ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 24, 2018

நம் கண்களில் உள்ள கருமணிகள் (CAMERA & AERIAL) பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்


நாம் பார்க்கும் அனைத்தும் கண்களில் உள்ள
1.கருமணி வழி தான் படமாகப் பதிவாகின்றது.
2.கருமணி வழிதான் உணர்வைப் பதிவாக்குகின்றது.
3.கருமணி வழிதான் உணரச்செய்கின்றது.

கண்களில் உள்ள அந்தக் கருமணிகளில் வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் என்ற உணர்வுள் பட்டு அந்த மணிகளில் அழுக்காகச் சேர்ந்தால் அதில் எது முன்னணியில் இருக்கின்றதோ அதன் உணர்வைத் தான் கவரும்.

ஒரு டம்ளரில் ஒரு காரத்தைப் போட்டு உபயோகப்படுத்திவிட்டுக் கொட்டிய பின் அதில் தொக்கியது கொஞ்சம் இருந்தால் அடுத்து அந்த டம்ளரில் எதை ஊற்றினாலும் “காரமாகத்தான்” இருக்கும்.

ஒரு விஷத்தின் தன்மையை அதில் வைத்துச் சுத்தப்படுத்தாதபடி இருந்தால் விஷத்தின் தன்மைதான் அதில் தொக்கி இருக்கும். அதில் எந்தப் பொருளைப் போட்டாலும் அதுவும் “விஷமாகும்….!”

அதைப் போல நம் கருமணிகளில் கோப உணர்வுகள் அதிகமாகப் படர்ந்திருந்தால் அந்த உணர்ச்சியையே அது மீண்டும் ஊட்டும். கண்ணில் பார்க்கும் பொழுதே “ஜிர்…” என்று அந்தக் கோபம் வரும்.

வேதனை வேதனை என்று வேதனைப்படுவதையே பார்த்துக் கொண்டிருந்தால் அடுத்து எந்த நல்லதையும் கிரகித்துப் பார்க்க முடியாது. உண்மைகளை அறிய முடியாது.

நாம் கோபமாக இருந்தாலும் சரி… அல்லது வேதனையாக இருந்தாலும் சரி…! அப்பொழுது யாராவது வந்து மகிழ்ச்சியான செய்திகளைப் பற்றிச் சொன்னால்
1.அதை நம்மால் தாங்க முடியாது.
2.அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
3.அதை அறியக் கால தாமதமாகும்.

ஏனென்றால் கருமணிகளில் படர்ந்த அந்த கோபமான வேதனயான உணர்வின் சத்துக்கள் அவ்வாறு தான் நம்மை இயக்கும். இதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா...? அதற்கு எப்படித் தியானிக்க வேண்டும்...?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

இப்பொழுது அந்தக் கருமணிகளில் உள்ள அழுக்குகள் நீங்கி ஒரு தெளிவான உணர்வை ஊட்டும் அருள் கருமணியாக அந்த உணர்வுகள் பெறும்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கருமணிகளில் படரப்படும் போது
1.ரசம் பூசிய கண்ணாடியில் எப்படி ஒளி அலைகள் பட்டபின் அதிலிருந்து மின் கதிர்கள் எதிர்த்து வருகின்றதோ
2.இதைப் போல உங்கள் கண்ணிற்குள் இருக்கும் கருமணிகளில் பட்டு
3.அந்த உணர்வின் ஒளி அலைகள் உங்கள் உடலுக்குள் பரவும்.

துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள் கருமணியிலிருந்து நரம்பு மண்டலத்தின் வழியாக எல்லா உறுப்புகளுக்கும் பாய்ச்சப்படுகின்றது.  உடல் உறுப்புகளில் படர்ந்துள்ள தீமைகளை நீக்கும் ஆற்றல் பெறப்படுகின்றது.

நஞ்சை வென்று ஒளியின் தன்மையாக உருவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி கண்களில் உள்ள கருமணிகளில் உருவாக வேண்டும் என்று எண்ணி உங்கள் கண்ணில் உள்ள கருமணிகளில் அந்த வீரிய உணர்வைச் செலுத்துங்கள்.

இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எண்ணியவுடன் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வுகளைப் பெறும் தகுதியையும் பெறுகின்றோம்.

வாழ்க்கையில் வரும் இருள்களை நீக்கி பொருள் காணும் சக்தி பெறுகின்றோம். சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் பெறுகின்றோம். சாந்தமும் விவேகமும் ஞானமும் பெறுகின்றோம்…!