ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2018

தர்மன் சூதில் சிக்குகின்றான்… கண்ணனோ போரில் காக்கின்றான்…!” – விளக்கம்


தர்மன் தனக்குள் வலிமையாகி ஆட்சி புரிந்தாலும் “சூது…” என்ற நிலையில் சிக்கப்பட்டுச் சூட்சமத்தில் சிக்குகின்றான். தன் குடும்பத்தின் பாரம்பரியத்தையும் இழந்து விடுகின்றான்.

ஒருவர் நம்மிடம் வந்து ஆசை வார்த்தைகளைப் பேசுகின்றார். அந்த ஆசையை நமக்குள் சேர்த்துக் கொண்ட பின் என்ன செய்கின்றோம்…?

1.உங்களுக்கு அது வருகின்றது… இது வருகின்றது… அது கிடைக்கும்… இது கிடைக்கும்…! என்று ஆசையைக் காட்டியபின்
2..அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளை அறியாது
3.அந்த ஆசையில் நாம் சிக்கப்பட்டு
4.எத்தனை ஏமாளித்தனமான நிலைகளில் இருக்கின்றோம் என்று தெரிந்து கொள்ளலாம்.

அதனால்தான் இங்கே சூதின் தன்மை வரப்படும்போது உண்மையின் உணர்த்தும் அந்த உணர்வின் தன்மையை அறியாது (திரௌபதையை) அங்கே அவமதிக்கின்றோம் என்று காட்டுகின்றனர்.

புறக் கண்ணால் பார்த்தாலும் அகக் கண்ணால் நுகரும் உணர்வுகள் நமக்குள் உணர்ச்சிகளைக் காட்டினாலும்
1.ஆசையின் நிமித்தம் நாம் சென்று அவர் சொல்லும் வழிகளில் முழுவதும் சென்ற பின்
2.கடைசியில் சிக்கலான பிற்பாடுதான் “ஏமாந்துவிட்டோம்…!” என்று நாம் உணர முடிகின்றது.

குடும்பத்தில் ஆண்களானாலும் பெண்களானாலும் தனது வாலிபப் பருவம் வரும்போது அது ஒரு இச்சைக்கு இணங்கி விட்டால் அந்த ஆசையின் உணர்வால் இயக்கப்படுகின்றது.

பின் இந்த உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்ட பின் அந்த இச்சையே இயங்கத் தொடங்கிவிடுகின்றது. தீமையின் விளைவுகளைப் பற்றிச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.

ஆகவே இங்கே மகாபாரதப் போர் நடக்கின்றது. நல்ல வழியைக் காட்டும் தாய் தந்தையரை மதிக்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது. அன்னை தந்தையின் உண்மையின் உணர்வை அறிய முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

இதே போன்று தான் நட்பின் தன்மை கொண்டு தொழில் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணினாலும் ஒருவர் ஆசை வார்த்தையைக் காட்டிய பின் சூதாட்டத்தில் தாயக்கட்டையைப் போட்டு தோற்றுவிடுவது போல் சம்பாரித்த பணத்தை எல்லாம் ஏமாற்றுபவரிடம் கொடுத்துவிட்டு எல்லாவற்றையும் இழந்து விடுகின்றார்கள்.

நல்ல குணங்கள் இருப்பினும் ஆசையின் உணர்வால் சிக்குண்டு செய்வதறியாது ஏமாற்றுபவரிடம் சிக்கப்பட்டு நல் ஒழுக்கங்களைச் சீர் கெடச் செய்து இப்படி மகாபாரதப் போராக வாழக்கையை வெறுக்கச் செய்கின்றது என்ற நிலையை அங்கே காட்டப்படுகின்றது.

மகாபாரதப் போரில் இன்னொன்றும் காட்டுவார்கள். அதாவது “தனுர் வேதம்” என்று வரப்படும் போது மந்திர தந்திரங்களால் பிறருடைய நிலைகளை மயக்கி அவர்களை அடிமையாக்க வேண்டும் என்று காட்டுகின்றனர்.

தன் எதிரிகளை வீழ்த்த தனுர் வேதம் தேவை என்று அதற்கென்று குரு தன்மையைக் கூட்டுகின்றனர்.

