ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 12, 2018

நன்மை செய்வோர் அனைவருமே “காசைக் கொடுத்து விலைக்கு வாங்குகிற மாதிரி…” மற்றவர்கள் படும் வேதனையைத்தான் எடுத்துக் கொள்கின்றோம் – இது சரியா,,,?


இன்று நாம் நன்மை செய்யும் பொழுது எப்படிச் செய்கின்றோம்…? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

மற்றவர்கள் வேதனைப்படுவதை எல்லாம் கேட்டறிந்து “அடப் பாவமே..!” என்று சொல்லிவிட்டுத்தான் உதவியே செய்கின்றோம். அவர் படும் வேதனை உணர்வுகளை நாம் அதிகமாக நேசித்த பிற்பாடு அதனின் ரூபமாகவே கடைசியில் ஆகிவிடுகின்றோம்.

பணம் கொடுத்தோம் மற்ற எல்லா உதவிகளையும் செய்தோம். உதவி செய்தாலும் அந்த உடலிலிருந்து வெளிப்பட்ட வேதனை உணர்வுகளை நாம் சுவாசிக்கின்றோம்.

மற்றவர்கள் சொல்லும் குடும்பக் கஷ்டங்களோ அல்லது அவர்கள் நோயால் அவதிப்படும் நிலைகளோ அந்த உணர்வுகள் எல்லாம் மிகவும் வலிமையானது.
1.நாம் நுகர்ந்த பின் அவையெல்லாம் நம் உடலில் இது வந்து சேரும்.
2.காசைக் கொடுத்த விலைக்கு வாங்கிய மாதிரித்தான் நமக்குள் வந்து சேர்கின்றது.
3.இதை நாம் யாராவது சுத்தப்படுத்த வேண்டும் என்று கொஞ்சமாவது அறிந்திருக்கின்றோமா…?

ஆனால் பரிணாம வளர்ச்சியில் நாம் எப்படி மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்…?

புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் எத்தனையோ வேதனைகள் பட்டுப் பட்டு வேதனைகளிலிருந்து மீண்டிடும் உணர்வுகளைச் சுவாசித்துச் சுவாசித்து வலிமை மிக்க இந்த மனித உடலை உருவாக்கியது இதே மனித உயிர் தான்.

வேதனைகளிலிருந்து விடுபடும் உணர்வுகள் கார்த்திகேயா. ஒவ்வொரு உடல்களிலும்
1.தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வின் ஞானம் பெற்றுப் பெற்று
2.இந்த மனித உடலாகும் பொழுது அதற்குத் தகுந்த உறுப்புகளை உருவாக்கி
3.தீமைகளிலிருந்து விடுபடும் வலுவான அந்தச் சக்தியாக ஆறாவது அறிவு “வள்ளி…!”
4.மிகச் சக்தி வாய்ந்த நிலையாக உருவாகி வந்திருக்கின்றோம்.

அந்த வலிமைமிக்க சக்தி பெற்றாலும் இதைக் காட்டிலும் மகரிஷிகளோ ஞானிகளோ அவர்கள் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வுகளை பல பல ஆற்றல்களை அவர்கள் உடலில் வளர்த்து வெளிப்படுத்தியவர்கள்.

 அந்த மகான்கள் எல்லாம் தனக்குள் வந்த நோய்களை எல்லாம் அகற்றிப் பழகியவர்கள். தீமைகள் வராதபடி வலு கொண்டு சமாளித்தவர்கள்.

விண்ணிலிருந்து வரும் வலிமையான உணர்வுகளைச் சுவாசித்து அவர்கள் உடலில் எந்தத் தீமையும் சாடாதபடி அதைக் தாக்கிடும்… தாங்கிக் கொள்ளும்… அந்த உணர்வினைப் பெற்று வளர்ந்தவர்கள்.

அப்படிப் பெற்றிருக்கும் பொழுது நம் கண்ணுக்கு முன்னாடி அந்த ஞானிகளையோ மகான்களையோ சந்தர்ப்பத்தால் நாம் உற்றுப் பார்த்தோம் என்றால் நாம் அவர்களிடம் எதைக் கேட்கின்றோம்…?

உடலில் நோய் வந்துவிட்டாலோ அல்லது குடும்பத்தில் சிரமங்கள் இருந்தாலோ அந்த மகானை நினைத்து அழுகின்றோம்.

நான் எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன்…! என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றாய்…? கோவிலுக்குப் போனாலும் இதைத்தான் நினைக்கின்றோம்.

இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

1.அந்த மகானின் அற்புத நிலைகளை நாம் பெறவேண்டும்
2.அந்த அருள் பெற வேண்டும்
3.நமக்குள் எத்தகைய இருள்கள் வந்தாலும் அது நமக்குள் புகாதபடி தடுத்திடும்
4.அந்த ஞானிகளின் ஆற்றல் மிக்க அருள் சக்தி வேண்டும் என்று இப்படித்தான் நாம் அவர்களிடம் கேட்க வேண்டும்.

அவர்களின் ஆற்றல்களை நாம் பெற்றால் அவர்கள் அடைந்த பேரானந்த நிலையை ஏகாந்த நிலையை நாமும் அடையலாம்…! மனிதனுக்கு அடுத்து நாம் அடைய வேண்டிய பரிணாம வளர்ச்சி இது தான்…!