ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 1, 2018

வயலில் களைகள் முளைப்பது போல் வாழ்க்கையில் தீமைகள் மீண்டும் மீண்டும் வந்தாலும் நல்ல குணங்களைக் காக்கும் அருள் சக்திகளைக் கொடுக்கின்றோம்…!


நாம் வயலைப் பண்படுத்தி நல்ல விதைகளை விதைக்கின்றோம். பூமியில் பதிந்த அந்த விதை பூமியின் துணை கொண்டு
1.பூமியின் காந்த இயக்கத்தைக் கொண்டு (ஈர்ப்பு சக்தி)
2.அதற்கு பருவமான நிலைகள் வரும் போது
3.காற்றிலிருந்து தன் இனமான சக்தியை இழுத்து அது வளர்ந்து விளைகின்றது.

அதே சமயத்தில் நாம் விதைத்த பயிருடன் சேர்த்து களைகளும் முளைக்கும். எக்கச்க்கமாக வளரும். நாம் இதைக் கவனிக்காது விட்டு விட்டால் என்ன ஆகும்…?

பயிருக்கு இடும் உரம் மற்றும் தண்ணீரை இந்தக் களைகள் வேகமாக தனக்குச் சத்தாக எடுத்துக் கொள்ளும். விதைத்த நல்ல விதைகளின் பலன் ராசி இருக்காது.

அதைப் போல நல்ல குணங்கள் கொண்டு நீங்கள் பல நன்மைகளைச் செய்தாலும் என்ன நடக்கின்றது..?

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றீர்கள். ஒருவர் சிரமப்படுகின்றார் என்றவுடன் தாராளமாக நூறு ரூபாய் எடுத்துக் கொடுக்கின்றீர்கள். அதைப் பார்த்தவுடன் அடுத்து நோகாமல் ஒரு வார்த்தை சொல்லி விடுவார்கள்.

இவர் லாபம் இல்லாமல் எதாவது செய்வாரா…? தேடி வந்து மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் “லாபம் இல்லாமல் இவர் எப்படிச் செய்வார்…!” என்று சொல்வார்கள்,

எங்கெங்கோ கொள்ளை அடித்து விட்டு அதைக் கொண்டு வந்து இங்கே கொடுக்கிறார்…! என்று இன்னொருவர் சொல்வார்.

அவர் சொன்ன உடனே நான் இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்கிறேன், “என்னை இவ்வாறு சொல்கிறார்களே…” என்று வேகமாக எடுத்தால்
1.அவர் கெடுமதியான புத்திதான் நமக்குள் வந்து ஆத்திரத்தை கூட்டும்.
2.நாம் செய்த நல்லது அனைத்தும் பாலுக்குள் விஷம் பட்டது போல் ஆகி விடும்.

என்னை இப்படிச் செய்கிறார்களே… இப்படிச் சொல்கிறார்களே…! என்று வேதனை வந்துவிடும்.

இந்த வேதனையான நிலையில் இருக்கும் போது வியாபாரம் செய்தாலும் ஒருவருக்குச் சரக்கை எடுத்துக் கொடுக்கும் பொழுது அந்த வேதனை வந்துவிடும். வேதனையுடன் வியாபாரம் செய்யும் பொழுது அது மந்தமாகும்.

ஏனென்றால் அடுத்தவர் தன்னைப் பற்றிச் சொன்ன அந்தக் குறையைத் தான் தாங்க முடியாதபடி எடுத்து கொள்ளும் பொழுது அந்த வேதனையை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தவில்லை என்றால் அதைப் போன்ற களைகள் அடுத்தடுத்து முளைத்துக் கொண்டே வரும்.

அதிகமாக அந்தக் களைகள் முளைத்தவுடன் உடலில் கை கால் குடைச்சல் வந்துவிடும். காசைக் கொடுத்து டாக்டரிடம் சென்று அதை நீக்கலாம்.

வயல்களில் களைகளை எடுத்தாலும் மீண்டும் முளைக்கும். அதைப் போல இந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து உடலில் அந்தக் களைகள் முளைக்க முளைக்க நல்ல குணங்களை அழித்து கொண்டே இருக்கும்.

மனித வாழ்க்கையிலே நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அந்த ஒரு நொடிக்குள் பிறர் செய்யும் தவறைக் கூர்ந்து கவனித்தாலே போதும். அது நமக்குள் வந்து நமது நல்ல குணங்களை அழித்துவிடும்.

நாம் பாசமாக ஒருவருக்கு உதவி செய்கிறோம். இருந்தாலும் அவர் துன்பங்கள் அதிகமாகி நோயாகி இறந்து விட்டால்
1.என் கஷ்ட நேரத்திலெல்லாம்… “எனக்கு மகராசன் உதவி செய்தார்…!” என்று நம்மை எண்ணினால்
2.அந்த உயிராத்மா நமக்குள் தான் வந்து சேரும்.
3.அவர் பட்ட அந்தக் கஷ்டத்தையெல்லாம் சேர்த்துக் கொடுக்கும்.

நம்மை அறியாமல் வரும் இப்படிப்பட்ட துன்பங்களிலிருந்து மீட்ட வேண்டும் அல்லவா….!

இதிலிருந்து மீளுவதற்குத் தான் தீமைகள் (களைகள்) உங்களுக்குள் வளராது தடுப்பத்தற்குத்தான்
1.உங்கள் மனதைப் பண்படுத்தி பக்குவப்படுத்தி
2.ஞானிகளின் அருள் ஞான வித்தை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

நினைவுக்குக் கொண்டு வந்து அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அவ்வப்பொழுது புருவ மத்தியில் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டித் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது உங்களுக்குள் சேரச் சேர அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை விட விட அழுக்கு நீர் குறைந்து முழுவதும் நல்ல நீராக மாறுவது போல் ஆன்மாவில் அறியாது சேர்ந்த தீமைகள் (களைகள்) அகலும்.
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அருள் ஒளி வட்டமாக நம் ஆன்மாவில் பெருகும்.
2.நம் நல்ல குணங்களைக் காக்கும் பாதுகாப்புக் கவசமாக அது அமையும்.