தனுர் வேதம் என்பது ஒரு உடலுக்குள் பிறிதொரு உணர்வினைச் சேர்த்து அந்த உடலின் உணர்வினை மாற்றப்பட்டு அவன் இறந்த பின் அந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வது.

உதாரணமாக ஒரு நோயாளி இருக்கிறார் என்றால் அவரிடத்தில் அதிகமாக நாம் பழகுகின்றோம் நேசிக்கின்றோம் என்றால் அந்த உணர்வின் வலிமை பெற்ற பின் அந்த உடலை விட்டு அவர் இறந்தால் அந்த ஆன்மா நமக்குள் வந்து விடுகின்றது. நமக்குள் வந்து அதன் வழியே நம்மையும் இயக்கும்.

இதே போலத் தான் தனுர் வேதம் என்ற நிலையில் செயற்கையில் மந்திரம் கொண்டு ஒரு உடலுக்குள் ஊடுருவச் செய்து அது சிந்தனையை சிதையச் செய்வார்கள்.

மகாபாரதப் போரில் சூது என்ற நிலைகள் இருந்தாலும்
1.கண்ணன் அது தன்னை எதுவும் தாக்கிடாது
2.தேரை அழுத்திக் கீழே தணித்து விடுகின்றான்.
3.அவன் உத்தரவு இல்லாது எதுவும் செய்யாது என்று காட்டுகின்றார்கள்.

கண்கள் உணர்வு கொண்டு புறக் கண்ணால் பார்த்தாலும் மாயா உணர்வு கொண்ட நிலைகள் வருவதை
1.கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன்கள்
2.அதனை எப்படிக் காக்க உதவுகிறது…? என்ற நிலையை அங்கே காட்டுகின்றனர்.

அகண்ட அண்டத்தின் உணர்வுகள் ஒரு பிரபஞ்சத்திற்குள் வந்து தாவர இனங்களாக வளர்ந்து ஒரு தாவர இனத்தின் தன்மையை ஒரு உயிரணு சாப்பிடும் என்றால் அடுத்த தாவர இனத்தை அது நுகர்வதில்லை.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ஒன்று சேர்த்து வாழும் நிலையில்
1.தீமைகளை அகற்றிடும் உணர்வு பெற்ற மனிதன்
2.ஒவ்வொரு போர் முறைகளிலும் வென்று வென்று
3.எல்லாவற்றையும் வென்றிடும் மனித உடலைப் பெற்றான்.
4.ஆனால் மனிதனான பின் ஆசையின் தன்மை கொண்டு சூதுகளில் சிக்கி விடுகின்றோம்
5.அதாவது உண்மையின் உணர்வை நமக்கு உணர்த்தி நல்ல உணர்வை நமக்குள் வளர்த்திடும்
6.அந்தத் திரௌபதையை நாம் அவமதிக்கின்றோம்.

ஒருத்திக்கு ஐந்து கணவன் என்றால் என்ன…? புலன் அறிவு ஐந்து அது எதன் எதன் உணர்வுகளைக் கவருகின்றதோ அதன் உணர்வுக்கொப்ப உணர்ச்சிகளை நமக்குள் தெரியப்படுத்திக் காட்டும். அது தான் திரௌபதை.

கண்கள் எப்படிப் புற நிலையில் காட்டுகின்றதோ அக நிலையைக் காட்டுவதைக் கண்ணனின் சகோதரி “திரௌபதை” என்று காட்டுகின்றனர்.

நமக்குள் தீமையின் உணர்வுகளைத் தெளிவாக்கி நாம் எப்படி வாழ வேண்டும் என்ற நிலையைக் காட்டி… உயிரான உணர்வின் தன்மை கொண்டு நாம் எப்படி வாழ வேண்டும்/..? என்ற நிலையைச் சித்தரிக்கும் நிலை தான் மகாபாரதம்.

உயிரணு தோன்றி பல கோடிச் சரீரங்களைப் பெற்று மனிதனாக வந்த நிலையை சிவ தனுசு என்றும் தீமைகளை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றுவதை விஷ்ணு தனுசு என்றும் இராமயாணத்தில் காட்டுகின்றனர்.

இருளை அடக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தான் விஷ்ணு தனுசு என்று அன்று காரணப் பெயர் வைத்தார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வாழ்க்கையில் நம்மை அறியாமல் மாயமாக இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்...! என்பதையே நம்முடைய சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.