ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 20, 2018

நல்ல ஒழுக்கமாக நாம் இருந்தாலும் மற்றவர்கள் செய்யும் தவறுகளை அறிந்த பின் அந்தத் தீமைகளை நீக்கவில்லை என்றால் நம் நல்ல அறிவை மாற்றிவிடும்….! – நல்ல அறிவு மாறாதிருக்க என்ன செய்ய வேண்டும்…?


இன்று உதாரணமாக “மந்திரத்தால்…” சில நிலைகளை எடுத்து ஒருவர் நுகர்ந்து கொண்டால்
1.இன்னொரு மனிதனின் உடலில் இருந்து வரக்கூடிய நிலைகளுடன் மோதி
2.அந்த மனிதனின் நுண்ணிய அதிர்வுகளை அறிந்து கொள்ள முடியும்.
3.இதைச் ஜோசியமாகச் சொல்வார்கள்.

அதைப் போல ஒரு மனிதன் தனக்குள் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொண்டால் “ஒருவன் தவறு செய்கின்றான்…!” என்று நுகர்ந்தபின் இவன் தவறு செய்பவன் என்பதை உணரும் அறிவு வருகின்றது.
1.தவறு செய்தான் என்ற உணர்வை இவன்  நுகர்ந்து விட்டால்
2.நுகர்ந்த அந்தத் தவறான உணர்வு இவனுக்குள்ளும் விளையத் தொடங்கி விடுகின்றது.
3.தவறை அறியும் அறிவு வந்தாலும் தவறைத் துடைக்கவில்லை என்றால்
4.நல்ல உணர்வின் அறிவுகளை மாற்றிவிடுகின்றது.
5.இதைப்போன்ற நிலைகளிலிருந்து மனிதன் விடுபடுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகளை நம் உயிர் “ஓ…!” என்று பிரணவமாக்கி “ம்…” என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் காலைத் துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கணவனும் மனைவியும் அவசியம் எடுத்துப் பழக வேண்டும்.

கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் மனைவிக்கு அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று இரு உணர்வையும் ஒன்றாக்கி எவர் விளைய வைக்கின்றனரோ அப்பொழுது இரு உயிரும் ஒன்றாகின்றது. ஒளியின் உணர்வாக நீங்கள் இருவரும் ஆகின்றீர்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து பிறவியில்லா நிலை பெற்றவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் சென்ற வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாமும் நுகர்ந்து இந்த வாழ்க்கையில் வரும் இருளை மாய்த்து நம் நல்ல மனதைத் தெளிவாக்குதல் வேண்டும்.

அந்தத் தெளிவாக்கும் நிலைகளை உங்களைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

பாட நூல்களில் நாம் படித்துப் பதிவாக்கிய பின் மீண்டும் அதை நினைவு கொள்ளும் போது இன்னென்ன காரியங்களை இன்னென்ன மாதிரியாகச் செய்ய வேண்டும் என்று அதன் வழியில் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்துகின்றோம். சீராக வாழ நாம் வழிவகுக்கின்றோம். அந்தப் பாட நிலைகள் கொண்டு நாம் அறிந்து கொள்கின்றோம்.

அதே போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் உணர்வுகளை
1.உங்கள் செவி மூலம் உணர்வை உந்தச் செய்து
2.கண் வழி ஈர்க்கச் செய்து
3.மூக்கு வழி நுகரச் செய்து
4.உயிரின் அறிவு கொண்டு உடலில் பரவச் செய்து
5.உங்கள் இரத்த நாளங்களிலே கலக்கச் செய்கின்றோம்.
6.குருநாதர் கொடுக்கும் உபாயத்தைக் கையாண்டு இயற்கையின் உண்மையின் நிலைகளை நீங்களும் நுகர்ந்தறிய முடியும்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வுகளை மாற்றி இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால் உடலை விட்டு அகன்றால் நாம் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய இது உதவும்.