ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 27, 2018

எம்முடைய உபதேசத்தைக் கூர்ந்து பதிவாக்கிக் கொண்டால் “துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகள்… உங்களுக்குள் ஊடுருவுவதைக் காணலாம்…!”


நாம் கெட்டதைப் பார்க்கின்றோம். அந்த உணர்வைத் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அந்த உணர்வு நம் உடலுக்குள் பதிந்து விடக்கூடாது. வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய தீமையென்றாலும் இதை உடனுக்குடனே மாற்ற வேண்டும்.

இதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…? நமக்கு ஒரு சக்தி வேண்டுமல்லவா… ஈஸ்வரா…! உங்கள் புருவ மத்தியில் உயிரிடம் வேண்டுங்கள்.
1.அதை எடுப்பதற்குத் தான் உங்களிடம் சக்தி கொடுக்கின்றோம்.
2.அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
3.ஈஸ்வரா… என்று சொல்லி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி
4.உயிர் வழியாக (புருவ மத்தி) உடலுக்குள் செல்லும்
5.தீமைகளை இடைமறித்து… “அடைத்து”
6.அருள் உணர்வை இணைக்க வேண்டும்.

ஏனென்றால் முதலில் தீமை போனவுடனே அதற்குண்டான கருவாகி (முட்டையாக) விடுகின்றது. அந்தக் கருவின் தன்மை அணுவின் தன்மை அடைவதற்கு முன்னாடி அந்தக் கருவிலேயே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்து விட வேண்டும்.

இணைத்து எங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்வின் அலைகளைப் பரப்பப்படும் போது இது வலுவாகி அந்தத் தீமையைத் தள்ளிவிடுகின்றது. அப்போது தீமைகளை அதிகமாகச் சுவாசிக்கக்கூடிய நிலைகளை மாற்றுகின்றது.

நாம் தவறு செய்வோரைக் கண்ணில் பார்க்கும் பொழுது கருவிழி நமக்குள் உள்ளுக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கி விடும்.

நிலத்துக்குள் ஒரு வித்தினை ஊன்றினால் எப்படியோ அதே மாதிரித்தான் “ஊழ்வினை” என்பது வித்து. நீங்கள் எதைப் பார்த்தாலும் வித்தாகத் தான் மாறுகின்றது. அதன் அலைத் தொடரை அது எடுக்கும் என்பதைக் காட்டுகின்றணர் ஞானியர்.

அப்போது அந்த ஆன்மாவாகும் போது உணர்வை அறிகின்றோம். உணர்வின் அலைகள் உடலுக்குள் போகின்றது. வித்து எதனால் உருவானதோ அந்த அணுக்களுக்கு ஆகாரமாகப் போய்ச் சேர்கின்றது.
1.ஆனால் அந்த வித்து… “பதிவு ஆகவில்லை” என்றால் சுவாசத்தின் மூலம் எடுக்கவே எடுக்காது.
2.உபதேசத்தின் மூலம் அந்த மகரிஷியின் உணர்வைப் பதிவு செய்யும் போது
3.அது உங்களுக்குள் வித்தாகி விடுகின்றது.
4.வித்தானால் தான் அந்தச் சக்திகளை நீங்கள் பெற முடியும்.
5.இது மிகவும் முக்கியம்.

சில நேரங்களில் யாம் உபதேசங்கள் கொடுக்கும் போது அந்த மகரிஷிகள் உணர்வுடன் குருநாதர் காட்டியதை இணைத்துக் கொடுக்கும் போது கண்களிலே சில வித்தியாசங்கள் வரும்.

அந்த வித்தியாசங்கள் வரப்போகும் போது அந்த அலைகள் ஒளிகள் “பளீர்…!” என்று வெளிப்படும். அந்த நேரத்தில் யார் யார் கூர்மையாகப் பார்க்கின்றார்களோ இதைப் பெறவேண்டும் என்று ஏங்கி எண்ணுகின்றார்களோ அந்த உணர்வோடு ஒட்டி ஒளியின் தன்மை அங்கே பதிவாகிவிடுகின்றது.

கெட்டவர்களைப் பார்க்கும் போது எப்படி உங்களுக்குள் பதிவாகி விடுகின்றதோ இதைப் போல தான்
1.நீங்கள் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் வரும் போது
2.உங்களுக்குள் ஒளிக்கற்றைகள் ஊடுருவிப் பாயும்.

ஆகையால் தான் மற்றவர்கள் பேசுவதைக் காட்டிலும் யாம் (ஞானகுரு) பேசும் போது அந்த ஏக்கத்திலேயே பார்த்துப் பதிவாக்குகின்றோம். அந்த உணர்வுகள் பதிவாகப் போகும் போது ஒளிச்சுடராகப் பெறும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்.

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் இது உங்கள் நினைவிற்கு வரப்படும் போது ஒளியான உணர்வுகள் பெருகும் தன்மை வருகின்றது. உங்கள் கண்களிலேயே பார்க்கலாம் நீங்கள்...!

கூட்டுத் தியானமாக இது அமைக்கப்பட்டு எல்லோரையும் இணைத்துச் சக்தி வாய்ந்ததாக ஆக்கிக் காற்றிலிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இழுத்து உங்களுக்குள் வளரச் செய்கின்றோம்.

ஏனென்றால் எல்லோரும் சேர்ந்து எடுக்கும் போது மொத்தமாக வருகின்றது. உங்களிடம் இணைக்கின்றதற்குத் தான் இப்படி ஒரு குருநாதர் காட்டிய அருள் வழியில் செய்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு ஒன்றைக் கொடுத்தார். அப்படி அதை எப்படிப் பக்குவப்படுத்தச் சொன்னாரோ அந்த வழியில் தான் உங்கள் அனைவருக்கும் கொடுக்கின்றோம்.

எனக்கு இதைச் செய்து கொடுங்கள். அதைச் செய்து கொடுங்கள் என்று நான் தனித்து ஒன்றும் செய்து கொடுக்க முடியாது. எல்லோருக்கும் அந்த உணர்வின் தன்மையைப் பதிவு செய்யப் போகும் போது
1.குருநாதர் சொன்ன வழியில் நீங்கள் எடுத்தீர்கள் என்றால்
2.அந்த மெய்ப் பொருளை வளர்க்க முடியும்
3.மெய் ஞான வழியில் நிச்சயம் செல்ல முடியும்…!