ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 21, 2018

எனக்கும் அவர்களுக்கும் (பிறர்) சம்பந்தமே இல்லை என்று சொல்வோம் – ஆனால் யாரும் நாம் பிரிந்து இல்லை...! தெரிந்து கொள்ளுங்கள்...!


செல்ஃபோன்களில் என்ன செய்கிறார்கள்…? எல்லாவற்றையும் ரெகார்டு (பதிவு) செய்து விடுகின்றார்கள். ஒரு நம்பர் போட்டவுடனே
1.அவர் இன்னார் பேசுகிறார் என்று இங்கே தெரிகின்றது.
2.வேண்டாதவராக இருந்தால் செல்லை ஆஃப் (OFF) செய்து விடுகின்றார்கள்.

நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடுகின்றீர்கள். சண்டை போட்டவுடனே துரோகம் செய்தான் பாவி என்று நினைக்கின்றீர்கள். உடனே என்ன செய்யும்…? புரை ஓடும்.

அந்தப் புரை ஓடப்போகும் போது அப்போது அதற்குக் காரணம் இன்னார்.. இன்னார் தான்...! என்று உடனே ஞாபகம் வருகின்றது. “இன்னார் தான் நம்மைப் பேசினார்...!” என்று உடனே அங்கே அது அறிவிப்பு செய்யும். வேண்டுமென்றால் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

அதே சமயத்தில் நண்பருடன் நிறைய நேரம் பழகுகின்றீர்கள். மகராசன் நல்ல முறையில் உதவி செய்தானே..! என்று சொன்னவுடனே விக்கல் ஆகின்றது. அந்த விக்கல் ஆனபின் என்ன செய்கின்றோம்?

சரி்... இன்னார் தான் இப்பொழுது நம்மை நினைத்திருப்பார் என்று எண்ணுகின்றோம். உடனே அந்த விக்கல் நின்று போகும். “இன்னார் தான் நம்மை நினைக்கிறார்...!” என்று அங்கிருந்தே அறிந்து கொள்ளலாம். வேண்டுமென்றால் இதையும் அனுபவத்தில் பார்க்கலாம்.

அதே சமயத்தில் (தாய்) பிள்ளை மேல் ரொம்பவும் பாசமாக இருப்பார்கள். என் பிள்ளை படிக்கப் போனது... என்ன ஆனதோ...? ஏதாச்சோ...? என்று சொல்லி இந்த வேதனையோட எண்ணினால் அந்தப் பிள்ளை நடந்து போகும் போது கவனக்குறைவாகி மேடு பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து அடிபட்டுவிடும்.

செய்தி கேட்டதும் “ஐய்யய்யோ... நான் நினைத்தேனே... இந்த மாதிரி ஆகிப் போனதே...!”  என்று அந்தத் தாய் புலம்பும்.

என்ன…..? முன்னக்கூடியே அந்தத் தாய்க்குத் தெரிந்ததாம்…! எதை…...?

என் பிள்ளையினுடைய ஞாபகம் வந்தது. அப்பொழுது என்னமோ ஆகப் போகிறது என்கிற வகையில் தெரிந்து கொண்டேன். அதே மாதிரி பிள்ளை கீழே விழுந்து விட்டது என்று அந்தத் தாய் சொல்லும். ஆனால்
1.என்ன ஆகுமோ... என்னமோ ஆகப் போகிறது...! என்று எண்ணிய
2.அந்த எண்ணம் தான் அங்கே பிள்ளையை இயக்கியது என்று
3.அந்தத் தாய்க்குத் தெரியாது.

அதே மாதிரித் தான் அந்தப் பிள்ளைக்கும் எண்ணம் வரும். அம்மா திட்டியது எல்லாம் பாசத்துடன் சேர்த்து அந்த நினைவு வரும். அந்த உணர்வை நினைவாக நினைக்கும் பொழுது பிள்ளை இங்கே பள்ளம் தெரியாமல் கீழே விழுந்துவிடும். ஆகவே
1.நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு தான் இருக்கின்றோம்.
2.நாம் யாரும் பிரிந்து வாழவில்லை.
3.ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் அலைகளாக இயக்கிக் கொண்டேயிருக்கின்றது.

ரோட்டில் ஒரு பிச்சைக்காரன் போகின்றான். கீழே விழுந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றான். நாம் பார்க்கின்றோம். இரக்கத்துடன் சேர்த்து “அடப் பாவமே இப்படி இருக்கின்றான்...” என்று நமக்குள் பதிவு செய்து விடுகின்றோம்.

அந்தப் பதிவு என்ன செய்யும்...?

