது வருஷம் என்று இப்படிப் பதினெட்டு வருஷம் சென்றேன்.
2.இப்பொழுது முழுமை அடைந்து நான் ஐயப்பனின் அருளையே பெற்று விட்டேன் என்ற நிலைக்குத்தான் செல்கின்றார்கள்.

ஆனாலும் ஐயப்பன் கோவிலில் கூட்டம் கூடக் கூடக் அங்கே சென்று பதினெட்டாம்படி ஏறுவதற்குள் போகும் பாதையிலே எத்தனையோ பேர் மரணமடைகின்றார்கள்... (ACCIDENT) என்று கேள்விப்படுகின்றோம்.

ஐயப்பன் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு சென்றாலும் அருகிலே இருப்போர்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதில் மற்றவரை வீழ்த்துகின்றோம்.

ஏனென்றால் அந்த வேக உணர்வுகள் கொண்டு செல்லும் பொழுது அருகில் வருபவனை அறியாது இருள் சூழ்ந்து கொள்கின்றது. அந்த இருள் சூழ்ந்த நிலைகள் வருவதைக் குறைப்பதற்குத் தான் அங்கே கருப்பாயி கருப்பணன் என்று வைத்து அந்த இருளை நீக்க வேண்டும் என்று காண்பிக்கின்றார்கள்,

ஆகவே ஐயப்பனின் அருள் கொண்டு மற்றவரையும் தன்னுடன் அரவணைத்துச் சென்று அவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுதல் வேண்டும்.
1.பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன் தான் அருகிலே இருப்போரை அரவணைத்து
2.அவர்கள் மேலே செல்லட்டும். அவர்கள் ஐயப்பனின் அருளைப் பெறட்டும் என்ற இந்த உணர்வின் தன்மை வரும் போது
3.நமக்குள் வரும் இருள் சூழும் நிலைகள் குறைந்து அமைதி கொண்டு நாம் அங்கே செல்ல போக முடியும்.

இதைத்தான் “வாழ்க்கையில் ஒழுங்குபடுத்தும் முறையாக... அங்கே காண்பிக்கப்பட்டு...!” அந்த உண்மையினுடைய நிலைகளை வளர்த்து பிறருக்குத் தீங்கு இல்லாத நிலைகள் மேலெ செல்லும் பொழுது அந்த மெய் ஞானி காட்டிய உணர்வின் தன்மையைப் பெற முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.  

சாதாரண மக்களுக்கும் பக்தி என்றால் எது...? என்று காட்டி
1.மற்றோர்கள் உயர வேண்டும்.
2.அவர்கள் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்
3.அவர்களும் மெய் ஒளி காண வேண்டும் என்ற இந்த அரவணைப்பைக் கொண்டு செல்ல வேண்டும்.
4.அருள் ஞான உணர்வுகளைச் சீராக வளர்க்க வேண்டும் என்பதை அங்கே தலையில் சுமக்கச் செய்து
5.படி மீது ஏறுவதாக அதாவது மேலே விண் செல்லும் மார்க்கத்தில் ஏறிச் செல்ல வேண்டும்...! என்று பதினெட்டாம்படியாகக் காட்டுகிறார்கள்.