ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 18, 2018

இன்றைய விஷமான சூழ்நிலையில் நம்மை ஏமாற்ற நினைப்போரிடமிருந்தும் நமக்குத் துன்பம் விளைவிக்கும் எண்ணத்தில் உள்ளோரிடமிருந்தும் “நம்மை எப்படிக் காத்துக் கொள்வது...?”

விஞ்ஞான அறிவால் உலக ரீதியிலே பல விஷத்தன்மைகள் இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. வெடி குண்டு கலாச்சாரம் என்று முதலில் வந்தது.

இப்பொழுது அதைக் காட்டிலும் மிஞ்சியதாக “விஷக் கலாச்சாரம்” என்ற நிலையில் இரசாயணக் குண்டுகளை வெடித்து வெடித்து காற்றையே  முழுமையாக நச்சாக்கிவிட்டார்கள்.

விஷப் பவுடர்களை எடுத்துக் கொண்டு ஒரு டப்பியில் கொண்டு வருகின்றான். “டப்...” என்று வீசி எறிந்தான் என்றால் உடைகின்றது. அந்த இடமோ வீடோ மற்ற எதுவாக இருந்தாலும் எல்லாம் காலியாகின்றது.

இன்று எடுக்கக்கூடிய சினி்மாக்களில் இது போல இரண்டைக் காண்பித்து விட்டான் என்றால் அடுத்து அதே மாதிர்ச் செய்யத் தொடங்கி விடுகின்றார்கள்.

இன்று உலகம் முழுவதிலும் உள்ள எல்லா இடத்திலும் இந்த நிலை தான்.

உதாரணமாக திருடனைப் பற்றி நாம் அதிகமாகக் கேள்விப்படுகின்றோம். நமக்கு முன்னாடி அந்த உணர்வின் எண்ண அலைகள் பரவுகின்றது.

ஒரு கதவோ ஜன்னலோ “டப்...” என்று சத்தம் கேட்டால் போதும். “திடுக்” என்று பய உணர்ச்சிகள் தூண்டப்பட்டுத் “திருடன் வந்து விட்டானோ...!” என்ற இந்த எண்ண அலைகளைப் பரப்புவோம்.

இந்த எண்ண அலைகள் பரப்பினால் அடுத்து என்ன நடக்கும்...?

திருடர்கள் எல்லாம் ஒரு கல்லைப் போட்டு வீசிப் பார்ப்பார்கள். அந்தச் சப்தத்தின் “எதிரொலியை” வைத்துத்தான் அங்கே திருட முற்படுவார்கள்.

நாம் கூர்ந்து கவனித்தாலும்
1.நம் எண்ண அலைகள் அச்சுறுத்தப்பட்டு நாம் பயந்து போய் இருக்கின்றோம் என்றால்
2.அவன் எண்ணம் வரப்போகும் போது நாம் சுத்தமாகவே தூங்கி விடுவோம்.
3.ஆக அவனை வரவேற்கின்றோம். இங்கே வந்து விடுவான்.

எவ்வளவு திடகாத்திரமானவராக இருந்தாலும் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மைக் காக்க வேண்டும் என்றால் அது எப்படி...?

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று  உடலுக்குள் அந்தச் சக்தியைச் சேர்த்து ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். பின்
1.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படர வேண்டும்.
2.எங்களைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று
3.இந்த உணர்வைப் பரப்பி வைத்துவிட வேண்டும்.

இப்படி இந்த அலைகளைப் பரப்பி வைத்து விட்டோம் என்றால் திருட வேண்டும் என்ற எண்ணத்தில் வருவோரை இந்த உணர்வு என்ன செய்யும்...?
1.ஒதுக்கிக் கொண்டு போய்விடும்.
2.திருட வேண்டும் என்ற எண்ணத்தையே திசை திருப்பிவிடும்
3.இதை உங்கள் அனுபவத்தில் கூடத் தெரிந்து கொள்ளலாம்.

அப்படியே சில சந்தர்ப்பத்தில் நாம் இல்லாத போது திருடன் உள்ளே வந்து பொருள்களை எடுத்துச் சென்றாலும் நாம் பாய்ச்சும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவனுக்குள் பாய்ந்து
1.அவன் சீக்கிரம் சிக்கவும் செய்வான்.
2.நம் பொருளைக் காக்க நம் எண்ண உணர்வுகள் நமக்கு உதவும்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நாம் எடுக்கும் அந்த மகரிஷிகள் உணர்வுகளின் வலு கொண்டு சில நேரங்களில் திருடு போன பொருள்கள் மீண்டும் கிடைக்கவும் செய்யும்.

அதே போல எதிரிகள் என்ற நிலைகள் அடிக்கடி நமக்குத் தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருந்தால் “தொல்லை கொடுக்கின்றார்கள்...” என்று எண்ணக்கூடாது.

முதலில் சொன்ன மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு என்னைப் பார்க்கின்றவர்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று இதை நமக்குள் கூட்டிக் கொண்டே போய் விட வேண்டும்.

1.அவன் நம் மேலே குறி வைத்து எண்ணினான் என்றால்
2.நாம் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகள் சிறுகச் சிறுக அவனுக்குள் போய்
3.நம்மைப் பற்றி எண்ணுவதை அவனை மறக்கச் செய்கின்றது.

பின் நம்மை மறக்கச் செய்யும் போது அவன் எண்ணம் அங்கே ஓங்கி வளர்ந்தது என்றால் அவன் தன் நிலை இழந்து அவனே எதிலேயாவது போய் சிக்குவான்.

1.மாற்றிக் கொண்டான் என்றால் நல்லது.
2.இல்லை என்றால் அவனே விபத்துக்களுக்கு ஆளாகிவிடுவான்.
3.அவன் செய்த நிலை அவனுக்கே உதவுகின்றது.

ஆக நாம் செய்த நிலை நமக்கு. அதாவது நாம் எடுத்துப் பாய்ச்சிய மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம்மைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக வரும். நமக்கு நல்லதாகும்....!

இதைப் போன்ற உணர்வுகளால் தான் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். வேறு மார்க்கம் இல்லை.