ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2018

வாழ்க்கையில் நாம் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் உடல் ஆசையின் உணர்வுகள் நம்மை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? ஆசை ஏன் நிராசையாகின்றது…?


நம்மை யாராவது கொஞ்சம் குறையாகச் சொல்லி விட்டால் “என்னை இப்படிப் பேசிவிட்டானே…!” என்ற இந்த ஆசை தான் வருகிறது. இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வு அப்படித்தான் இயக்குகின்றது.

என்னை எப்படி அவர்கள் இப்படிப் பேசலாம்…? அன்றைக்கு நான் உதவி செய்தேன். ஆனால் இன்று என்னை இப்படிப் பேசுகின்றார்களே…! என்று
1.இந்த உடல் ஆசை தான் வரும்.
2.இந்த உயிர் ஆசை வருவதில்லை.

தீயில் குதித்தால் உயிர் வேகுவதில்லை. தீயிலே குதித்தால் உடல் கருகி விடுகிறது. கருகும் உணர்வுக்குத்தான் (உடலுக்குத்தான்) நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். உயிர் ஒளியாக இருக்கும் உணர்வை நாம் என்றுமே எண்ணுவதில்லை.

இருளை நீக்கி அறிவென்ற நிலைகள் நாம் பார்ப்போருக்கெல்லாம் தெரியப்படுத்த வேண்டும். அதனால் இந்த உயிர் ஆசை தான் நமக்கு வேண்டும்.
1.என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்
2.என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…!”
3.நீ எப்படி ஒளியாக இருக்கின்றாயோ குருதேவா
4.என் உணர்வெல்லாம் அதே போல் ஒளியாக இருத்தல் வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.

உயிருக்கு அழிவில்லை…! என்று தெரிகிறது. தீயவினைகளை நீக்கியது கார்த்திகேயா என்றும் தெரிகிறது. ஆனால் அடுத்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று பார்த்த பின்பு நாம் என்ன செய்கின்றோம்…?

அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோம். நம்மால் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.

அப்பொழுது அவர் வேதனைப்படுகிறார் என்ற அந்த ஆசை தான் (எண்ணம்) வருகிறது. “அவரைக் காக்க வேண்டுமே…!” என்ற வேதனையான உணர்வு நமக்குள் வரப்போகும் போது நம் உடலை நம்மால் காக்க முடிவதில்லை.
இதைப் போல ஒருவர் நலம் பெற வேண்டும் என்ற ஆசையில் “வெறுமனே சொன்னால்” பலன் கிடைக்காது. ஏனென்றால் அவர் வேதனை மிகவும் வலுவானது.

 அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று வலுவை நமக்குள் ஏற்றிக் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்திரத்தின் உணர்வுகளை அவருக்குள் பாய்ச்சி அவர் உடல் நலமாக வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்தால் அங்கே அவர் நலமாவார்.
1.இல்லையென்றால் நம்முடைய ஆசை நிராசையாகப் போய்விடும்.
2.எந்தக் காரியத்திலும் சரி… எதிலும் சரி…!
(உயர்ந்த ஆற்றல்களை எடுக்காமல் எதையும் செயல்படுத்த முடியாது)

எல்லாவற்றிலும் இருளை நீக்கி, அருளை பெற்று ஒளி என்ற உணர்வு பெற்று என்றும் ஏகாந்த நிலை கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் “அந்த மகரிஷிகள் வாழும் இடமே நம் இலக்கு…!” நம் கண்ணின் நினைவு அனைத்தும் அங்கு தான் இருக்க வேண்டும்.  

ஒருவர் திட்டிய உடனே இந்த பாவிப் பயல் இப்படியெல்லாம் செய்கிறான் என்று சொல்கிறோம். அப்பொழுது அவன் செய்ததை எண்ணி வேதனைப்படும் பொழுது நமக்குள் அசுர குணங்களை வளர்கிறது. நரகாசுரனாக மாறுகின்றது. நல்ல குணங்களை வளராமல் தடுக்கிறது.

ஆகவே அந்த அசுர குணத்தை வளராது தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று முதலில் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம்மைத் திட்டியவர் உடல் முழுவதும் படர்ந்து
1.அவர் அறியாது சேர்ந்த  இருள் நீங்க வேண்டும்,
2.அவ பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.அவர் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்.
6.அவர் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நமக்குள் அந்த உணர்வு வர வேண்டும்.

 அவரைத் திட்டுவதற்குப் பதில் இது போலச் செய். நன்றாகி விடும் என்று சொல்லுங்கள்.
1.கேட்டால் கேட்கிறான்.
2.கேட்காவிட்டால் போகிறான்.

ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நமக்குள் வலு பெற வேண்டும் என்ற அந்த ஆசையுடன் தான் இருக்க வேண்டும். அவன் தெளிவானவாக வர வேண்டும் என்ற இந்த ஆசையைத் தான் ஊட்ட வேண்டும்.

ஆக மொத்தம் அவன் என்னைப் பற்றி இப்படி பேசினானே…
1.நான் சொன்னதைக் கேட்கவில்லையே என்ற இந்த வேதனை
2.நமக்கு வரவே கூடாது.

ஏனென்றால் இப்படிச் சொன்னால் இந்த ஆசை வந்தவுடனே அந்த வேதனை என்ற உணர்வு நம் நல்ல குணத்தை வளர விடாது தடுக்கும்.  

இதை போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் இந்த வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும். இந்த வாழ்க்கையை எப்படித் தியானமாக்குவது…?

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும்
1.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி  நாங்கள் பெற வேண்டும்.
2.அந்த அருள் சக்தி எனக்குள் பெருக வேண்டும்.
3.உயிர் ஒளியாக இருப்பது போல் என் உணர்வுகளும் ஒளியாக வேண்டும்
4.நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்; 
5.நாங்கள் பார்ப்போரெல்லாம் அவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும்
6.உயிரைப் போன்ற ஒளியான உணர்வுகளை அவர்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

இதை எண்ணி நமக்குள் வளர்த்துக் கொண்டோம் என்றால் இந்த உயிர் ஆசை நமக்குள் என்றுமே நல்லதாகும். நிராசை வராது…! உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.