ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 18, 2024

நாம் பழக வேண்டிய முக்கியமான பயிற்சி

நாம் பழக வேண்டிய முக்கியமான பயிற்சி

 

இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகிய அனைத்திலும் உள்ள நஞ்சினை அடக்கி ஆட்சி புரிந்து ஒளியாக இருக்கின்றது துருவ நட்சத்திரம். இதை உணர்த்துவதற்குத் தான் விநாயகர் அருகே “அரச மரத்தை” வைத்தார்கள் ஞானிகள்.
1.இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை வைத்து எப்படி உயர்ந்த சக்திகளை எடுக்க வேண்டும்…? என்பதை
2.அங்கே அரச மரத்தை வைத்துக் காட்டுகின்றார்கள்.

அதிகாலையில் நாம் குளித்து உடல் அழுக்கை நீக்கிய பின் விநாயகர் சிலையை உற்று நோக்கி… இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று நஞ்சினை ஒடுக்கி ஒளியின் கதிராக மாற்றி… ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உணர்வின் எண்ணங்களை தனக்குள் கவரும்படி செய்தார்கள் ஞானிகள். இது துவைதம்…!

பிறப்பின் உண்மையின் தன்மையை நமக்குள் தெளிவாக்குவதற்காகச் சிலையாக வடித்து வைத்தார்கள் ஞானிகள். நாம் பிறப்பில் மனிதனாக எப்படி வந்தோம் என்று அறிவதற்காக…!

அங்கே சிலையில் ஒன்றுமில்லை…!

கண் கொண்டு சிலையை உற்றுப் பார்க்கும்படி செய்து காவியத்தின் தன்மை கருத்துடன் நமக்குள் கூட்டப்பட்டு
1.அந்தக் கருத்தினை எண்ணித் “தன்னை அறிதல்” என்ற நிலையும்
2.எந்த உணர்வினை தனக்குள் அகஸ்தியன் எடுத்துத் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரம் ஆனானோ
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அப்போது பதிவாக்குதல் வேண்டும்.

பதிவான எண்ணம் கொண்டு தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் எடுக்க முடியும். அதன் வழியில் எண்ணும் பொழுது நம் கண்ணின் நினைவாற்றல் விண்ணுக்குச் செல்லுகின்றது.

1.அந்த உணர்வினைத் தனக்குள் பதிவாக்கி
2.இந்த எண்ணங்கள் கொண்டு மீண்டும் கண்ணுக்கே நினைவைச் செலுத்தி
3.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து விண்ணிலிருந்து வரும்
4.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்மைப் பெறும்படி செய்திருக்கின்றார்கள் விநாயகர் தத்துவத்தில்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! அது எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி இந்த அலைகளை “உடலுக்குள் நாம் பரப்புதல் வேண்டும்…”

காலையிலிருந்து இரவு வரையிலும் சந்தர்ப்பவசத்தால் எத்தனையோ துன்பங்களைக் கேட்டறிந்துள்ளோம்… துயரப்படுபவரைப் பார்த்துள்ளோம். இந்த உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவிலே இருக்கின்றது.

அந்த உணர்வுகளைக் கவரப்படும் பொழுது ஆன்மாவாகச் சேமித்து வைக்கின்றது. சேமித்த உணர்வுக்கொப்ப
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எந்த அளவிற்கு உந்துகின்றதோ அந்த அளவிற்கு நாம் சுவாசிக்கின்றோம்.
2.சுவாசிக்கும் போது உணர்வுக்குத் தக்க “அந்த எண்ணங்கள்” வரும்.

இன்று ஒரு மனிதன் ஒரே எண்ணத்தில் இருக்க வேண்டும் என்றால் முடியவே முடியாது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எந்தெந்தக் குணத்தால் அது உருவானதோ அதற்கு இரை தேட…
1.எந்த மனித உடலிலிருந்து வந்ததோ…
2.சூரியனின் காந்த சக்தி அதை அலையாக மாற்றி வைத்திருப்பதை நுகரப்படும் பொழுது
3.உயிரிலே மோதி உணர்ச்சிகள் தூண்டும்… அப்போது உணர்ச்சிக்கொப்ப அந்த அணுக்கள் அதை இரையாக எடுக்கின்றது
4.எடுத்து நமக்குள் உள் செல்லும் உணர்வினை அது உணவாக எடுத்து வளர்கின்றது.

ஆகவே அத்தகைய அணுக்கள் இப்படி உணவாக எடுக்கும் நிலையிலிருந்து… நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு
1.“எதை உணவாகக் கொடுக்க வேண்டும்…?” என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
2.அந்த அருள் ஞானியால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவத்தில்.

அதாவது… புறத்திலிருந்து ஆன்மாவாக எத்தனையோ நிலைகள் மாறி வருவதை… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி உயிருடன் ஒன்றி நினைவினை அடிக்கடி அடிக்கடி உடலுக்குள் பாய்ச்சுதல் வேண்டும்.

இந்த உணர்வுகள் வலுப்பெறும் போது
1.தீய அணுக்களுக்கு வரும் அந்த நிலை அது அடைபட்டு… இழுக்கும் சக்தி குறைகின்றது… தீமையான எண்ணங்கள் வராதபடி விலக்கி விடுகின்றது.
2.அவசியம் இந்தப் பயிற்சியை நாம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

சாதாரண பாமர மக்களும் இதை பழக்கப்படுத்துவதற்குத் தான் திரும்பும் பக்கமெல்லாம் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

நாம் உணர்ந்து கொண்டோமா…?