ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 21, 2018

துருவ நட்சத்திரத்தை எப்படி எண்ணித் தியானிக்க வேண்டும்…? துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டிய முறை


எங்கள் அம்மா அப்பாவின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அவர்கள் அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

“ஈஸ்வரா…!” என்று சொல்லும் பொழுது உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்தி அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்க வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்து துருவ மகரிஷியாகி அவன் திருமணமாகிக் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி இருளை நீக்கி அருளைப் பெருக்கி ஒளி என்ற உணர்வு பெற்று இன்று ஒளியின் உடலாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
1.கண்ணின் நினைவினை “நேராக…..!” துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2,பூமியின் வடகிழக்குத் திசையில் வானை நோக்கிச் செலுத்துங்கள்
3.துருவ நட்சத்திரத்துடன் கண்ணின் நினைவை ஒன்றச் செய்யுங்கள்
4.அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி அந்தக் கண்ணின் வழியே ஏங்கி இருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்ற “ஆசையோடு…” ஏங்கி இருங்கள்.

1.ஆசை என்பது வசிஷ்டர் - கவர்ந்து கொள்ளும் சக்தி.
2.நம் உடலுக்குள் நுகர்ந்தால் வசிஷ்டர் பிரம்ம குரு. அந்தத் தீமையை நீக்கும் உணர்வு அணுவாக விளைகின்றது.
3.எந்த உணர்வின் தன்மை அங்கிருந்து சூட்சமத்தில் வருகின்றதோ நமக்குள் அணுவாக்கப்படும் பொழுது பிரம்மமாகின்றது (வசிஷ்டர்).

அந்தத் துருவ நட்சத்திரம் இருளை நீக்கி அந்தச் சக்தியாக இருக்கின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்ந்து இணைந்து (அருந்ததி) தீமைகள் நீக்கும் உணர்ச்சிகளாக உருவாகின்றது. பிரம்ம குருவின் மனைவி யார்…? அருந்ததி.

ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். அவருடைய வேதனையை நீக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். வேதனைப்படுவதைப் பார்த்து உதவி செய்கின்றோம். அது வசிஷ்டர் பிரம்ம குரு. அந்த வேதனை உணர்வு நமக்குள் வந்து பிரம்மமாகி விடுகின்றது.

பிரம்ம குருவின் மனைவி யார்…? அருந்ததி. இணைந்து வாழ்ந்திடும் அதே உணர்வை எண்ணும் போது அந்த வேதனை என்ற சக்தி தான் நமக்குள் உருவாகின்றது. அது தான் பிரம்ம குருவின் மனைவி அருந்ததி.

பத்தாவது நிலை அடையக்கூடிய உயிரைச் தசரதச் சக்கரவர்த்தி என்று காட்டுகின்றார்கள். தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் தான் பிரம்ம குரு. எதை ஆசைப்படுகின்றோமோ அது நமக்குள் பிரம்மமாகின்றது.

எந்தக் குணத்தை நாம் பிரம்மமாக்குகின்றமோ (அதாவது) அவர்கள் வேதனைப்பட்ட அதே சக்தியாக நம்மிடம் அது இணைந்து இயக்கத் தொடங்கி விடுகின்றது. அதைத் தான் அருந்ததி என்ற நிலைகள் தெளிவாகக் கூறப்படுகின்றது.

ஆகவே இப்பொழுது எதன் மீது நாம் ஆசைப்பட வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரோளியும் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

மெதுவாகக் கண்ணை மூடுங்கள்.
1.புருவ மத்தியில் வீற்றிருந்து நுகர்ந்ததை உருவாக்கி உணர்ச்சியை ஊட்டி
2.நம்மை இயக்கி நம்மை ஆண்டு கொண்டு இருக்கும்
3.உயிரான ஈசனிடம் இந்த நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா நீங்கள் புருவ மத்தியில் எண்ணும் போது இதற்கு முன்னாடி உங்கள் உடலில் சலிப்பு சஞ்சலம் வெறுப்பு கோபம் பகைமை என்ற உணர்வுகள் உள்ளுக்குள் உள்ளுக்குள் போகாதபடி முதலில் தடுக்கின்றீர்கள். (இந்த முறைப்படி செய்தால்)

ஏனென்றால் எத்தகைய விஷத் தன்மையும் நீக்கும் ஆற்றல் பெற்றது துருவ நட்சத்திரம். கண்ணின் நினைவை அதில் வைத்து உயிரான ஈசனிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வேண்டும் பொழுது
1.உங்கள் உயிரிலே புருவ மத்தியில் ஈர்க்கப்படும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு உங்கள் கண்ணில் உள்ள கருமணிகளிலே படரும்.
3.உங்கள் உயிரோடு மோதும் போது ஒளி அலைகளாகப் புருவ மத்தியில் தோன்றும்…!

ஆசைப்படுங்கள்… நிச்சயம் கிடைக்கும்…! பார்க்கலாம்…!