ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 24, 2018

தங்கம் செய்யும் வித்தையைக் காட்டினார் குருநாதர்

குருநாதர் என்னை பழனிக்கு அருகில் இருக்கும் மலைக்கு அழைத்துச் சென்று ஒரு கரண்டியும் ஈயமும் எடுத்து வரச் சொல்லிச் சொன்னார்.

அங்கு அவர் சொன்ன இடத்தில் இருக்கும் செத்தைளை எல்லாம் எடுத்து வரச்சொல்லி “இந்த இடத்தில்.., இந்த மாதிரி செத்தைகள் இருக்கும், எடுத்துக் கொண்டு வா…” என்று எனக்கே தெரியாமல் அவர் இதையெல்லாம் செய்கிறார்.

நான் அதையெல்லாம் எடுத்து வந்தவுடன் அந்தக் கரண்டியை வைத்து அந்த ஈயத்தையும் வைத்து இந்தச் செத்தைகளெல்லாம் போட்டுத் “தீயை வைத்து எரிடா…” என்றார்.

அது எரிந்து வந்தவுடன் இந்த ஈயம் உருகியது. உருகியவுடன் அது தங்கம் போன்ற நிறமாக மாறியது. அது அப்படியே எரிந்து கொதிக்கிறது.

கொதித்தவுடன்.., “எப்படி இருக்கிறது?” என்று எம்மிடம் கேட்டார் குருநாதர்.

நான் “ஜகஜகஜக…” என்று இருக்கிறது சாமி என்றேன்.

என்னடா ஜகஜகஜக! என்று இரண்டு அடியும் கொடுத்தார். மறுபடியும் எப்படி இருக்கிறது? என்றார்.

ஜக ஜக ஜக என்றேன் நான்.

திரும்பவும் என்னடா ஜக ஜக ஜக என்று சொல்கிறாய்? என்று, இரண்டாவது தடவையும் ஒரு அடி கொடுத்தார் குருநாதர்.

மீண்டும் நான் என்ன செய்தேன்? ஜக ஜக ஜக என்று சொன்னேன்.

அப்புறமும் எப்படி இருக்கிறது? என்று கேட்டார் குருநாதர்.

தங்கம்…” மாதிரி மின்னுகிறது சாமி.., என்றேன்.

குருநாதர் அப்படிச் சொல்லுடா, “தூ என்று சொல்லி அவர் உமிழ் நீரை அதில் துப்புகிறார். துப்பியவுடன்.., மூடுடா என்றார்.

பின் அதை எடுத்துப் பார்த்தால், உறைந்து இருக்கிறது. “பார்த்தால் தங்கக்கட்டி. அலுங்காமல் கொண்டு போய் அதை விற்றுவிட்டு வா என்றார்.

இது உண்மையா பொய்யா? என்பதைத் தெரிந்து கொள்ள இரண்டு பேரும் தங்க வேலை செய்பவரிடம் கொண்டு சென்று கொடுத்தோம்.

அவர் உரசிப் பார்த்து விட்டு..,  “அட..அட..அடடடா., என்ன இது! சாமியிடம் நீங்கள் கற்றுக் கொண்டதைக் கொண்டு வாருங்கள். நாம் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.

இங்கு நகைக் கடையில் கொடுத்தால், நீ ஏன் பைத்தியம் கூடச் சேர்ந்து சுற்றினாய்! என்று “இப்பொழுதுதான் தெரிகின்றது. ஏதோ விஷயத்தோடு தான் சுற்றியிருக்கிறாய் என்கிறார்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டுவா, உனக்கு நான் காசு தருகிறேன். இருவரும் லாபத்தில் பங்கு எடுத்துக் கொள்ளலாம். நீ சும்மா செய்கிறாய். ஆனாலும், நான் இன்றைக்கு உள்ள தங்க விலையில் பாதியை உனக்குக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள், யாரிடமும்  சொல்ல வேண்டாம் என்கிறார்.

இன்னொருவர் வாத்தியார் இராமகிருஷ்ணன் என்பவர் பாதரசத்தைச் செய்கிறேன் என்று அந்த ரசத்தைக் கூட்டி, எனக்குத் தங்கம் செய்வதைக் கொஞ்சம் சொல்லிக் கொடு.