ஒரு நேரத்தில் உங்களுக்குக் கஷ்டம் வரப்படும் போது அவன் நினைவு வரும். அந்த நினைவு வரப்போகும் போது அவன் பட்ட வேதனை இங்கே நமக்கும் வருகிறது. அந்த வேதனைபட்ட உணர்வுடன் நீங்கள் போய் ஒரு சரக்கை வாங்கினால் சரியாகப் பார்க்க முடியாது.

பிச்சைக்காரன் மேல் பரிதாபப்பட்டு அவனுக்கு உதவி செய்கிறீர்கள். ஏனென்றால் அவன் என்ன செய்வான்..? ஐயா.. ஐயா.. ஐயா...! என்று சொல்லி விட்டு வேதனைப்பட்டு அவன் கேட்டிருப்பான். காசைக் கொடுத்திருப்போம்.

அதற்கப்புறம் வேலைக்குச் சென்று மேலதிகாரியை ஆபிசில் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள். வேதனையான உணர்வுடன் அங்கே போனவுடனே இதே உணர்வு மேலதிகாரி கேட்டவுடனே அதற்குச் சரியான பதில் உங்களிடமிருந்து வராது.

சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…! கையில் அழுக்குப் பட்டு விடுகின்றது. கழுவி விடுகிறோம். அதற்கு அப்புறம் தானே மற்ற பொருளை எடுக்கின்றோம்.

இதே மாதிரி நீங்கள் வீட்டை விட்டு எந்த வேலையாக வெளியில் போனாலும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
4.எங்கள் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்.
5.இங்கே உற்பத்தி செய்யக்கூடிய பொருள்கள் நன்றாக இருக்க வேண்டும்.
6.இங்கே வேலை பார்ப்பவர்கள் அனைவரது சொல் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று இவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணர்வு உங்களிடம் முன்னணியில் இருந்தது என்றால் மற்றவர்கள் தவறாக ஏதாவது சொன்னாலும் கூட அதை இது தடைப்படுத்தும்.

ஆனால் இவ்வாறு எண்ணித் தூய்மைப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்...? நீங்கள் நடந்து வரப்போகும் போது ரோட்டில் ஒருவன் குறும்புத்தனம் செய்து இருப்பான். உற்றுப் பார்த்தவுடன் அந்த உணர்வு உள்ளுக்குள் வந்துவிடும்.

இந்த உணர்வுடன் வேலை செய்தால் தவறாகச் செய்யச் செய்து உங்களைக் குற்றவாளி ஆக்கும். ஒரு இயந்திரத்தை இயக்குவீர்கள். சிந்தனை இல்லாது தவறு வந்து விடும்.

தையல் கடையிலேயே துணிகளைத் தைக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மிஷினில் போய் தைத்துப் பாருங்கள். வெறுப்பான உணர்வு வந்தவுடனே கோணலாகப் போகும். அல்லது நீங்கள் துணிகளை எடுத்துக் கத்திரித்துப் பாருங்கள். கோணல் மானலாகப் போகும்.

ஆனால் நல்ல மனதுடன் சாதாரணமாக இருந்து பாருங்கள். நன்றாகக் கத்தரிக்கலாம். அப்பொழுது எது நம்மை இயக்குகின்றது...?

சந்தர்ப்பவசத்தால் நாம் நுகர்ந்த அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. உயிரிலே பட்டால் உணர்ச்சியாக மாறுகின்றது. அந்த உணர்ச்சிகள் தான் நம்மைச் செயலாக்குகின்றது. இதைப் போன்ற நிலைகளெல்லாம் இருந்து நாம் தப்ப வேண்டுமல்லவா...?

அதிகாலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்தவுடன் அப்படியே உட்கார்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை எடுக்க வேண்டும். எடுத்து நம் உடல் முழுவதும் பரப்ப வேண்டும்.

1.நாம் பார்க்கும் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
2.அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் கஷ்டங்கள் நிவர்த்தி ஆக வேண்டும்.
4.அவர்கள் குடும்பம் ஒன்றுபட்டு வர வேண்டும்.
5.எங்கள் குழந்தைகள் நல்ல குணத்துடன் வளர வேண்டும்.
6.தெளிந்த நிலையில் வர வேண்டும் படிப்பில் உயர வேண்டும் என்று இதையே தியானிக்க வேண்டும்.

நாம் எடுக்கும் இந்த உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருகும் பொழுது பிறர் உணர்வுகள் நம்மை இயக்காது. அதே சமயத்தில் நம் உணர்வுகள் அவர்களுக்குள் சென்று அவரை நல் வழியில் அழைத்துச் செல்லும்.