ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2018

மனிதன் வாழ்க்கையின் கடைசி எல்லை - உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்கும்...!


கிட்னி மாற்று (KIDNEY) ஆபரேஷன் செய்தால் இன்னொரு மனித உடலில் இருக்கக்கூடிய அந்த உறுப்புகளை எடுத்து பழுதான உடலில் இணைக்கின்றார்கள்.

அப்படிப் பொருத்தினாலும் கூட இவர்கள் இரத்தம் வேறு. அவர்கள் இரத்தம் வேறு. இந்த உறுப்பில் இருக்கின்ற அணுக்கள் வேறு. அவர்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் வேறு.

இதை இரண்டையும் இணைக்கச் செய்வதற்கு இதை சமப்படுத்துவதற்காக வேண்டி ஒரு மருந்தைக் கொடுப்பார்கள். கிட்னி ஆபரேஷன் செய்யும் போது இந்த மருந்தைக் கொடுத்தவுடனே இரண்டும் ஒத்துக் கொள்கின்றது.

அப்பொழுது புதிதாக ஒட்ட வைத்த அந்த கிட்னி அது கொஞ்சம் கொஞ்சமாக ஜீவனாகி வேலை செய்யும். ஆனாலும் அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

1.யாராவது காய்ச்சல் உள்ளவர்களைப் பார்த்து விட்டாலும்
2.சாப்பிடும் தட்டைக் கொதிக்கின்ற தண்ணீரில் கழுவாமல் சாப்பிட்டாலும்
3.அந்த எதிர்ப்பு சக்தி இல்லாததால் மறுபடியும் கிட்னி கழன்று கொள்ளும்.
4.அந்த மனக்கட்டுப்பாடு இல்லை என்றால்
5.காசு செலவழித்து ஆபரேஷன் செய்தும் பயன் இல்லாமல் போய்விடும்.

ஏனென்றால் இந்த உடலில் சிறிது நாள் வாழ்வதற்கு இத்தனை முயற்சி எடுக்கின்றோம். இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கின்றோம்.

உடல் சரியில்லை என்றால் உடனே டாக்டரிடம் போகின்றோம். மருந்தைச் சாப்பிடுகின்றோம். ஓரளவிற்குக் குணமானதும் வந்து விடுகின்றோம்.
1.மறுபடியும் நோய் வருகிறது.
2.மறுபடியும் டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிடுகின்றோம்.
3.இப்படி நோய் வந்து கொண்டே தான் இருக்கின்றது.
4.நாம் மருந்தைச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கின்றோம்.
5.கடைசியில் எல்லா மருந்தும் ஒட்டு மொத்தமாகப் போட்டு ஒரே அமுக்கு அமுக்கிவிடுகின்றது.
6.அமுக்கியவுடனே உடலெல்லாம் நலிந்து “உன் விதி அவ்வளவு தான்...!” என்று உயிர் வெளியில் போகின்றது.

இந்த உடலில் நாம் சேர்த்து கொண்ட உணர்வுக்கொப்ப இன்னொரு உடலில் கொண்டு பொருத்தி விடுகிறது. உடலில் சேர்ந்த விஷத்திற்கு தகுந்த மாதிரி அடுத்த உடலை மாற்றி விடுகிறது. இது உயிரின் வேலை.

உதாரணமாக கொடூரமாகத் தாக்கும் புலியை மான் அதிகமாகப் பார்த்த பின் பயத்தினால் புலியின் உணர்வு பூராம் மானின் உடலுக்குள் போகின்றது.

அதைத் தான் கண்ணன் வெண்ணெயைத் திருடுகின்றான் என்று சொல்வது.
1.புலியின் வலுவான உணர்வு மானின் உயிரிலே மோதி
2.உன்னை அது கொல்லப் போகின்றது என்று சொல்கின்றது.
3.அதன் வழி தப்பித்துப் போகின்றது.

இருந்தாலும் மான் புலியை உற்றுப் பார்த்துப் பயந்த உணர்வுகள் அனைத்தும் மானின் இரத்தத்தில் கலக்கின்றது. புலியின் வலுவான உணர்வுகள் மானின் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் சேர்ந்து விடுகின்றது.