நான் பாதரசத்தைக் கட்டிக் கட்டி முடியவில்லை. நீ தங்கத்தைச் செய்யும் வித்தையை, எனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடு என்கிறார்.

நீ செய்ய வேண்டாம், நானே செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டியதைச் சொல் நான் கட்டித் தருகிறேன் என்று கூறி என் பின்னாடியே சுற்றிக் கொண்டு இருந்தார். பின் கடைசியில் அவர் செத்தும் போனார்.

இப்படி எல்லாம் மனிதனுடைய ஆசைகள். எப்படியெல்லாம் மனிதருக்கு ஆசைகள் வருகிறது? எமக்கே (ஞானகுரு) இதைச் செய்தபின் கடைகளில் பணத்தை வாங்கி வந்து என் பிள்ளைகளுக்குச் செய்யலாம் என்ற எண்ணம் வருகிறது.

குருநாதர், தங்கத்தை விற்ற அந்தக் காசை வாங்கிக் கொண்டார். “பார், எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் கஷ்டமெல்லாம் எப்படி இருக்கிறது? அதை நிவர்த்தி செய்ய வேண்டுமா இல்லையா?” என்று கூறி அந்தப் பணம் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, எமக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.

இத்தனை தூரம் செய்த பிற்பாடு, இந்த ஒரு ரூபாயை எம்மிடம்  கொடுத்து உன் பிள்ளைகளுக்கு, “மிட்டாய் திண்பண்டங்கள் வாங்கிக் கொடு என்கிறார், குருநாதர்.

ஆக இப்படிச் செய்தவுடன் எமக்கு என்ன ஆசை வருகின்றது?

குருநாதருக்குத் தெரியாமல், அவர் சொன்ன இடத்திற்கெல்லாம் சென்று அந்த செத்தைகளையெல்லாம் போட்டு ஈயக் கரண்டியும் கொண்டு வந்து அவர் செய்த மாதிரியே யாமும் செய்தோம்.

அதே மாதிரி தங்கமாக மாறியது.

இரண்டாவது முறையாகத் தங்கம் ஆனவுடன் இரண்டு பேரிடம் தங்கம் பதம் பார்ப்பவர்களிடம் கொடுத்து, அது எப்படி இருக்கிறது என்றேன்?

அட..அட..அட., நைனா.., உனக்கு இன்றைக்கு உனக்கு கோடீஸ்வரன் ஆவதற்கு நேரம் வந்துவிட்டது. உங்களைத் தேடி எத்தன பேர் வருவார்கள்? என்று இதில் பெருமை பேசுகின்றார்கள்.

இவர் இப்படிச் சொன்னவுடன், அங்கிருந்து குருநாதர் வருகிறார். ரோட்டில் திட்டிக் கொண்டே.., “ஏய்.. திருட்டுப் பயலே.., திருடா.., டேய்.. தெலுங்கு ராஜ்யம்..,” என்று எம்மைத் திட்டிக் கொண்டு வருகிறார்.

ஒரு சைக்கிள் செயினையும் கையில் எடுத்துக் கொண்டு வந்தார். இப்படி யாம் ரகசியமாகத் தங்கம் செய்தோம் என்று “டேய்.. திருடா என்று சொல்லிக் கொண்டே வருகின்றார் குருநாதர்.

நான் என்ன செய்தேன்? எழுந்து விழுந்தடித்து சந்துப் பக்கம் ஓடி ஒளிந்து கொன்டேன். அங்கேயும் பின்னாடி என்னைத் துரத்திக் கொண்டே வந்து விட்டார் குருநாதர்.

அவர் எங்கேயோ இருந்து கத்திக் கொண்டே வருகிறார். “ஏய்.., திருடா. தெலுங்கு ராஜ்ஜியம் என்று தான் திட்டுவார் என்னைத் திட்ட மட்டார், தெலுங்கு ராஜ்ஜியம் என்று தான் சொல்லித் திட்டிக் கொண்டே வந்தார்.

