ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 18, 2018

ராசி எது..? பலன் எது…?


பன்னிரண்டு மாதங்களிலும் நமக்குள் சேரும் தீமைகளை அப்புறப்படுத்தும் நிலைகளை ஞானிகள் ஒவ்வொரு மாதத்திலும் பண்டிகையாக வைத்து நல் உணர்வுகளைச் சேர்த்து அந்தத் தீமைகளைக் கழிக்கக்கூடிய நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் நாம் அதை புரிந்து கொள்வது இல்லை. பன்னிரண்டு மாதமும் பன்னிரண்டு ராசி என்று சொல்வார்கள்.

1.அந்தப் பன்னிரண்டு விதமான உணர்வுகளையும்
2.அந்தப் பன்னிரண்டு மாதத்திலும் வரக்கூடிய தீமைகளை எப்படித் துடைப்பது..?
3.நல்ல சக்திகளை எப்படி நமக்குள் ஒன்று சேர்ப்பது…? என்ற நிலைகளைத் தான்
4.ஆறாவது அறிவாகப் படைத்துக் காட்டினார்கள்.

ஆனால் இன்று ஜாதகப் பிரகாரம் பன்னிரெண்டு ராசிகளையும் பார்ப்பார்கள். அந்த ராசியைப் பார்த்து என்ன செய்வது..?

வயலில் நல்ல வெள்ளாமை வந்தது என்றால் அந்த ராசியாக அதை நிலை எடுத்துக் கொள்கிறோம்.

நல்லவரோடு சேரப்படும் போது அந்த நல்ல உணர்வைச் சேர்த்தால் அந்த ராசி என்ன செய்கிறது...? உங்களை நல்லவராக மாற்றுகின்றது

ஒருவன் பிக்பாக்கெட் அடிக்கிறான். அவனோடு சேர்ந்தோம் என்றால் நம்மையும் பிக்பாக்கெட் அடிக்கச் சொல்லும். அந்த ராசி அப்படித்தான் வரும்.

ஒரு நோயுடன் இருக்கின்றவனைப் பார்த்தோம் என்றால் அவன் உடலில் உள்ள அந்த நோயால் வாடும் ராசி நமக்குள் நல்லதைப் பெற விடாமல் செய்கின்றது.

ஆக இதற்கெல்லாம் வானஇயல் ராசியைப் பார்த்து என்ன செய்வது...?

அங்கே ஒவ்வொரு கோள்களுக்கும் ஒவ்வொரு நிலைகள். கோள்கள் எப்படியோ அதைப்போல நம் உடலும் ஒரு கோளே தான்.

ஒரு உடலில் விளைந்த வேதனை உணர்வை நாம் சந்திக்கும் போது என்ன செய்கின்றது..?
1.அவன் உடலில் விளைந்தது வேதனை.
2.அந்த ராசி அவர்களுக்குள் இருக்கின்றது.
3.அவரோடு சேர்த்து அவர் சொல்கின்ற கஷ்டத்தை எல்லாம் நாம் கேட்டறியும் பொழுது
4.அந்த ராசி இங்கே நமக்குள் வந்துவிடுகிறது.

இங்கு வீட்டில் ஒன்றும் முடியவில்லை என்று சொல்லி விட்டு அடுத்தாற்போல நண்பர்களாகப் பழகுகின்றவர்களிடம் போய் என்ன சொல்கிறார்கள்...?

என் பையன் சொன்னபடியே கேட்காமல் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றான்... குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கின்றது...! தொழிலில் நான் கடன் கொடுத்தேன். அவன் திரும்பத் தராமல் ஏமாற்றுகின்றான்...! இப்படி எல்லாம் ஆனால் நான் என்ன செய்ய முடியும்...? என்று நண்பரிடம் சொல்லப்படும் போது
1.இவர் உடலில் விளைந்த ராசி என்ன செய்யும்...?
2.இதைக் கேட்டவுடனே அதனின் பலனை அந்த நண்பரும் எடுத்து கொள்கின்றார்.

யார்...?

நண்பர் இதை அதிகமாகக் கேட்கக் கேட்க அவருடைய ராசி என்ன செய்கின்றது...? இந்த வேதனைகளை எடுத்து அவருக்குள்ளேயும் வளர்க்கச் செய்கின்றது. இது தான் ராசியும் அதனின் பலனும்...!

ஆனால் இன்று ஜாதகப் பிரகாரம் வான இயலை வைத்துச் சொல்பவர்கள் அதைப் பார்த்துவிட்டு “உனக்கு இந்த நேரம் இப்படி வருகின்றது... அதனால் இந்தக் காரியத்தை நீ செய்யாதே...!” என்கின்றார்கள்.

ஆனால்
1.ஒருவரின் வேதனையை நுகரப்படும் பொழுது
2.அந்த வேதனையைக் கொஞ்சம் விலக்கிவிட்டு
4.அருள் உணர்வுகளைச் சேர்த்து வலுவாக்கிக் கொண்டு
3.அவருக்கு நல்லது நடக்க வேண்டும்… அவர் நல்லவராக வேண்டும்… என்று சொல்லுங்கள்…
4.அவருக்கும் நல்லதாகும்… அவர் வேதனை உங்களுக்குள்ளும் வராது…! என்று
5.இதை எடுத்து அங்கே சொல்கின்றவர்கள் யாராவது இருக்கின்றார்களா என்றால் “இல்லை…”

ஏனென்றால் அவர் உடலில் வேதனை என்ற ராசி விளைந்து இருக்கின்றது. நாம் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அதனால் நமக்கும் அந்த வேதனை வருகின்றது.
1.அப்போது அதை ஒதுக்கிப் பழக வேண்டும்.
2.நமக்குள்ளே வராது அதைத் தடுத்துப் பழக வேண்டும்.
3.அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தில் விளைந்த ராசியை எடுத்து நம் உடலுக்குள் பெருக்கி வலுவாக்கிக் கொண்டு
4.அவருக்கும் அந்த அருளைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

இந்த நிலையைத் தான் நாம் எண்ண வேண்டும். இந்த ராசிப் பிரகாரம் நாம் எப்பொழுதும் நன்மை என்ற பலனை அனுபவிக்கலாம். ஞானிகள் சொன்ன “ராசி” என்பது இது தான்...!