ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2018

கெட்டதை நமக்குள் சேர்த்துக் கொள்ள முடிகின்றது என்றால் ஏன்…, “நல்லதை நமக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது…?” – சிந்தித்துப் பாருங்கள்…!


பத்து இருபது வருஷம் நான் (ஞானகுரு) காட்டுக்குள்ளேயும் மேட்டுக்குள்ளேயும் போய் ரொம்ப அவஸ்தைப்பட்டுத்தான் இயற்கையின் பேருண்மைகளை (குருநாதர் அருளால்) அறிந்துணர முடிந்தது.

இன்றைய சமுதாயத்தில் மக்கள் தன்னை அறியாமல் எத்தனையோ வகைகளில் அவஸ்தைப் பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த ஞானிகள் உணர்த்திய பேருண்மையை ஞாபகப்படுத்து…!  என்று குருநாதர் சொன்னார்.

மக்களிடம் எல்லாச் சக்தியும் இருக்கின்றது. காற்றில் மறைந்துள்ள மகரிஷிகளின் அருள் உணர்வை எடுக்கச் செய்வதற்கு அவர்களை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்ன அருள் வழியைத்தான் உங்களுக்கு உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

ரேடியோ டிவி நிலையங்களில் இயந்திரத்தின் துணை கொண்டு அலை வரிசைகளில் ஒலி/ஒளிபரப்பு செய்கின்றார்கள். இந்தக் காற்றில் தான் கலந்து வருகின்றது.

எந்த அலை வரிசையில் வைக்கின்றோமோ அங்கிருந்து வரும் உணர்வலைகளை ஈர்த்து சப்தத்தையோ படத்தையோ நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

அதே போலத்தான் ஞானிகளின் ஆற்றல்மிக்க உணர்வுகளை உங்களுக்குள் அலை வரிசை போன்று பதிவு செய்கின்றோம். ஞானிகள் உணர்வுகள் இந்தக் காற்றிலே இருக்கிறது.

உங்கள் நினைவாற்றலை அந்த ஞானிகளின் பால் திருப்பினீர்கள் என்றால் அந்த ஞானிகளின் உணர்வுகளை எளிதில் பெற முடியும். உங்கள் சுவாசத்திற்குள் வரும்.

உதாரணமாக
1.திட்டியவர்கள் எண்ணமும் இங்கே இந்தக் காற்றிலே தான் இருக்கிறது.
2.அவர்கள் உணர்வு நம்மிடம் பதிவாகி இருக்கின்றது.
3.திட்டியவனை எண்ணும் போதெல்லாம் அவன் எப்படி நம்மை வெறுப்பான நிலையில் பேசினானோ
4.அந்த வெறுப்பான உணர்வுகள் இந்த காற்றிலிருந்து சுவாசத்தின் மூலம் வரும்.
5.நம் நல்ல சிந்தனைகளை மறக்கச் செய்கின்றது.
6.நமக்குத் தெரியாமலேயே நமது காரியங்களை நாமே தோற்க வைக்கின்றோம்.
7.நல்லது செய்ய முடியாதபடி நமக்குள்ளேயே அந்த எதிரி இருக்கிறது.
8.நம் இரத்தத்தில் கலக்கும் போது அது உடலிலே நோயாகவும் மாறுகின்றது.

இதை மாற்றவேண்டுமா… இல்லையா…?

1.அரிசியில் “கல்” இருக்கிறது என்று பார்க்கின்றோம்.
2.பார்த்தவுடன் என்ன செய்கின்றோம்..? உடனை அதைத் தூக்கி எறிகின்றோமா இல்லையா…?

அதே மாதிரி வாழ்க்கையில் கெட்டது என்று தெரிகின்றது….!
1.உடலுக்குள் கெட்டது வருகிறது என்றால் அதைத் தூக்கி எறிந்து விட்டு
2.அருள் மகரிஷியின் உணர்வு நாங்கள் பெற வேண்டும் என்று உங்களால் சேர்க்க முடியாதா…?
3.ஏன்…! கெட்டதை மட்டும் உங்களால் சேர்த்துக் கொள்ள முடியும் என்றால்
4.நல்லதை ஏன் சேர்த்துக் கொள்ள முடியாது…?

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

மகரிஷிகளின் அருள் சக்தியால் நான் எடுக்கக் கூடிய காரியங்கள் அனைத்தும் ஜெயமாக வேண்டும். எனக்கு நல்ல சிந்தனை வர வேண்டும். அந்த அருள் எனக்கு வேண்டும்…! என்று எண்ணி எடுக்க முடியாதா…?

அப்படிப்பட்ட வலுவான உணர்வை எடுத்தீர்கள் என்றால் உங்கள் காரியங்கள் நிச்சயம் நடந்தேறும். “செய்து பாருங்கள்…!”