ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 9, 2018

வள்ளி திருமணம் – இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி


உயிரினங்களில் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுகள் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி அதிலே விளைந்த உணர்வுகள் தான் ஒட்டு மொத்தமாக நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கின்றது நமது உயிர்.

மனிதனான பின் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை அகற்றிடும் நிலையாக அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் எடுக்கும் போது “கார்த்திகேயா...!” என்று சாஸ்திரங்கள் உணர்த்துகின்றன.

இதைத் தெளிவாக்குவதற்காக “வள்ளி திருமணம்என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்,

வள்ளி திணைக் காட்டிலே காவல் காத்துக் கொண்டு இருக்கின்றாள். தான் விளைய வைத்த பொருளை மற்றது கொத்தித் தின்று விடாதபடி அங்கே காவல் புரிகின்றாள்.

வெகு தூரத்தில் இருந்து வருவதைத் தன் பாதுகாப்புக்காக வேண்டி கவண் கொண்டு வீசுகின்றது. அவள் யார்...? வேடுவனின் மகள்.

சாதாரண மக்களும் புரியும் தன்மையாக வேடுவன் என்றால்
1.நாம் பல கோடிச் சரீரத்தில் வேட்டையாடி வேட்டையாடி
2.அதிலே விளைந்த சக்தி தான் இந்த உடலில் ஆறாவது அறிவு.
3.இது தான் வள்ளி.

பாதுகாக்கும் சக்தி – வலிமை – வல்லவன் – வல்லவி = “வள்ளி

வல்லவன் “வல்லவி...” வள்ளி என்று பெண்பாலைக் காட்டி எதைத் தன்னுடன் இணைத்துச் செயல்பட வேண்டும் என்பதை “வள்ளி திருமணம் என்ற காவியமாகப் படைத்துத் தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
1.அந்த வள்ளியை “முருகன் காதலிக்கின்றான்….!”
2.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
3.இந்த வலிமை மிக்க சக்தியைத் தனக்குள் நேசிக்க வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டு உடல் பெற்றவன் முருகா “முருகு.” முருகு என்றால் மாற்றி அமைக்கும் சக்தி.

தீமையை மாற்றியமைக்கும் உடல் பெற்றவர்கள் மனிதர்கள் என்றும் தன்னைப் பாதுகாக்கும் இந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்று காவியப் படைப்பு வருகின்றது.

நம்மை ஏசுவோரையும் நமக்குத் தீமை செய்வோரையும் நாம் எண்ணிக் கொண்டிருந்தால் என்றால் அது நம்முடைய நல்ல உணர்வைத் தின்றுவிடும்.

வேதனைப்படுவதை ஒருவர் சொல்லி விட்டால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தின்றுவிடும்.

 அதாவது வேதனை வேதனை என்று அதை நாம் நுகர்ந்தால் டி.பி. நோய் வருகின்றது. நம் நல்ல குணங்களை உடலை அது தின்று விடுகின்றது.

அதைத் தான் திணைக் காட்டில் குருவியை உட்கார விட்டோம் என்றால் அதில் விளைய வைத்ததைத் தின்று விட்டுப் போய்விடும். வள்ளி அவ்வாறு ஆகாதபடி அதைக் காவல் காக்கின்றாள் என்று காட்டினார்கள் ஞானிகள்.

1.நம்மைப் பாதுகாக்கும் உணர்வை நாம் நேசித்தால்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தால்
3.நம் உடலுக்குள் சென்றபின் “தெய்வ ஆணை!”
4.இந்த உடலில் காத்திடும் செயலாக உயிர் இயக்குகின்றது.

உயிர் = தெய்வம்; இயக்கம் = ஆணை – “தெய்வ ஆணை

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த வலிமை மிக்க சக்தியை (வள்ளி) நேசித்தால் அது நம் உயிரிலே பட்டுத் தெய்வமாக - தெய்வ ஆணையாக இயக்கும்.
1.தெய்வச் செயலாக நம்மைச் செய்ய வைக்கும்.
2.தெய்வீக நிலையைப் பெறச் செய்யும்.
3.அதைத் “திருமணம் செய்து கொள்...!” என்று தான் வள்ளி திருமணத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.

சாஸ்திரப்படி முருகனுக்கு முதல் மனைவி யார் என்று கேட்டால் வள்ளி என்று சொல்ல மாட்டார்கள். தெய்வானை அப்புறம் ஆசைக்காக வேண்டி வைத்துக் கொண்டது தான் மனைவி வள்ளி.

