ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2018

இறந்தபின் உடல் அழுகி நாற்றமாகின்றது…! நாம் யார்…! அந்த உடலா அல்லது உயிரா..?


நமது உடல்…! என் உடல்…! என்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் நமது உடலுக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளின் அணுக்கள் நமக்குள் உண்டு. அதனின் மலமே நமது உடல்.

இந்த உயிரான ஈசன் உடலை விட்டுப் போய் விட்டால் இந்த உடலான சிவம் “சவமாகி விடுகின்றது…!”

நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் ஓ…ம் நமச் சிவாய… ஓ…ம் நமச் சிவாய…! என்று நமது உடலாக சிவமாக மாற்றிக் கொண்டே உள்ளது.
1.உயிரின் இயக்கத்தால் தான் நாம் இயங்குகின்றோம்
2.அந்த உயிரின் இயக்கம் இல்லை என்றால் நம் உடலில் உள்ள அணுக்களிலும் இயக்கம் இல்லை.

நாம் எத்தகைய குணங்கள் கொண்ட உணர்வின் தன்மைகளை இந்த உடலில் வளர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்கள் எல்லாம் இந்த உடலை விட்டு உயிர் சென்று விட்டால் இந்த உடலையே தின்னும் அணுக்களாக மாறிவிடுகின்றது.

முதலிலே உயிரின் இயக்கத்தில் நாம் நுகர்ந்த உணர்வின் மணம் அந்த உணர்ச்சிக்கொப்ப உடலாகின்றது.
1.உயிரின் துடிப்பால் இயக்கும் அணு “ஜீவ அணு”
2.அது நுகர்ந்த உணர்வின் மலம் உடலாகும் போது சிவமாகின்றது.
3.ஆனாலும் இந்த உயிர் உடலை விட்டுச் சென்றபின் இந்த ஜீவ அணு உயிரணுவாக மாறுகின்றது.

அதாவது உடலை உருவாக்கிய அணுக்கள் நம் உடலையே உணவாக உட்கொள்ளும் உயிரணுவாக மாறி விடுகின்றது. இப்படி அணுவான பின் அந்த அணுவின் மலம் வெளிப்படும் போதுதான் “நாற்றமாகின்றது…!”

நாம் எந்தெந்தக் குணத்தை எடுத்தோமோ அதற்குத்தக்க நம் உடலில் நல்ல மணங்களாக இருக்கின்றது. ஆனால் (உயிர் போன பின்) அதே உடலை இந்த உயிரணு நுகர்ந்து அது உணவாக உட்கொண்டால் நாற்றம் சகிக்க முடியாது.

எத்தனை வகைச் செடிகளை இது கவர்ந்து அந்த அணுக்கள் அதன் உணர்வின் தன்மை நம் உயிர் நுகர்ந்து ஜீவ அணுக்களாக மாற்றியதோ இந்த உயிர் சென்றபின் ஜீவணுக்கள் உயிரணுவாக மாறி உடல் பெற்றுப் புழுக்களாகி விடுகின்றது.

இறந்த சரீரம் அழுகிப் போய்விட்டது என்றும் நாற்றமாகின்றது என்றும் சொல்கின்றோம் அல்லவா…!

1.மனிதனுக்குள் எத்தனை விதமான வேதனைகளைப்பட்டோமோ
2.எத்தனை வேதனைப்படுத்தினோமோ… எத்தனை துயர்படுத்தினோமோ…
3.இந்த உணர்வின் மலம் நம் உடலாக ஆனாலும்
4.உயிர் வெளியேறிய பின் அந்த அணுக்கள் புழுவாகி அதனின் மலத்தை வெளிப்படுத்தும் பொழுது நாற்றமாக வெளிப்படுகின்றது.

மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகத்தான் நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம். பலவிதமான ஆசைகளையும் வளர்க்கின்றோம்.

கடைசியில் ஆசைகள் அனைத்தும் நிராசையாகி வேதனையுடனே உடலை விட்டுப் பிரிகின்றோம்.

ஆனால் ஞானிகளோ மகரிஷிகளோ “தான் யார்…?” என்ற நிலையில் தன்னை அறிந்து உயிரின் இயக்கதையும்… உயிரால் உருவாக்கப்பட்ட உடலின் நிலைகளையும்… அறிந்து கொண்டவர்கள்.

அவர்கள் இந்த உடல் பற்றை வளர்க்காது உயிர் பற்றை வளர்த்தவர்கள். உயிருடன் ஒன்றி நிலைத்ததாக… ஒளியின் சரீரமாக… மரணமில்லாப் பெரு வாழ்க்கையாக… “விண்ணிலே வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்…!”
1.அந்த உயிர் பற்றை நாம் வளர்த்தால்
2.அவர்களைப் போன்று நாமும் அழியாத வாழ்க்கை வாழலாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய உண்மைகளைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். இதில் அவரவர்களுக்கு “எது பிரியமோ” அதை எடுத்துக் கொள்ளலாம்.