ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 19, 2018

உருவத்தைப் பார்க்கின்றோம் ஆனால் உணர்ச்சிகளை நாம் பார்க்க முடிவதில்லை... உயிரிலே பட்டால் தான் உணர முடிகிறது...! – “வாயு புத்திரன் ஆஞ்சநேயன்... அனுமார்...”


நம் குழந்தை நோயால் வேதனைப்படுகிறான் என்றால் அவனைக் காக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

அவன் நோயுடன் இருக்கும் போது “இப்படி ஆகிவிட்டதே...!” என்ற வேதனையை எடுத்தோம் என்றால் அவன் உடலில் சேர்த்த உணர்வுகள் நமக்குள் வேதனையை உருவாக்கும் அந்த அணுவாக மாறி விடுகிறது.

அப்போது அது வராமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று முதலில் இதை எடுத்து அதைத் தடுத்துப் பழக வேண்டும்.

“ஈஸ்வரா...” என்று உயிரை எண்ணாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலு சேர்க்காமல்
1.பாசத்தால் அவன் உடலில் உள்ள நோயெல்லாம் போக வேண்டும் என்று வெறுமனே எண்ணி
2.அந்த வேதனையைத்தான் நமக்குள் எடுத்துத் தவறாகக் கலந்துவிடுகிறோம்.
3.அதாவது வேதனையான என்ற உணர்வு மோதும் போது இதனுடன் விஷத்தைத் தான் கலக்கிறோம்.
4.இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

முதலில் சொன்ன மாதிரிச் ஆத்ம சுத்தி செய்து விட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.அவன் உடலில் படர வேண்டும்
2.அவன் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும்
3.அவன் உடல் நலம் பெற வேண்டும்
4.அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்
5.தெளிவான மனம் பெற வேண்டும் என்று
6.குழந்தை வேதனைப்படும் உணர்வு நம் உயிரிலே பட்டு உணர்ச்சியைத் தூண்டும் பொழுது
7.நாம் இதை எடுத்து இரண்டையும் இணைத்து உருவாக்க வேண்டும்.
7.அப்போது அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் உருவாகாது.
8.இப்படி இணைக்கப்படும் பொழுது “அஞ்சனை...” அதாவது ஆஞ்சநேயன்...!
9.நேயன் என்றால் அது நமக்குள் பக்குவப்படுத்தும் தன்மைகள்.

அந்த உடலில் உள்ள நோயெல்லாம் நீங்க வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை இணைத்துச் சொல்லாக நாம் சொல்லும் போது இந்த உணர்வு “வாயு...”

சொல் காதில் கேட்கிறது. ஆனால் கண்ணிற்குத் தெரிகின்றதோ..? உயிரால் உணர்ந்து தான் அறிகின்றோம்.

இப்போது நான் சொல்வது உங்கள் உயிரிலே பட்டு உணர்ந்து அந்த உணர்ச்சியால் தான் நீங்கள் அறிய முடிகிறது. கண்ணால் பார்த்தால் என் உடலைத் தான் பார்க்க முடிகிறது. அங்கங்கள் அசைவது.. நான் சொல்வதைத் தான் நீங்கள் பார்க்க முடியும்.

ஆனால் அந்த உணர்வு உயிரிலே பட்டால் தான் நீங்கள் அறிய முடியும். உயிரிலே பட்டதும் அதை உணர முடிகின்றது. அந்த உணர்ச்சி உங்கள் உயிரில் இயக்கப்படும் போது தான் அது இயங்குவதை… உணர்ச்சியால் உங்கள் உடலில் நீங்கள் அறிகின்றீர்கள்.
அதாவது
1.கண்ணால் பார்க்கின்றோம்
2.அந்த உணர்வால் உணர்கின்றோம்
3.உணர்ச்சியால் இயக்குகின்றோம்
4.உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

நமக்குக் கோபம் வந்தவுடன் அந்த ஆத்திரம் வந்து நம்மை இயக்குகிறது. கோபம் வந்தால் நம்மை எப்படி இயக்குகிறது என்று நமக்குத் தெரிகிறது, ஆனால் அதை அடக்க வேண்டுமா இல்லையா ?

குழந்தைக்கு உடம்புச் சரி இல்லை என்று எண்ணுகிறோம். அதை  உணர்வால் அறிகின்றோம் வேதனையான உணர்ச்சி நமக்குள் வந்து “ஐயோ... குழந்தைக்கு இப்படி வந்து விட்டதே...!” என்று பதறுகின்றோம்.

ஆனால் இந்த உணர்வெல்லாம் நம் ரத்தத்தில் சேர்ந்து நமக்குள் தீமையாக விளைகின்றது. இதை அப்போதைக்கப்போது துடைக்க வேண்டுமா... இல்லையா..?

கண்ணிலே பார்க்கும் போது அவன் வேதனைப்படுகிறான் என்று தெரிந்து கொண்டாலும் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று தடுக்க வேண்டும்.

குழந்தை வேதனைப்படுவதைக் கண்ணால் பார்த்திருக்கிறோம். நம் கண்ணின் கருவிழி ருக்மணி இங்கே விலா எலும்புகளில் பதிவாக்குகிறது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளை அதற்குப் பக்கத்திலேயே அங்கே பதிவாக்க வேண்டும்.

எந்தக் கண்ணால் பார்த்து வேதனையை எடுத்தோமோ அதன் அருகிலேயே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கும் போது இது வலுவாகிறது.

 அவனுக்கு உடம்பு நலமாக வேண்டும், அவன் எதிர்காலம் நன்றாக  இருக்க வேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவன் உடல் முழுவதும் படர வேண்டும், அவன் நோய் நீங்க வேண்டும் என்று நமக்குள் இதை உருவாக்கி அதைச் சொல்லாக அவனிடம் சொல்ல வேண்டும்.

1.நாம் சொல்லும் போது அது வாயுவாகப் போகின்றது.
2.காது வழியாகக் கேட்டு குழந்தையை நுகரச்  செய்கின்றது.
3.நுகர்ந்த பின் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் அவன் உடலில் எந்த உறுப்பிலே நோய் இருந்ததோ அதற்குள் வாயுவாகச் சென்று
4.அந்த உணர்ச்சியை ஊட்டி
5.நோயைக் குறைக்கும் ஞானத்தை அவனுக்கு ஊட்டுகின்றது.

அதனால் தான் “ஆஞ்சநேயன்” அவன் வாயு புத்திரன்.. என்றும் அந்த வாயு நம் உடலுக்குள் அணுவாக (புத்திரனாக) மாறும் பொழுது “அனுமார்” என்றும் தெளிவாக்குகின்றனர் ஞானிகள்.