அப்பொழுது தங்கத்தை எடுத்துக் கொண்டு “ஓடி.., ஓடிப் பார்க்கிறேன். இருந்தாலும் என்னால் முடியவில்லை கடைசியில் என்னைச் சுற்றி வளைத்துவிட்டார்.

இங்கே வாடா என்றார் குருநாதர். எவ்வளவு தங்கம் செய்தாய்? என்று பிடித்துக் கொண்டார்

அவரிடமிருந்து தப்ப முடியவில்லை. தங்கத்தை அவர் வாங்கிக் கொண்டார். போய் விற்றுவிட்டு வாடா என்றார். விற்றுவிட்டு வந்தவுடன், பணத்தை அவரே வாங்கிக் கொண்டார்.

ஏன்டா உனக்கு இந்தத் திருட்டுப் புத்தி? என்றார் குருநாதர்.

1.உன் மனதைத்தான் தங்கமாக்கும்படி நான் சொன்னேன். இதில் எத்தனை நிலைகள் இருக்கின்றது?
2.உன் மனதைத் தங்கமாக்கினால் எத்தனை தங்கம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஏன்டா உனக்கு இந்தப் புத்தி வருகிறது? என்றார்.

அந்த நிலையில் தங்கம் செய்யும் ஆசை எனக்கு வரப்போகும் போது, இதே போல் நான் செய்த மாதிரி அடுத்தவர்களுக்கும் ஆசை வரத்தானே செய்யும்.

நான் குருநாதரிடம் பழகிக் கொண்டு இருக்கும் போதே அவருக்குத் தெரியாமல் காசு சம்பாதித்துவிடலாம். வீட்டுக் கஷ்டத்தையும் போக்கி விடலாம் என்று இந்த உணர்வுதான் வருகின்றது.

ஏனென்றால், மனிதனுடைய மனங்கள் எப்படி இருக்கிறது? என்று சோதிக்கிறார், குருநாதர்.

பின் தங்கம் செய்து விற்றார் என்று சொல்லிக் கொண்டு எமக்குப் பின்னால் எல்லோரும் தேடி வருவதற்கு ஆரம்பித்தார்கள்.

கொஞ்சம் சொல்லிக் கொடு, நாங்கள் செய்து கொள்கிறோம் நீ செய்ய வேண்டாம்.. நீ செய்தால் தானே குருநாதர் உன்னை விடமாட்டார். நீ சொல்லிக்கொடு, நான் எல்லாம் செய்துகொள்கிறேன். உனக்கு வேண்டியதை நான் செய்கிறேன். பாதிப் பங்கு கொடுக்கிறேன் என்று சேர்ந்து எம்மைச் சுற்றிக் கொண்டு வந்தவர்கள் ஏராளமானோர்.

ஏனென்றால் குருநாதர் ஒவ்வொரு ஆசையின் தன்மைகளை எமக்குக் காட்டி, காட்டுக்குள் அழைத்துச் சென்று இதையெல்லாம் தெளிவுபடுத்தினார்.

மனதை நீ எப்படித் தங்கமாக்க வேண்டும் என்று இங்கு தெளிவாகக் காட்டுகிறார்.

ஆக சூரியன் எப்படிப் பல உணர்வை எடுத்துப் பாதரசமாக மாற்றி உலகத்தின் தன்மையை எப்படி உருவாக்கும் தன்மை பெறுகின்றதோ அதே மாதிரித்தான் எல்லா மனிதனுடைய உணர்வும் இந்த பாதரசத்தின் தன்மை அடைந்தது அதன் உணர்வின் தன்மை பெற்றது தான் அந்த உயிர்.

ஆக மொத்தம் உன்னுடைய உயிரையும் இதே போல ரசமாக்குதல் வேண்டும் உணர்வின் தன்மையை ஒன்றாக்குதல் வேண்டும்.

எப்படிப் பாதரசம் சுக்கு நூறாக ஆனாலும் அது மீண்டும் ஒன்று சேர்ந்து ஆகின்றதோ அதன் வழியில் நீ செயல்படுதல் வேண்டும் என்பதைத்தான் இப்படி அங்கே காட்டினார்.


உயிருடன் ஒன்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக்கி “உயிரை மணியாக்கும் நிலைக்கு இத்தகைய அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்.