அப்போது மானுக்குப் புலியின் நினைவே அதிகமாக இருக்கின்றது. மான் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு எங்கே போகிறது...?

1.செத்தவுடனே மானின் ஈர்ப்பிற்குத் தான் போக வேண்டும்.
2.ஆனால் புலியின் நினைவு அதிகரித்ததால் புலி உடலின் ஈர்ப்புக்குப் போய்ப் புலியாகப் பிறக்கிறது.
3.மான் புலியிடம் சிக்கியவுடனே எத்தனை வேதனைப்படுகிறது..?
4.எலி பூனையிடம் சிக்கியவுடனே அது எத்தனை வேதனையாகிறது...?

இப்படித்தான் நாம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தோம். பல கோடித் தீமைகளை நீக்கி எல்லாவற்றிலும் எத்தனையோ கொடுமைப்பட்டுத்தான் மனிதனாக வந்திருக்கிறோம்.

ஒரு எலி பூனைக்கு இரையாகின்றது. அந்த வேதனையுடன் என்னைக் கொல்கிறானே என்று எண்ணுகின்றது. பூனை உடலுக்குள் போகின்றது.

இத்தனை வேதனைகளையும் பட்டுத்தான் பூனை உடலுக்குள் எலி போகின்றது. ஆனால் அந்த எலி பூனைக் குட்டியாகப் பிறக்கும் போது அந்தப் பூனை எத்தனை வேதனைப்படுகின்றது..?

அதே போன்று தான் மான் வேதனையுடன் தான் புலி உடலுக்குள் போகின்றது. புலிக் குட்டியாக அது பிறக்கும் போது அந்தப் புலிக்கு வரும் வேதனை எத்தனை வேதனை...?

இவைகள் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று ஆகி இந்த வேதனை உணர்வுடனே தான் வளர்ந்து வருகிறது. இதே மாதிரி நாம் எத்தனையோ உடல்கள் பெற்றிருக்கின்றோம்.

பாம்பு நம்மைக் கடிக்கும் என்று அதை அடித்து நரக வேதனைப்படுத்துகின்றோம். பாம்பின் உயிர் நமக்குள் வந்து விடுகிறது. பாம்பின் உயிர் நம் உணர்வை எடுத்து மனிதக் கருவாகின்றது. “மனிதனாகவே பிறக்கின்றது....!”

மனிதனாகப் பிறக்கும் நிலையில்
1.குழந்தை பிறக்கும் முன்னாடி அந்தத் தாய் படும் அவஸ்தை எத்தனை எத்தனை..?
2.பிறந்த பிற்பாடு எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்...?
3.ஆனாலும் பாசத்தால் குழந்தையை ஆதரித்து நல்ல முறையில் வளர்க்கின்றோம்.

எலியைக் கொன்று சாப்பிட்டது பூனை. அந்த எலியின் உயிர் போகும் போது பூனையின் உடலுக்குள் சென்று பூனையாகப் பிறந்தவுடனே தன் குட்டியைக் காக்கும் தன்மை வருகின்றது.

இப்படித் தான் இயற்கையின் தன்மையில் ஒவ்வொன்றும் விளைகின்றது என்பதனை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டினார்.

இத்தனையும் குருநாதர் அனுபவத்தில் தான் கொடுத்தார். பாட நிலைகளில் அல்ல. நான் அனுபவித்தேன். தெரிந்து கொண்டேன்.

இத்தனையும் அனுபவித்துத் தெரிந்து கொண்ட பிற்பாடு...
1.நீங்கள் தீமைகளில் போய்ச் சிக்காதீர்கள் என்று
2.உங்களுக்கு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றேன்.

ஞானிகளின் அருளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் யார் கேட்கின்றார்கள்...? அதைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

இவ்வளவு பேருண்மைகளைக் கொடுக்கின்றோம். ஆனால் அவர்களை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் எங்கே போகின்றோம் என்ற வகையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நீங்கள் எங்கே சென்றாலும் நோயை நீக்கி எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் எந்தக் கோயிலுக்குப் போய் ஆண்டவனைத் தரிசிக்கப் போனாலும்
1.யாம் சொல்லும் முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பாருங்கள்.
2.உங்களை உங்கள் எண்ணம் தான் காக்கும். நிச்சயம்...!