அன்பினால் இருப்பது தெய்வானை என்றும் ஆசைக்காக வேண்டி வள்ளி என்றும் இப்படி ஞானிகள் கொடுத்த உண்மையைத் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள்.

இச்சா சக்தி... கிரியா சக்தி... ஞான சக்தி...! அதாவது தன்னைப் பாதுகாக்கும் நிலைகளின் மீது இச்சைப்படும் போது நம் உடலுக்குள் செல்லும் போது கிரியை.

எதன் எண்ணத்தால் நாம் இச்சைப் படுகின்றோமோ அதன் ஞானமாக நம் உடலில் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று இதைத் தெளிவாகச் சாஸ்திரம் காட்டுகின்றது.

1.என்னை இப்படிப் பேசி விட்டானே…!
2.என்னை இப்படிக் கேவலப்படுத்துகின்றானே…! என்று
நாம் பிறர் செய்யும் நிலைகளை உற்றுப் பார்க்கின்றோம்.

என்னை இப்படிப் பேசிவிட்டானே.. “அவனைச் சும்மா விடுவதா..?” என்ற எண்ணங்கள் கொண்டு அதை இச்சைப்படும் போது நம் உடலுக்குள் அது தெய்வ ஆணையாக இயக்குகின்றது.

அவன் எந்தெந்தக் கெடுதலை எல்லாம் செய்தானோ அவை எல்லாம் நமக்குள் இயக்குகின்றது.
1.அதன் ஞானமாக நம் செயலும்
2.நம் உறுப்பும் உணர்வும் அணுக்களும் விளைகின்றது.
3.நோயாகி இந்த உடலையே நலியச் செய்கின்றது

வள்ளி திருமணத்தைக் காட்டியவுடனே அதைப் பார்த்துச் சிரிப்பதும் கை தட்டுவதிலும் தான் நாம் இருக்கின்றமே தவிர சாதாரண மக்களும் புரிந்து உன் வாழ்க்கையை எவ்வாறு நீ வாழ வேண்டும் என்பதைத்தான் அதிலே காட்டினார்கள்.

ஆகையினால் நாம் எதை இச்சைப்பட வேண்டும்...?

இந்த வலிமை மிக்க ஆறாவது சக்தியின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சை அதன் மீது பட வேண்டும்.

அந்த உணர்வின் சக்தி நமக்குள் இருக்கும் போது தெய்வ ஆணையாக நமக்குள் செயல்படும் சக்தியாக வர வேண்டும். அதன் ஞானமாக இந்த உணர்வுகள் நம் உடலில் இயக்கப்பட்டு அதனின் பண்பு கொண்டு நம்மை மெய் வழியில் அழைத்துச் செல்லும்.

இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி சொல் மூன்று தான்.

எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அதன் இச்சையின் செயலாகக் கிரியையாகி அதன் ஞானமாக நம்மை வளர்க்கும் என்ற பொதுச் சொல்லை அங்கே இட்டார்கள் ஞானிகள்.

எதிலேயும் எப்படி நாம் எதை இச்சைப்பட வேண்டும்...? என்று தத்துவம் தான் அதிலே கொடுக்கப்பட்டு உள்ளது.

முருகன்  கோயிலுக்குப் போகின்றோம் என்றால் இன்று நாம் எதை இச்சைப்படுகின்றோம்...?

முருகா... நான் இந்த மாதிரி தொழில் எல்லாம் செய்து கொண்டு இருந்தேன். நான் கொடுத்தவன் எல்லாம் எனக்குக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டான்.

நான் யாருக்குமே துரோகம் செய்யவில்லை. நான் கொடுத்துக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் எனக்கு இப்படித் தொல்லையைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றானே என்று
1.வேதனையையும் ஆத்திரத்தையும் கோபத்தையும் இங்கு வளர்க்கப்படும் போது
2.இந்த இச்சை நமக்குள் கிரியையாக வளர்கின்றது.
3.நாம் எதை இச்சைப்பட்டால் நுகர்ந்த உணர்வின் இயக்கமாக உடல் இச்சை தான் வருகின்றது

ஆனால் தன்னைக் காக்கும் வழி முறை எது என்று அன்று ஞானிகள் சொன்னார்கள். அந்த ஆறாவது அறிவு கொண்டு நாம் எதை எண்ண வேண்டும்?
1.இந்த ஆலயம் வருவோர் எல்லாம் இந்த அறுகுணத்தின் சக்தி பெற வேண்டும்.
2.இந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று இவ்வாறு நாம் எண்ண வேண்டும்.

இவ்வாறு எண்ணினால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் ஞான சக்தியாகப் பெருகி அழியா ஒளிச் சரீரம் பெற முடியும். மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.